Wednesday, August 26, 2015

தெய்வீக கதைகள் (3) - பொறுமை தந்த பரிசு


ஓர் ஊரில் கட்டிய விநாயகர் கோவிலுக்கு அன்றைய தினம் கும்பாபிஷேகம் நடந்தது. மக்கள் கூட்டம் அலை மோதியது. 
அன்றிரவு அர்ச்சகரும், பணியாட்களும் நடைசாத்தி விட்டுச் சென்றார்கள். 
கோவிலில் பூரண அமைதி நிலவியது.
அப்போது சுவாமி விக்ரகத்தைப் பார்த்து, அர்த்தமண்டபத்தின் தரையில் பதிக்கப்பட்டிருந்த ஒரு கற்பலகை பேச ஆரம்பித்தது. 
""நண்பனே! நீ இப்போது விக்கிரகமாக இருக்கிறாய்! உனக்கு நினைவிருக்கிறதா? ஒரு காலத்தில் நீயும் நானும் ஒரே மலையில்தான் அடுத்தடுத்து இருந்தோம். உனக்கு இப்போது "சுவாமி' என்று வடிவம் கொடுத்து, எல்லாரும் பக்தியோடு பூஜிக்கிறார்கள்; நைவேத்யங்கள், தூப தீபங்கள் சமர்ப்பிக்கிறார்கள். ஆனால், என் நிலையைப் பார்! வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் காலால் மிதித்துவிட்டுச் செல்கிறார்கள்! 
நம் இருவருக்கும் இப்படி ஒரு வேறுபாடு ஏன் இருக்க வேண்டும்? நம்மைப் படைத்த இறைவன் எனக்கு மட்டும் ஏன் இப்படி ஓர வஞ்சனை செய்தான்?'' என்று கேட்டது. 
கற்பலகையின் கேள்விக்கு, விக்ரகம் புன்சிரிப்புடன் பதில் சொல்ல ஆரம்பித்தது:
"நீயும் நானும் ஒரே மலையில் இருந்தது உண்மையே. ஆனால், நீதான் அன்றொரு நாள் நடந்த நிகழ்ச்சிகளை மறந்துவிட்டு இப்படி பேசுகிறாய்! ஒரு நாள் ஸ்தபதி ஒருவர், நாம் இருந்த மலைக்குத் தன் உதவியாளர்களுடன் வந்தார். 
"அவர்கள் நீ இருந்த இடத்திற்குத்தான் முதலில் வந்தார்கள். 
"ஸ்தபதி உன்னைச் சுட்டிக்காட்டி ஒரு உதவியாளரிடம், "இந்தப் பாறையில் சுவாமி விக்ரகம் வடிக்கலாம் என்று நினைக்கிறேன். எனவே இதை நீ உளி வைத்து அடித்துப் பார்!' என்று கூறினார். 
ஸ்தபதியின் உதவியாளரும், உன் மீது உளி வைத்து அடித்தார். அவ்வளவுதான்! உடனே நீ எட்டு துண்டுகளாகச் சிதறிவிட்டாய்! அதைப் பார்த்த ஸ்தபதி, "இந்தப் பாறை ஒரு அடிக்கே பல துண்டுகளாகச் சிதறிவிட்டது. எனவே இது சுவாமி சிலைக்கு ஏற்றதல்ல. சரி... அதோ, சற்று தூரத்தில் அங்கே இருக்கும் அந்தப் பாறைக்கு நாம் சென்று பார்க்கலாம்!' என்று, என்னைச் சுட்டிக்காட்டி கூறினார். 
பிறகு அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். 
ஸ்தபதி என்னைச் சுட்டிக்காட்டி, தன் மற்றொரு உதவியாளரிடம், "நீ இந்தப் பாறையை உளியால் அடித்துப் பார்!' என்று கூறினார். 
அவரும் அடித்தார் அப்பப்பா... என்ன அடி அது! அந்த அடியை அப்போது நான் பொறுத்துக் கொண்டேன். 
இதைப் பார்த்த ஸ்தபதி மற்ற உதவியாளர்களிடமும், "நீங்களும் இந்தப் பாறை சுவாமி விக்கிரகம் வடிப்பதற்கு ஏற்றதுதானா என்று அடித்து பாருங்கள்' என்றார். அவர்களும் அடித்தார்கள். 
அவர்கள் அடித்த அத்தனை அடிகளையும் நான் பொறுமையுடன் தாங்கிக்கொண்டேன். அவர்கள் மகிழ்ச்சியடைந்து, "இந்தப் பாறைதான் விக்ரகம் செய்வதற்கு ஏற்றது!' என்று முடிவு செய்தார்கள்.
பிறகு உன்னைச் சுட்டிக்காட்டி, "இந்தப் பாறையையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். இது கோயிலில் எதற்காவது உதவும்' என்றார்கள்.
