Wednesday, August 26, 2015

அவள் எனக்கா மகள் ஆனாள்!

அஸ்தினாபுரம் அருகிலுள்ள தனேஷ்வரத்தில், அன்னை காமாட்சியின் பக்தரான அச்சுதர், தன் மனைவி நீலாட்சியுடன் வாழ்ந்தார். ஒருநாள், அச்சுதர் கனவில் தோன்றிய காமாட்சி, தனக்கு ஒரு கோவில் கட்டும்படி உத்தரவிட்டாள். அதன்படியே கோவில் அமைத்தார் அவர். அச்சுதருக்கு குழந்தை இல்லை. இதற்காக தொடர்ந்து அன்னதானம் செய்தார். இதனால் செல்வம் கரைந்தது. அதே நேரம், காமாட்சி அருளால் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஞானம் என்று பெயரிட்டார்.
அவளுக்கு எட்டு வயதானது. ஒருநாள் சமைக்க வீட்டில் அரிசி இல்லை. வயலுக்குச் சென்று, மண்ணில் கிடக்கும் தானிய மணிகளைப் பொறுக்கி வந்தார் அச்சுதர். அதை மனைவி நீலாட்சியிடம் கொடுத்து சமைக்கச் சொல்லி விட்டு, கோவிலுக்கு சென்றார். கோவிலில், 
"அப்பா! அப்பா!' என்று அழைக்கும் குரல் கேட்டது.
குரல் வந்த திசையில் மகள் ஞானம் நின்றாள். 
"என்னம்மா! இங்கு நிற்கிறே!'' என்று கேட்டார்.
ஞானம் கண்களைக் கசக்கியபடியே அழுதாள். 
"அப்பா! எனக்கு ரொம்ப பசிக்குது'' என்றாள்.
கோவில் மண்டபத்தில் அவளைக் கொஞ்ச நேரம் படுத்திருக்கச் சொல்லி விட்டு, அச்சுதர் வீட்டுக்கு வந்தார். அங்கு மனைவி களைப்பினால் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்ப மனமின்றி, சமைத்து வைத்திருந்த உணவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
ஞானத்தை மடியில் போட்டுக் கொண்டு உணவு ஊட்டினார். உணவு தீர்ந்தது.
"அப்பா! வீட்டிற்குப் போய் இன்னும் கொஞ்சம் எடுத்துவாருங்கள்'' என்று மகள் வேண்டினாள். மறுக்க மனமின்றி, மீண்டும் 
வீட்டுக்கு வந்தார். இதற்குள் நீலாட்சி எழுந்து விட்டாள். அவளிடம், மகளுக்கு உணவு ஊட்டிய விஷயத்தை தெரிவித்ததோடு, மேலும் உணவு வேண்டும் என்று கேட்டார்.
"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்! நம் மகள் ஞானம் வீட்டில் அல்லவா இருக்கிறாள்! பிறகு அங்கு எப்படி பார்த்திருப்பீர்கள்'' என்றாள் நீலாட்சி.
அறையில் ஞானம் பாயில் படுத்திருப்பதைப் பார்த்தார் அச்சுதர். 
"இதென்ன அதிசயம்! நான் கண்டது உண்மை தானா'' என்பதை அறிய கோவிலுக்கு மீண்டும் ஓடினார் அச்சுதர்.
அங்கே குழந்தை இல்லை.
அப்போது அசரீரியாக ஒலித்த அம்பிகை, 
"அச்சுதா! நான் காமாட்சி பேசுகிறேன். வறுமையிலும் என்னை மறக்காத உன் கையால் உண்ண வேண்டும் என்பதற்காக, நானே உன் மகள் வடிவில் வந்தேன். இனி உன் வாழ்வு நலமாகும். செல்வச் செழிப்புடன் வாழ்ந்து, இன்னும் பலருக்கு அன்னதானம் செய்வாயாக'' என்று வாழ்த்தினாள். 
தன் மகள் வடிவில் வந்த அம்பாளை எண்ணி, அச்சுதர் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.

No comments:

Post a Comment