Wednesday, August 26, 2015

காகம் காட்டும் சகுனம்

காகம் காட்டும் சகுனம் !
மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது சிறப்பு என்றும் கூறுவர்.
இன்றைக்கும் கிராமப்புறங்களில், காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்றும், ஏதோ நல்ல தகவல் வரப்போவதாகவும் பேசிக்கொள்வதைக் கேட்க லாம். 'காக்கைபாடினியார்’ எனும் சங்க காலப் புலவர், காகம் ஏற்படுத்தும் நல்ல சகுனங்களைப் பாடியுள்ளார்.
பயணம் இனிதாகும்!
பயணத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போவது தன நஷ்டத்தையும் உண்டாக்கும்.
பயணிக்கும் அன்பரை நோக்கிக் காகம் கரைந்துகொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும். ஒரு காகம் மற்றொரு காகத்துக்கு உணவூட்டும் காட்சி தென்படுமானால், பயணம் இனிதாகும். ஆணும் பெண்ணுமாய் காகங்கள் இருந்து கரைந்துகொண்டிருந்தால், பெண்கள் சேர்க்கை ஏற்படும்.
ஒருவருடைய பயணத்தின்போது அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவர் உடல், நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால், பயணத்தின்போது அவருக்கு அகால மரணம் நேரிடலாம். அதே நேரம், பூஜை செய்வது போன்று காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால், அந்தப் பயணத்தால் பலவிதமான தன லாபம் ஏற்படும். வாகனம், குடை, காலணி ஆகியவற்றின்மீது எச்சம் இட்டால், பயணத்தின்போது உணவுக்குப் பஞ்சம் இருக்காது; நல்ல உணவு கிடைக்கும்.
யாத்திரை புறப்படும்போது, காகம் எந்தப் பொருளைத் தன் அலகால் கொண்டு வருகிறதோ, அந்தப் பொருளின் வகையிலான லாபம் பயணத்தில் கிட்டும். உதாரணமாக, சிவப்பு நிறப்பொருள் தங்கம் வகையிலான லாபத்தையும், வெண்ணிறப் பொருள் வெள்ளி லாபத்தையும், பஞ்சு போன்றவை வஸ்திர லாபத்தையும் குறிக்கும். இவ்வாறு உள்ள பொருட்களை அந்த இடத்திலிருந்து காகம் எடுத்துச்செல்வதுபோல் கண்டால், அந்தந்த வழிகளில் நஷ்டம் ஏற்படும்.
தன லாபம் உண்டு!
ஒரு பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின்மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால், தன லாபம் மற்றும் பெண்களால் நன்மை உண்டு என அறியலாம். அதே நேரம், காகம் அந்தக் குடத்துக்குள் அலகை நுழைத்தால், புத்திரனுக்கு ஆகாது. அந்தக் குடத்தின்மீது காகம் எச்சமிட்டால், நல்ல உணவு கிடைக்கும்.
காரணமின்றிக் கரைந்து ஒலியெழுப்பும் காகம், பஞ்சம் வரப் போவதையும், காரணமின்றிச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையையும், இரவில் அசாதாரணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போகிறது என்பதையும் சகுனமாக அறிவிக்கும்.
யுத்த அறிவிப்பு!
காரணமின்றி ஒருவரின் மேலே படும் காகம், அவருக்கு உடல் உபாதை நேரும் என்பதையும், இடமிருந்து வலமாகச் சுற்றிப் பறக்கும் காகம் நன்மையையும், வலமிருந்து இடமாகச் சுற்றும் காகம் தீமையையும் காட்டும்.
உரத்த குரலில் பல காகங்கள் கூட்டமாக ஒரு ஊரின் மேலாகப் பறப்பது, அவ்வூருக்கு ஏற்பட உள்ள பெரும் ஆபத்தைக் குறிக்கும்.படைவீரர் பகுதியில் உட்கார்ந்து ஒலியெழுப்பும் காகம், யுத்தம் வர இருப்பதைக் காட்டும்.
