Wednesday, August 26, 2015

அறிவுக்கு வயது தடையல்ல!

உத்தாலகர் என்ற மகானிடம் கஹோளர் என்ற சீடன் படித்தார். படிப்பில் கஹோளர் மந்தம். ஆனால், ஒழுக்கசீலர். சீடன் மீது குரு 
நல்லெண்ணம் கொண்டிருந்தார். அதே நேரம், படிப்பில் மந்தமாக இருக்கிறாரே என்ற வருத்தமும் இருந்தது.
உத்தாலகருக்கு சுஜாதா என்ற மகள் இருந்தாள். அறிவில் படுசுட்டியான அவளை, கஹோளனுக்கு மணம் முடித்தால் வாழ்க்கை 
சிறப்பாக இருக்கும் என்று எண்ணி திருமணம் நடத்தினார். சுஜாதா கர்ப்பவதியானாள்.
வயிற்றில் இருந்த குழந்தைக்கு, அத்தனை வேதமும் தெரிய தெய்வம் அருள்பாலித்தது. 
ஒருமுறை, கஹோளர் தவறான உச்சரிப்புடன் மந்திரம் சொன்னார். அதை வயிற்றுக்குள் இருந்த குழந்தை கேட்டது. தந்தை தவறாக மந்திரம் உச்சரிப்பதைச் சகிக்காமல், வயிற்றுக்குள்ளேயே உடலை முறுக்கிக் கொண்டது. அதனால், அஷ்ட கோணலாக ஊனமாகப் பிறந்தது. 
இதனால் "அஷ்டாவக்கிரன்' என்று பெயரும் ஏற்பட்டு விட்டது.
அஷ்டாவக்கிரன் கல்வியில் சிறந்து விளங்கினான். ஒருமுறை மிதிலையில் ஜனக மகாராஜா வேதப் போட்டி நடத்தினார். அங்கு வந்தி என்ற புலவர் இருந்தார். அவரை எதிர்த்து ஜெயித்தவர்கள் யாருமில்லை. இப்போது கூட போட்டியின் தன்மை கடுமையாக இருந்தது. அதாவது, தோற்பவர்கள் கடலில் வீசப்பட வேண்டும் என்பது நிபந்தனை. அஷ்டாவக்கிரன் போட்டியில் கலந்து கொள்ளச் சென்றான்.
ஊனமுற்றவனும், வயதில் சிறியவனுமான அஷ்டாவக்கிரனை போட்டி நடக்கும் இடத்திற்குள் அனுமதிக்க காவலர்கள் மறுத்தனர். 
இதை அந்தப் பக்கமாக வந்த ஜனகர் கவனித்து விட்டார். அவனை அனுமதிக்கும்படி உத்தரவிட்டார். அஷ்டாவக்கிரனும் போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தான்.
ஜனகர் அவனிடம், ""சிறுவனான உன்னால் புலமை மிக்க வந்தியை ஜெயிக்க முடியாது. போட்டியில் தோற்று, கடலில் வீசப்பட்டு மீன்களுக்கு இரையாகி விடாதே. ஊர் திரும்பி விடு!'' என்று அறிவுரை கூறினார்.
அஷ்டாவக்கிரன் அதை பொருட்படுத்தவில்லை. ஜனகரிடம்,""வந்தி தோற்றாலும் அவருக்கும் அதே கதி தானே ஏற்படும்!'' என்றான்.
போட்டி துவங்கியது. வந்தி அஷ்டாவக்கிரனை ஏளனமாகப் பார்த்தார். அவனிடம் கேள்விகளை அம்பு போல விடுத்தார். மணி மணியாக பதில் சொல்லி அனைவரையும் அசத்தினான் அஷ்டாவக்கிரன். ஆனால், அவன் கேட்ட கேள்விகளுக்கு வந்தியால் பதில் அளிக்க 
முடியவில்லை. தோற்றுப்போன வந்தி, போட்டி நிபந்தனைப்படி கடலில் வீசப்பட்டார். 
வயது, உருவம் கண்டு ஏளனமாகக் கருதி எளிதில் வெல்லலாம் என்று நினைத்த வந்திக்கு பாடம் கற்பித்தார் அஷ்டாவக்கிரர். 
அறிவுக்கு வயதோ, ஊனமோ தடையில்லை என்பதும், படித்தவர்கள் எல்லாம் அறிவாளி கிடையாது என்பதும் புரிகிறது.

No comments:

Post a Comment