Sunday, August 9, 2015

முருகப்பெருமான்- வள்ளி திருமணம் எப்படி நடந்தது?

முருகப்பெருமான்- வள்ளி திருமணம் எப்படி நடந்தது?
தொண்டை நாட்டின் மேற்பட்டியின் அருகில் உள்ளது வள்ளி ஈர்ப்பு என்ற வள்ளி மலை. அந்த மலையின் அடிவாரத்தில்தான் நம்பி என்ற வேடன் இருந்தான். அவனுக்குப் பிறந்த அனைத்துக் குழைந்தைகளுமே ஆண் குழந்தைகளாக இருந்தன. அதனால் அவன் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என ஏங்கிக் கொண்டு இருந்தான். அந்த மலையின் அடிவாரத்தில் சிலமுகி எனும் துறவி இருந்தார். ஒருநாள் அவர் எதிரில் அழகான அரபு தேசத்து மான் ஒன்று ஓடியது. அதன் உடல் அழகைக் கண்டு காம இச்சைக் கொண்டு அவர் அதைப் பார்க்க, துறவி பார்த்த காமக்கண்ணினால் அந்த மான் கர்ப்பம் அடைந்தது. ( துறவிகள் பார்வை மூலமே காமத்தை செலுத்த முடியும் என்பது ஒரு நம்பிக்கை.
இவ்வாறாக கர்ப்பம் அடைந்த மான் காலப்போக்கில் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்தப் பின் அதை அங்கேயே விட்டு விட்டுச் சென்றுவிட்டது. ஒரு நாள் அந்த இடத்தின் அருகில் கிழங்குகளை எடுக்க வந்த வேடவர் பெண்கள் அந்தக் குழந்தையைக் கண்டு மனம் மகிழ்ந்து அதை எடுத்துக் கொண்டு போய் வேடர்களின் தலைவரான நம்பியிடம் கொடுக்க அந்த தம்பதியினரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து அந்தக் குழந்தையை தம் குழந்தையாகவே வளர்க்கலாயினர். அதற்கு வள்ளி எனப் பெயர் சூட்டினார்கள்.
வள்ளிக்கு பன்னிரண்டு வயதானபோது வேடர் குல வழக்கப்படி அவளை நெற்கதிர்கள் பயிரிடப்பட்டு இருந்த வயலுக்குச் சென்று அங்கு உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்தப் பரணில் அமர்ந்து கொண்டு நெற்கதிர்களை பறித்து உண்ண வரும் விலங்குகளையும், பறவைகளையும் துரத்தும் பணியில் அமர்த்தினார்கள். அப்போது ஒரு நாள் அங்கு வந்த நாரதர் அவளது அழகைக் கண்டு வியந்து, உடனே தணிகை மலைக்கு கிளம்பிச் சென்று முருகரிடம் அவள் அழகை பற்றி விவரித்தார். அது மட்டும் அல்ல வேடுவ இனத்தினரும், வள்ளியும் அவர் மீது (முருகன் எனும் கடவுள் மீது) வைத்து இருந்த பக்தியைக் குறித்துப் பேசினார்.
அதைக் கேட்ட முருகனும் தன் உருவை ஒரு வேடர் போல மாற்றி அமைத்துக் கொண்டு அங்கு சென்று வள்ளியுடன் நட்புறவை ஏற்படுத்த ஆவல் கொண்டார்.
ஒருநாள் எப்போதும் போல முருகன் வள்ளியை சந்திக்கச் சென்றபோது, வேடன் நம்பி மாவுத் தூள், தேன், வள்ளிக் கிழங்கு, மாம்பழம் மற்றும் காட்டுப் பசுவின் பால் முதலிய உணவைக் கொண்டு வந்தான். தூரத்தில் இருந்தே அவன் வருவதைக் கண்ட முருகன் உடனே தன்னை ஒரு மரம் போல உரு மாற்றிக் கொண்டார். உணவை வள்ளிக்குத் தந்தப் பின் நம்பியும் மற்றவர்களும் அங்கிருந்து கிளம்பிச் சென்ற பின் மீண்டும் தன்னை தன் உருவை வேடனாக மாற்றிக் கொண்ட முருகன் வள்ளியிடம் சென்று தான் அவளை தான் காதலிப்பதாகக் கூறினார். அதைக் கேட்ட வள்ளி திடுக்கிட்டுப் போய் தலை குனிந்தபடிக் 'கீழ் ஜாதியை சேர்ந்த ஒரு வேடுவப் பெண்ணை அவர் விரும்புவது முறை அல்ல' என்றாள்.
