Tuesday, May 12, 2015

திருநீலகண்ட (குயவனார்) நாயனார்

சிதம்பரத்திலே, குயவர் குலத்திலே, பொய்சொல்லல் சிறிது மின்றித் தருமநெறியிலே வாழ்கின்றவரும், இல்லறத்திலே நிற்பவரும், சிவபத்தி அடியார்பத்திகளிலே சிறந்தவருமாகிய தொண்டர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய குலத்துக்கு ஏற்ப மட்கலங்களை வனைந்து விற்றுச் சீவனஞ் செய்தும், திருவோடுகளைச் சிவனடியார்களுக்குக் கொடுத்தும் வந்தார். அவர் "ஆதிகாலத்திலே பரமசிவன் திருப்பாற்கடலினின்றும் எழுந்த ஆலகால விஷத்தை உலகம் உய்யும்பொருட்டு உண்ட பொழுது, அவருடைய கண்டமானது. அவர் தம்மை அடைந்தவர்களுக்கு வரும் இடையூறுகளை நீக்கியருளுவார் என்பதை நாமெல்லாம் அறிந்துகொள்ளும்படி ஓரறிகுறியாய் விளங்கும் பொருட்டு, அதனை உள்ளே புகவொட்டாமல் தடுத்து தானே தரித்துக்கொண்டது" என்று நினைந்து, அக்கடவுளுடைய கண்டத்தைத் திருநீலகண்டம் என்று எப்பொழுதும் சிறப்பித்துச் சொல்லுவார். அதனால் அவருக்குத் திருநீலகண்டநாயனார் என்னும் பெயர் உண்டாயிற்று.
ஒருநாள் அவர் அவ்வூரிலே ஒருவேசியிடத்துச் சென்று வீட்டுக்குத் திரும்ப; கற்பிலே சிறந்த அவர் மனைவியார் அதை அறிந்து, அதைக்குறித்துத் தம்முடைய மனசிலே அதை அறிந்து, அதைக்குறித்துத் தம்முடைய மனசிலே தோன்றிய கோபத்தை அடக்கிக்கொண்டு, இல்வாழ்க்கைக்குரிய மற்றப்பணிகளெல்லாஞ் செய்தும், புணர்ச்சிக்குமாத்திரம் இசையாதவரானார். நாயகர் தம்முடைய மனைவியார் கொண்ட புலவியைத் தீர்க்கும்பொருட்டு அவர் சமீபத்திலே போய், வேண்டிய இரப்புரைகளைச் சொல்லி, அவரைத் தீண்டுபடி சென்றார். அப்பொழுது மனைவியார் "நீர் எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம்" என்று ஆணையிட்டார். அதைக் கேட்ட நாயகர், பரமசிவனுடைய திருநீலகண்டத்திலே தாம் வைத்த பத்தி குன்றாவண்ணம், அம்மனைவியாரைத் தொடாமல் நீங்கி, இவர் 'எம்மை' என்று பன்மையாகச் சொன்னதனால் இவரைமாத்திரமன்றி மற்றப் பெண்களையும் நான் மனசினால் நினைத்தலுஞ்செய்யேன்" என்று உறுதிகொண்டார். அவர்கள் இருவரும் தங்கள் வீட்டினின்றும் புறப்படாதொழிந்து, அவ்வீட்டிலே தானே இருந்து, இல்லறத்திற்குரிய பிறசெய்கைகளெல்லாம் செய்து கொண்டு, புணர்ச்சியின்மையை பிறரறியாதபடி வாழ்ந்தார்கள். இளமைப்பருவத்தையுடைய இருவரும் அவ்வாணையைப் பேணிக் கொண்டு, பலவருஷங்கள் செல்ல, யெளவனம் நீங்கி, வயோதிகர்களாகி, வருத்தமுற்றார்கள். உற்றும் சிவபத்தி சிறிதும் குறையாதவர்களாகி இருந்தார்கள். இப்படியிருக்கும் காலத்திலே, காருண்ணிய ஸ்வரூபியாகிய பரமசிவன் அவ்வடியாருடைய மகிமையை உலகத்தவர்கள் ஐயந்திரிபற அறிந்து அவருடைய தொண்டை அனுசரித்து உய்யும்பொருட்டு, ஒரு சிவயோகிவடிவங் கொண்டு, அவ்வடியார் வீட்டுக்குச் சென்றார். அவ்வடியார் அவரைக் கண்டு எதிர் கொண்டு வீட்டினுள்ளே அழைத்துக் கொண்டுபோய், ஆசனத்தில் இருத்தி, அவருக்கு விதிப்படி அன்பினோடு பூசைசெய்து, நமஸ்கரித்து எழுந்து அஞ்சலி செய்து நின்று, "சுவாமீ! அடியேன் தேவரீருக்குச் செய்ய வேண்டிய குற்றேவல் யாது" என்று வினாவ; சிவயோகியார் "இந்த திருவோட்டை வைத்திருந்து, நாம் கேட்கும்போது தா. இந்த் ஓடு தனக்கு வேறொப்பில்லாதது; தன்னிடத்திலே சேர்ந்த பொருள்களெல்லாவற்றையும் சுத்தி செய்வது; பொன்னிலும் இரத்தினத்திலும் பார்க்கக் காப்பாற்றப்படத்தக்கது. இப்படிப்பட்ட