என்னை மலையிலிருந்து வெட்டி எடுத்து வந்தார்கள். என் உடலில் எல்லா இடங்களிலும் உளி வைத்து சரமாரியாக அடித்தார்கள். ஓர் 
ஊசிமுனை அளவுகூட பாக்கி வைக்காமல், என் உடலை செதுக்கிக் கொண்டே இருந்தார்கள். 
அவ்விதம் செய்து விநாயகர் விக்ரகத்திற்குரிய கால்கள், கைகள், தலை முதலியவற்றை என் மீது செதுக்கி முடித்தார்கள். அந்தத் துன்பங்களை நான் சகித்துக்கொண்டிருந்தேன். அதனால் இன்று என்னை விநாயகராக வழிபாட்டில் வைத்துப் பூஜிக்கிறார்கள். ஆனால், நீயோ அவர்கள் அடித்த ஒரே ஓர் அடியைக்கூட பொறுமையுடன் தாங்கிக்கொள்ளாமல் சிதறிப் போனாய். அதனால் அவர்கள் உன்னைக் தரைதளத்தில் பதித்தார்கள். இந்த உன் நிலைக்கு யார் காரணம்?'' என்று கூறியது. 
இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன?
வாழ்க்கையில் மனிதன் மேற்கொள்ளும் உழைப்பு, முயற்சி, சரியான சிந்தனை, துன்பங்களை ஏற்றுக் கொள்ளுதல், பொறுமை போன்றவை ஒருவனை உயர்ந்த நிலைக்கு உயர்த்துகின்றன. இந்தப் பண்புகளை பின்பற்றாதவர்கள் உயர்நிலையை அடைவதில்லை. 
இந்த உண்மை, ஆன்மிக வாழ்க்கைக்கும் பொருந்தும். 
ஆன்மிக வாழ்க்கையில் ஞானம் பெறுவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வதற்குரிய ஞானம் எல்லாரிடமும் இருக்கிறது. ஆனால், அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளாதவர்கள் சராசரி மனிதர்களாகவே இருக்க நேரிடும்.
"ஆன்மிக முதிர்ச்சி பெற வேண்டும், இந்தப் பிறவியிலேயே முக்தி பெற வேண்டும்' என்று விரும்புபவர்கள், விக்ரகம் ஆவதற்குப் பாறை ஏற்றுக்கொண்ட துன்பங்களைப் போன்று, இறைவன் திருவடிகளில் மனதை ஒருமுகப்படுத்தி நிலைத்திருக்கிறார்கள். அற்ப சுகங்களுக்கு அவர்கள் அடிமையாவதில்லை. 
மாறாக, அதர்ம வழியில் பேராசை காரணமாகச் செல்வத்தையும் செல்வாக்கையும் அடைந்தே தீர வேண்டும் என்று ஓடிக்கொண்டிருப்பவர்கள், ஆன்மிகம் தொடர்புடைய எந்தத் தியாகத்தையும் துன்பத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. 
மாணவர்களில் சிலர் பாடங்களை உரிய நேரத்தில் கற்று முடிக்கிறார்கள். 
இவர்கள் ஏற்றுக்கொள்ளும் சிரமம், ஒரு விதத்தில் சுவாமி விக்ரகம் ஏற்றுக்கொண்ட துன்பம் போன்றது. இவ்வாறு அல்லாமல், கல்வி கற்கும் காலத்தை வீண் கேளிக்கைகளில் செலவழித்து சோம்பியிருக்கும் மாணவர்களும் உண்டு. இவர்களின் நிலை போகிறவர்கள், 
வருகிறவர்கள் காலில் மிதிபடும் கற்பலகை போன்றது. 
வாழ்க்கையில் துன்பங்களையும், சிரமங்களையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்கள்தான், உன்னதங்களை எட்ட முடியும்.
துன்பங்களைத் தவிர்ப்பவர்கள்- பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பவர்கள்- சிறு சிறு செயல்களைச் செய்து முடிப்பதற்கும் 
முணுமுணுப்பவர்கள் - வாழ்க்கையில் முன்னேறாமல் அடித்தட்டில்தான் இருந்தாக வேண்டும். பூமியில் இருப்பதும், வானத்தில் 
பறப்பதும் அவரவர் கையில்தான் இருக்கிறது. 
இன்னும் கேட்போம்...

சுவாமி கமலாத்மானந்தர்

No comments:

Post a Comment