Wednesday, August 26, 2015

நிலை மாறினால் குணம் மாறுமா?

புத்தர், ஒரு ஊருக்கு சீடர்களுடன் வந்தார். 
""இன்று மாலை புத்தரின் உபதேசம் இருக்கிறது. அனைவரும் வாருங்கள்'' என சீடர்கள் மக்களிடம் அறிவித்தனர். 
குடும்பத்திற்காக தியாகம் செய்த பெண்கள், உழைத்தும் பலன் பெறாத ஏழைகள், உழைக்காமலே செல்வம் சேர்த்தவர்கள், நோயாளிகள், பெற்றோரைப் புறக்கணித்தவர்கள், அழகு, செல்வத்தால் கர்வம் கொண்டவர்கள் என பலதரப்பினரும் ஒன்று கூடினர். 
""உத்தமரே! உங்கள் பேச்சைக் கேட்பதால் எங்களுக்கு என்ன லாபம்? நாங்கள் எத்தனையோ சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறோம். ஆனால், பலன் ஏதும் கிடைக்கவில்லை. அதனால், நாங்கள் பலன் பெறும் வகையில், சிறிய மந்திரம் ஏதும் இருந்தால் சொல்லுங்கள்,'' என்றனர்.
புத்தர் அவர்களிடம், "இந்த நிலை மாறி விடும்' என்று அழுத்தமாகச் சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.
அனைவரும் அவர் சொன்னதை மனதிற்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டனர். 
உழைக்காமல் செல்வம் சேர்த்தவர்கள், ""இந்தப் பணம் நம்மிடமே நிலையாக இருக்காது. என்றாவது வேறொருவர் கைக்குச் சென்று விடும். அதற்குள் நாலு பேருக்காவது நல்லது செய்ய 
வேண்டும்,'' என்று தீர்மானித்துக் கொண்டனர்.
நோயாளிகள், "" இந்த நிலை மாறி நோய் நீங்கி விரைவில் பூரண குணம் பெறுவோம்'' என்று எண்ணினர்.
அழகால் கர்வம் கொண்டவர்கள், ""இந்த இளமையும், அழகும் என்னை விட்டு ஒருநாள் நீங்கி விடும். இனிமேல் இதுபற்றி கர்வம் கொள்ளக் கூடாது,'' என்று முடிவெடுத்தனர்.
இப்படி ஒவ்வொருவரும் நல்ல முடிவுடன் அங்கிருந்து சென்றனர். புத்தர் சொன்ன 
மந்திரத்தை கல்வெட்டு போல மனதில் பதித்துக் கொண்டதால் வாழ்வில் அமைதியும், நிம்மதியும் அடைந்தனர். 
""இந்த நிலை மாறி விடும்'' என்ற மந்திரம் எந்தக் காலத்திற்கும் பொருந்தும் தானே!

No comments:

Post a Comment