மேன்மையுள்ளதாகிய இந்த ஓட்டை நீ வாங்கி வைத்திரு" என்று அருளிச் செய்தார். அதைக் கேட்ட அடியவர் அவரை வந்தனஞ் செய்து, அவ்வோட்டை வாங்கிக்கொண்டு, வீட்டிலே ஒரு பக்கத்தில் சேமித்து வைத்துவிட்டு, திரும்பி வந்து, போம்படி எழுந்த சிவயோகியாருக்குப் பின் சிறிது தூரஞ்சென்று, அவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார். நெடுநாட்கள் கழிந்தபின், ஒருநாள் பரமசிவன் தாம் வைக்கக் கொடுத்த திருவோட்டை வைக்கப்பட்ட இடத்தில் இல்லா தொழியும்படி செய்து, அவ்வடியாருடைய உண்மைநிலையைப் பிறர்க்குப் புலப்படுத்தும்பொருட்டு முன் போலச் சிவயோகி வடிவங்கொண்டு, அவர் வீட்டுக்கு எழுந்தருளினார். அவர் சிவயோகியாரை முன்போல வழிபட்டு, "சுவாமி! தேவரீர் இவ்வீட்டிற்கு எழுந்தருளிவந்தது அடியேங்கள் பூர்வசன்மத்திற் செய்த தவத்தினாற் போலும்" என்று விண்ணப்பஞ்செய்து நிற்க; சிவயோகியார் 'நாம் முன்னாளிலே உன்னிடத்திலே தந்த திருவோட்டை இப்பொழுது தா" என்றார். அடியவர் அதைக் கொண்டுவந்து கொடுக்கும்பொருட்டு உள்ளே போய்ப் பார்த்துக் காணாமையாலே திகைத்து, அங்கு நின்றவர்களிடத்திலே கேட்டும் பிறவிடங்களிலே தேடியும் காணாதவராகி, சிவயோகியாருக்கு உத்தரம் சொல்வதற்கு ஒன்றுமின்றி அங்கே நின்றார். சிவயோகியார் உள்ளே நின்ற அடியார் கேட்கும்படி, "நொடிப் பொழுதில் வருவேன் என்று போன நீ ஏன் இவ்வளவு நேரம் தாழ்ந்து நிற்கின்றாய்" என்று கேட்க; அடியவர் வந்து சிவயோகியாரை வணங்கி, "சுவாமி! தேவரீர் தந்த் திருவோட்டை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் காணேன். பழையதாகிய அந்தத் திருவோட்டைப் பார்க்கினும் புதிதாகிய வேறொரு திருவோடு தருவேன். அதை ஏற்றுக்கொண்டு அடியேன் செய்த் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும்" என்று சொல்லிப் பிரார்த்தித்து நின்றார். உடனே சிவயோகியார் அவரைக் கோபித்துப் பார்த்து "நீ யாது சொன்னாய்! நான் வைத்த மண்ணோட்டையேயன்றிப் பொன்னோட்டைத் தந்தாயாயினும் நான் வாங்கேன்; நான் முன்னே உன்னிடத்தில் தந்த ஓட்டையே கொண்டுவா" என்று திருவாய்மலர்ந்தருள, அடியவர் "சுவாமீ! தேவரீர் தந்த ஓட்டைத் தேடியுங் காணேன். வேறே நல்ல ஓடு தருகின்றேன் என்று சொல்ல; அதற்கு உடன்படாமல் என்னோட்டையே கொண்டுவா என்று சொல்லுகிறீர். இந்தச்சொல் என்னறிவுமுழுதையும் ஒழித்துவிட்டது" என்றார். அதற்குச் சிவயோகியார் "நான் உன்னிடத்திலே வைத்த அடைக்கலப் பொருளை நீ கவர்ந்துகொண்டு, பாவத்துக்குச் சிறிதும் அஞ்சாமல், பல பாவங்கள் செய்கின்றாய். சகலரும் அறியும்படி உன்னைத் தப்பவொட்டாமல் மறித்து என்னோட்டை வாங்கிக் கொண்டேயன்றி நான் போகேன்" என்று சொல்ல; அடியவர் "சுவாமீ! தேவரீர் தந்த ஓட்டை நான் கவர்ந்தவனல்லன். அடியேனிடத்தே களவில்லாமையை எப்படித் தெரிவிப்பேன்? சொல்லும்" என்றார். சிவயோகியார் "உன் புத்திரனைக் கையிலே பிடித்துக்கொண்டு குளத்திலே முழுகி, நான் கவரவில்லை என்று சத்தியம்பண்ணித்தா" என்று சொல்ல; அடியவர் "அப்படிச் செய்தற்கு எனக்குப் புத்திரன் இல்லையே! யாது செய்வேன் சொல்லும்" என்றார். சிவயோகியார் உன்மனைவியைக் கைப்பிடித்து முழுகிச் சத்தியம் பண்ணித்தா" என்று சொல்ல; அடியவர் "நானும் என்மனைவியும் எங்களிடத்துண்டாயிருக்கும் ஓர் சபதத்தினாலே