அப்போது தூரத்தில் பாடல்களைப் பாடிக் கொண்டும் நாட்டியம் ஆடிக் கொண்டு வந்து கொண்டு இருந்த கும்பலைக் கண்டு பயந்து போனவள் ' வந்து கொண்டு இருப்பவர்கள் வேடர்கள், கோபக்காரர்கள், உடனே சென்று விடுங்கள்' என்று முருகனிடம் கூற உடனே முருகனும் தன்னை ஒரு சாமியார் போன்ற ஒரு வயதான கிழவர் உருவில் மாற்றிக் கொண்டார். வந்தவர்களும் அவரை ஒரு சிவனடியார் என நினைத்து அவரை வணங்கிவிட்டுச் சென்று விட்டார்கள்.
அவர்கள் சென்ற பின் அவர் வள்ளியிடம் தனக்கு தேனும், தினையும் கலந்த உணவை தருமாறு கேட்க அவளும் அவருக்கு அதை தந்தாள். பின் உண்டதும் பக்கத்தில் இருந்த ஒரு குளத்தின் அருகில் அவளை அழைத்துக் கொண்டு சென்று தன் இரு கைகளினாலும் தண்ணீரை எடுத்துக் கொடுத்து அவளைக் குடிக்கச் சொன்னார். 'தண்ணீரைக் குடித்து தாகத்தை தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தனது காதல் பசியையும் தீர்க்க வேண்டும்' என்று அவளிடம் கேட்டதும், அவளோ தனக்கு நேரமாகி விட்டது எனக் கூறி விட்டு வயலுக்குச் ஓடிச் சென்று விட்டாள். அதனால் முருகனும் தனது சகோதரர் வினாயகரை அழைத்து ஒரு யானை உருவில் சென்று அவள் பின்னால் நிற்குமாறு கூறினார்.
திடீர் என ஒரு யானை தன் பின்னால் வந்து நிற்பதைக் கண்ட வள்ளி பயந்து அலறிக் கொண்டே முருகன் அருகில் ஓடிச் சென்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள அவரும் அவளை தன் உடலோடு அணைத்துக் கொண்டு சிறிது நேரம் நின்ற பின் அவள் முன்னால் தன்னுடைய உண்மை உருவமான ஆறு தலைகள், பன்னிரண்டு கரங்களைக் காட்டியபடி மயில் மீது அமர்ந்து கொண்டு நின்றார். தான் விரும்பியக் கடவுளே தன் எதிரில் வந்து நின்றதைக் கண்டு மனம் மகிழ்ந்த வள்ளியும், தானும் திருமாலின் மகளே என்றக் கதையையும் கூறினாள்.
வள்ளியுடன் வயலுக்கு வந்திருந்த தோழியோ இத்தனை நேரமாகியும் குலத்துக்குச் சென்றவள் இன்னும் வரவில்லையே என பயந்து போய் நின்று இருக்க அங்கு வந்த வள்ளியிடம் அவள் தாமதமாக வந்ததற்கான காரணத்தைக் கேட்டாள். வள்ளியும் எதோ கூறி விட்டு உண்மையில் நடந்த கதையை மறைத்தாள்.
அவளைத் தொடர்ந்து அங்கு வேடன் உருவில் வந்த முருகனின் கண்களும், வள்ளியின் கண்களும் சங்கமித்ததைக் கண்டவள் அந்த வேடனை அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுமாறுக் கூறினாள். ஆனால் வேடன் உருவில் இருந்த முருகனோ தன்னுடையக் காதலை அவளிடம் எடுத்துக் கூறி அவர்கள் காதலுக்கு உதவியாக இருக்க அவளது துணையும் நாடினார். தேவைபட்டால் தனது பொய்க்கால் குதிரையுடன் நடனம் ஆடுபவன் போல அவர்களது கிராமத்துக்கு தான் வந்து விட்டுப் போவதாகவும் கூறினார். வள்ளியின் தோழியும் அதற்கு இணங்கினாள். அறுவடைக் காலமும் முடிந்தது. இனி தன்னால் முருகனைக் காண முடியாது என்பதை உணர்ந்து கொண்ட வள்ளியும் கவலையுடன் தனது கிராமத்துக்கு கிளம்பிச் சென்றாள். அவளுடைய வளர்ப்புத் தாயார் அவளது முக வாட்டத்தைக் கண்டு பிடித்து விட்டாள்.