பஞ்சம் வருமா?
பொதுவாக, எந்த உணவையும் தனக்கெனச் சேர்க்காமல், பிற காகங்களுடன் பகிர்ந்துண்ணும் சிறப்பியல்புடையது காகம். இத்தகைய குணம் கொண்ட காகம், நெல் போன்ற தானியங்களை அள்ளிச் சென்று சேமிப்பது, நாட்டில் பஞ்சம் வரும் என்பதற்கான அறிகுறி!
நல்ல மரங்களில் காகம் கூடு கட்டுவது நற்பலனையும், பட்டுப்போன, எரிந்துபோன மரங்களில் கூடு கட்டுவது வரப்போகும் துன்பத்தையும் காட்டும். தன் குஞ்சுகளுடன் கூட்டில் வசிக்கும் காகம், சுபிட்சத்தைக் குறிக்கும். முட்டை இடாத காகம், முட்டையைக்கீழே தள்ளி உடைக்கும் காகம், ஒரு முட்டை மட்டுமே இடும் காகம் போன்றவை தீமையைக் காட்டும். ஆழ்ந்த கருமை நிறமுள்ள காகத்தைக் கண்டால், திருடர் பயம் ஏற்படும்.
ஆண் குழந்தை பிறக்கும்!
பூக்கள், பழங்கள் அல்லது ரத்தினக் கற்களை ஒரு வீட்டில் காகம் இட, அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும். கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண்மகவு பிறக்கும். மணல், நெல் போன்ற தானிய வகைகள், ஈரமான மண், பூக்கள், காய்கனிகள் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்தந்தப் பொருளின் வகையில் லாபம் ஏற்படும். வீட்டிலுள்ள பாத்திரங்களைக் காகம் எடுத்துப் போவது நன்மையன்று.
சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், சிவந்த பொருட்கள், சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் நேரிடும். காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் அரசாங்க ஆதரவு, நண்பர் சேர்க்கை, தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.
பெருமழை பெய்யுமா?
பால் உள்ள மரங்கள் மற்றும் ஆற்றங்கரை களில் இருந்துகொண்டு மழைக்காலங்களில் காகம் கரைவது, நல்ல மழை உண்டு என்பதற்கான சகுனம். மற்ற காலங்களில் இவ்வாறு காகம் கரைந்தால், மழை மேகங்கள் மட்டுமே வந்துபோகும்; மழை வராது!
நீர் நிலைகளைப் பார்த்துக் காகம் கரைவதும், மணல் புழுதி அல்லது தண்ணீரில் காகம் தன் தலையை மூழ்கச் செய்வதும் நல்ல மழைக்கான அறிகுறிகளாகும். மற்ற காலங்களில் இவ்வாறு செய்வது தீது!
காகமும் திசைகளும்...
தென்கிழக்கு: இந்தத் திசை நோக்கிக் காகம் கரைந்தால், தங்கம் சேரும்.
தெற்கு: உளுந்து, கொள்ளு போன்ற தானிய லாபமும், இசை யில் புலமையும் அமையும். சங்கீத வித்வானின் நட்பு கிடைக்கும்.
தென்மேற்கு: நல்ல தகவல் வரும். குதிரை, தயிர், எண்ணெய், உணவு போன்றவை சேரும்.
மேற்கு: மாமிச உணவு, மது வகைகள், நெல் முதலான தானியங் கள், முத்து, பவளம் போன்று கடலில் விளையும் பொருட்கள், உலர்ந்த பழ வகைகள் கிடைக்கும்.
வடமேற்கு: ஆயுதங்கள், கொடியில் விளையும் பழங்கள், கிடைக்கும். உலோகங்களால் லாபம் ஏற்படும்.
வடக்கு: ஆடைகள், நல்ல உணவு ஆகியன கிடைக்கும். வாகனங்கள் சேரும்.
வடகிழக்கு: நல்ல தின்பண்டங்கள், பொதி சுமக்கும் எருது, பொதி சுமக்கும் வாகனங்கள் சேரும். வீட்டின் கூரை மீது அமர்ந்து
காகம் கரைந்தால், மேற்கூறிய அனைத்தும் சேரும்.
- ஆத்தூர் டாக்டர் செந்தில்குமார்

No comments:

Post a Comment