ஒருங்கு முழுகுதல் கூடாது. நான் மாத்திரம் குளத்திலே முழுகிச் சத்தியம்பண்ணித் தருகிறேன். வாரும்" என்றார். அதற்குச் சிவயோகியார் "நான்முன்னே தந்த ஓட்டைத் தராமலும், அதைக் கவர்ந்துகொள்ளவில்லையெனின் உன் மனைவியைக் கைப்பிடித்துச் சத்தியஞ்செய்து தராமலும், மனம் வலித்திருக்கின்றாய். தில்லைவாழந்தணர்கள் கூடியிருக்கும் பெரிய சபையிலே இவ்விஷயத்தைக் குறித்துப் பேசப் போகின்றேன்" என்று சொல்லி, அந்தச் சபைக்குப்போக; திருநீலகண்டநாயனாரும் அவருக்குப் பின்னே போனார், சிவயோகியார் அந்தப் பிராமணர்களைப் பார்த்து, "இந்தக் குயவன் தன்னிடத்திலே நான் வைத்திருக்கும்படி கொடுத்த ஓட்டைத் தருகின்றானில்லை. அதனை இழந்ததனாயின், தன் மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியம் பண்ணித் தருகின்றானுமில்லை" என்றார். உடனே பிராமணர்கள் அடியவரை நோக்கி, திருநீலகண்டரே! நடந்த சமாசாரத்தை நீர் சொல்லும்" என்று கேட்க; அவர், "சுவாமிகாள்! இவர் தந்த திருவோடு நான் வைத்த இடத்தினின்றும் மறைந்து போய்விட்டது. நான் தேடிப் பார்த்துங் காணேன். இதுவே நடந்த சமாசாரம்" என்றார். அதற்குப் பிராமணர்கள் "இவர் தந்த ஓட்டை நீர் இழந்தீராகில், இவர் கேள்விப்படி உம்முடைய மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியஞ்செய்து கொடுத்தலே நீதி" என்றார்கள். அடியவர் அதைக் கேட்டு, தாம் அம்மனைவியாரைத் தீண்டாதிருத்தலைக்குறித்துப் பேசமாட்டாதவராகி, "தகுந்தபடி குளத்திலே முழுகிச் சத்தியஞ்செய்து தருகிறேன் வாரும்" என்று சொல்லி, சிவயோகியாரோடு தம்முடைய வீட்டுக்குப் போய், மனைவியாரையும் அழைத்துக்கொண்டு, திருப்புலீச்சரத்துக்கு முன்னிருக்கிற திருக்குளத்திலே போய், ஒரு மூங்கிற்றண்டை ஒருபுறத்திலே மனைவியார் பிடிக்க, மற்றப் புறத்திலே தாம் பிடித்துக்கொண்டு, இறங்கினார். அதைக்கண்ட சிவயோகியார் "உன்மனைவியைக் கைப்பிடித்துக்கொண்டு மூழ்கு" என்று சொல்ல; திருநீலகண்டநாயனார் அப்படிச் செய்யக் கூடாமையை உலகத்தார் அறியும்படி, முன்னாளீலே தாஞ்செய்த வேசிகமனமும் அதனாலுண்டாகிய சபதமும் அந்தப் பிரகாரம் தவறாமல் நடந்துவருதலும் சொல்லி, முழுகினார். முழுகிக் கரையிலேறிய திருநீலகண்டநாயனாரும் மனைவியாரும் மூப்புப்பருவம் நீங்கி, இளைமைப்பருவம் உடையவர்களாய்ப் பிரகாசித்தார்கள். "உடனே தேவர்களும் முனிவர்களும் அந்நாயனார்மீது ஆகாயத்தினின்றும் புஷ்பமாரி பொழிந்து, அவரது பெருமையை எடுத்துத் துதித்தார்கள். அவ்வதிசயத்தைக் கண்ட சமஸ்தரும் அங்கு நின்ற சிவயோகியாரைக் காணாதவர்களாய், மயங்கி நின்றார்கள். சிவபெருமான் பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருளினார். அப்பொழுது திருநீலகண்டநாயனாரும் மனைவியாரும் பூமியிலே விழுந்து அவரை நமஸ்கரித்து, எழுந்து ஸ்தோத்திரஞ் செய்து கொண்டு நின்றார்கள். சிவபிரான் அவர்களை நோக்கி, "ஐம்புலன்களை வென்றதனாலே மேன்மை அடைந்த அன்பர்களே! எக்காலத்திலும் இவ்விளமை நீங்காமல் நம்மிடத்தில் இருங்கள்" என்று சொல்லி மறைந்தருளினார். பத்திவலிமையையுடைய திருநீலகண்டநாயனாரும் மனைவியாரும் யாவராலும் செய்தற்கரிய பெருஞ்செய்கையைச் செய்து, சிவலோகத்தை அடைந்து, பேரின்பத்தை அனுபவித்து வாழ்ந்திருந்தார்கள்.

No comments:

Post a Comment