Wednesday, August 26, 2015

பாம்பை வணங்குவது ஏன்?

தாருகா வனத்தில் வசித்த முனிவர்கள் தாங்களே மிகவும் உயர்ந்தவர்கள் என்றும், தங்களின் மனைவியரே கற்பில் சிறந்தவர்கள் 
என்றும் கர்வம் கொண்டிருந்தனர். அவர்களின் கர்வத்தை அடக்க சிவன் பிச்சை எடுப்பவர் வடிவில் "பிட்சாடனர்' என்ற பெயர் தாங்கி புறப்பட்டார். அவருடன் திருமால், பெண் வடிவில் மோகினியாக வந்தார். மோகினியைக் கண்ட முனிவர்கள் அவளின் அழகில் மயங்கினர். முனிவர்களின் மனைவியரும் வசீகரமாக காட்சி அளித்த பிட்சாடனரின் அழகில் மனதைப் பறி கொடுத்து தங்கள் கற்பு நிலைக்கு களங்கம் தேடிக் கொண்டனர். ஆனால், தங்கள் தவசக்தியால் ஏதோ சூழ்ச்சி நடப்பதை அறிந்த முனிவர்கள், பழிவாங்கும் நோக்கத்துடன் வேள்வி ஒன்றைத் தொடங்கினர். 
யாக குண்டத்தில் இருந்து பூதம், நாகங்கள், முயலகன், உடுக்கை, மழு (கோடரி), மான், புலி, தீ, பேய், சூலம் என ஒவ்வொன்றாகப் புறப்பட்டு பிட்சாடனரை அழிக்க முயன்றது. இதில் நாகங்கள் வந்தபோது அவற்றைக் கையில் பிடித்த சிவன், தன் உடம்பில் தலை, கைகள், கழுத்து, இடுப்பு ஆகிய இடங்களில் ஆபரணம் போல் அணிந்து கொண்டார். அப்போது சிவன் கழுத்தில் இருந்த பாம்பு வானில் கருடன் பறந்து செல்வதைக் கண்டு, ""என்ன கருடா! சவுக்கியமா?' என்று வேடிக்கையாகக் கேட்டது. 
"இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியமே' என்று சொல்லி விட்டு கருடன் அமைதி காத்தது. 
இதன் பின்னரே பிட்சாடனராக வந்தது சிவன் என்பதை உணர்ந்த முனிவர்கள் இறைவனிடம் மன்னிப்பு கேட்டனர். சிவனால் அணியப்பட்டதால், பாம்புகள் வணக்கத்திற்குரியவை ஆயின

No comments:

Post a Comment