Wednesday, August 26, 2015

காக்கா புடி அர்த்தம் தெரியுமா?

ஒரு மாமரத்தில் அடியில் ஒரு பழம் கிடந்தது. அதைச் சுவைத்துப் பார்த்த ஒரு நரி, "ஆஹா! மாம்பழம் இவ்வளவு தித்திப்பாக இருக்கிறதே!' என்று மகிழ்ந்து, மரத்தை அண்ணாந்து பார்த்தது. நிறைய பழங்கள் பழுத்துத் தொங்கின. நரிக்கு மேலும் சில மாம்பழங்களைச் சுவைத்துப் பார்க்க ஆசை எழுந்தது. 
மரத்தில் ஒரு காகம் அமர்ந்திருந்தது. நரிக்கு அதன் புத்தி வேலை செய்தது. காகத்தைப் புகழ்ந்து பேசினால் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டது. 
காகத்தை பார்த்து, ""தங்கம் போன்று பொன்னிறமாக இருக்கும் அன்புக்காகமே! நல்ல மயிலின் அழகும், குயிலின் குரலும் கொண்டு விளங்குகிறாயே!'' என்று ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியது. 
இதைக்கேட்ட காகம்,"" உத்தமமான குலத்தில் பிறந்திருப்பதால் உனக்கு என் அருமை பெருமை எல்லாம் தெரிந்திருக்கிறது. பாவம்! நடந்து வந்த களைப்பும், அயர்வும் உன் முகத்தில் தெரிகிறது. வயிறு நிறைய மாம்பழங்களைச் சாப்பிடு,'' என்று கூறி மாம்பழங்களை நரிக்கு கிடைக்கும்படி கொத்திக் கிழே போட்டது.
நரி, ""என்ன நாம் சொல்லி விட்டோம். மயில், குயில் என்று புகழ்ந்து பேசினோம். அவ்வளவுதானே! அதற்கு நம்மை உத்தம குலம், பசிக்கு மாம்பழம் என்று காகம் அமர்க்களப்படுத்தி விட்டதே!'' என்று எண்ணியவாறே மாம்பழங்களைச் சுவைத்து மகிழ்ந்தது. 
இப்படித்தான் "காரியம் ஆக காக்கா பிடிக்கிறார்கள்' சிலர். ஆனால், இதெல்லாம் தற்காலிக வெற்றியைத் தான் தரும். 

No comments:

Post a Comment