மலைப் பிரதேசத்தில் அவள் இருந்தபோது தீய ஆவி ஏதும் அவளைப் பிடித்து விட்டதா என்பதைக் கண்டறிய முருகனுக்கு பூஜை செய்து பரிகாரம் காண ஜோதிடர்களை அணுகினாள். அதற்கு இடையில் மீண்டும் வயலுக்குச் சென்று வள்ளியைத் தேடிய முருகன் அங்கு அவளைக் காணாமல், அவளது தோழியின் உதவியைக் கொண்டு அவளைக் கண்டு பிடித்துப் பார்த்தப் பின் அவளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
மறு நாள் வள்ளியைக் காணாத வேடத் தலைவனான நம்பி கைதேர்ந்த வேடர்களை அனுப்பி அவளை தேடிக் கண்டு பிடிக்குமாறுக் கூறினான். அவர்களும் அவளை பல இடங்களுக்கும் சென்று தேடி விட்டு முடிவாக அவளுடன் ஓடிக் கொண்டு இருந்த முருகனைக் கண்டு பிடித்து விட்டு அவர் மீது அம்புகளை வீசினார்கள். ஆனால் அவரது சேவல் எழுப்பிய கர்ஜனையினால் அவர்கள் அனைவரும் மடிந்து விழுந்தார்கள். அவர்கள் மடிந்து விழுந்ததைக் கண்ட வள்ளியும் அழுது புலம்ப முருகனும் அவளுக்கு ஆறுதல் கூறி அவளை தேற்றி அழைத்துக் கொண்டு சென்றார். வழியில் அவர்களைக் கண்ட நாரதர் முருகனிடம் ' அவர் செய்தது சரி அல்ல என்றும், அவளை அவளது பெற்றோர்களிடம் கூறி விட்டே அழைத்து வந்திருக்க வேண்டும்' என்று அறிவுறுத்த முருகனும் இறந்து போன வேடர்களை உயிர் பிழைக்க வைத்து அவர்களுக்கும் தனது சுய உருவைக் காட்டினார்.
அவர்களும் அவரை வணங்கித் துதித்த பின் தம்முடைய கிராமத்துக்கு அவர் வந்து தங்களுடைய இன வழக்கப்படி அவளை அவர் மணந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள அவர்களுடன் அவர் கிளம்பிச் சென்றார். அங்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து புலித்தோலை பரிசாகக் கொடுத்தார்கள். நாரதர் முன்னிலையில் முருகனின் கரங்களில் வள்ளியின் கரங்களை அவளது வளர்ப்புத் தந்தையான வேடன் நம்பி வைக்க அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதாக கருதப்பட்டது. அங்கிருந்து கிளம்பிச் சென்ற முருகன் சில நாட்கள் திருத்தணியில் வாழ்ந்தப் பின் அங்கிருந்துக் கிளம்பி ஸ்கந்தகிரிக்குச் செல்ல அங்கு வள்ளியையும், முருகனையும் அவரது முதல் மனைவி தெய்வானை அன்புடன் வரவேற்றாள்.
இந்த உணர்ச்சியைத் தூண்டும் கதையின் ஒவ்வொரு வரிகளுமே பண்டைய காலத்தைய தமிழர்களின் பண்பாட்டை குறிக்கும் விதத்திலேயே அமைந்து உள்ளது தெரியும். இருவரும் இணைந்த இது ஒரு அற்புதமான காவியம். கதாநாயகி மலைவாழ் மக்களிடையே பிறக்கின்றாள், பன்னிரண்டு வயதில் பரண் மீது அமர்ந்து கொண்டு வயல்களைப் பாதுகாக்கும் பணியில் இருக்கின்றாள், அங்குதான் கடவுளின், அதாவது காதலனின் சந்திப்பு துவங்க அதற்கு அவளுடைய தோழி உதவி செய்கிறாள், பொய்க்கால் குதிரையின் ஆட்டம், காதலின் பிரிவினால் வள்ளி அடைந்த சோகம், வள்ளியின் தாயார் ஜோதிடர்களை அழைத்து ஆலோசனை செய்தது, வேலனின் உக்கிரத் தாண்டவம், முருகனையே வேண்டிக் கொண்டு தீய ஆவியை விரட்டச் செய்த ஏற்பாடுகள், காதலர்கள் ஓடி விட்ட சம்பவம் என அனைத்துமே தமிழர்கள் பாணியிலேயே அமைந்து உள்ளது.
தெய்வ நம்பிக்கையின் கீழ் அமைந்து உள்ள அபூர்வமான ஒரு கதை ஒரு தெய்வத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும், அந்தக் கதையின் கருவை நியாயப்படுத்தும் விதத்திலும் நன்கு அமைந்து உள்ளது என்றே நான் நம்புகிறேன். ஆனாலும் தெய்வத்தின் அற்புதமான செயல்களைக் கூட சமூகத்தின் மன மாற்றத்துக்கு ஏற்ப வரலாற்று சிறப்பு மிக்க அற்புதமான கதையாக எழுதப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment