Wednesday, August 26, 2015

பக்தர் திலகம்!

இரு சோம்பேறி இளைஞர்கள் ஊரைச் சுற்றி வந்தனர். பசி தீர்க்க திருடுவதென முடிவு எடுத்தனர். முதலில் வீடுகளில் கிடைத்த சாமான்களைத் திருடினர். அவற்றை விற்ற பணம் அன்றைய செலவுக்கே சரியாக இருந்தது. எனவே பெரிதாக கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
ஒருநாள் பண்ணையார் வீட்டில் திருடும் போது, பண்ணையாட்கள் அவர்களை கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களுக்கு "பலே திருடன்' என்னும் பொருள் தரும் விதமாக" ப.தி.' என்று நெற்றியில் பச்சைகுத்தி தெருத்தெருவாய் இழுத்துச் சென்றனர். ஒரு திருடன் அவமானம் தாங்காமல் விஷம் குடித்து இறந்தான். மற்றொருவனுக்கு கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் ப.தி. என்ற எழுத்துக்கள் நிம்மதியைக் கெடுத்தன. 
குற்றவுணர்ச்சியில் வெளியூர் போய்விட்டான். 
அங்குள்ள கோவிலில் உள்ள சிவன் திருவடியில் அமர்ந்து, தான் செய்த திருட்டுகளை எண்ணி வருந்தி கண்ணீர் சிந்தினான். புதிய வாழ்க்கையை தொடங்க முடிவெடுத்தான். உண்மையையும், நேர்மையையும் கடைபிடித்தான். 
அவ்வூர் பெரியவர் ஒருவர் அவனது நெற்றியில் இருக்கும் "ப.தி.' என்ற எழுத்தினைக் கண்டு, அதற்கான காரணம் கேட்டார். திருடன் உள்ளதைச் சொன்னான்.
அவனது மனமாற்றம் கண்டு உருகிய பெரியவர், "நீ ஒரு பக்தர் திலகம். அதையே சுருக்கமாக "ப.தி' என பச்சை குத்த வைத்துள்ளான் அந்த பரமன். எல்லாம் அவன் விளையாட்டு,'' என்றார். 
திருடன் கண்களில் கண்ணீர் கசிந்தது.

No comments:

Post a Comment