Saturday, August 22, 2015

சேவலும், மயிலும் காவல்!

சேவலும், மயிலும் காவல்!
முருகப்பெருமானை, "சேவலும் மயிலும் காவல்' என்று சொல்லி, பக்தர்கள் வணங்குகின்றனர். இதற்கு காரணம் தெரியுமா? பக்தி, அன்பை வளர்ப்பதாக இருக்க வேண்டும்; அதாவது, நமக்கு இவ்வுலகில் எதிரிகளே இருக்கக்கூடாது; எதிரிகள் இருந்தாலும் கூட, அவர்களிடமும் கருணை காட்டி, இன்னா செய்தாரையும் வெட்கப்படச் செய்ய வேண்டும் என்பதையே கந்தசஷ்டி விரதம் உணர்த்துகிறது. தான் பெற்ற வரத்தால், தேவர்களுக்கு தொல்லை செய்து வந்தான் சூரபத்மன் என்ற அசுரன். தேவர் தலைவன் இந்திரனின் மகன் ஜெயந்தனைக் கடத்தி சிறைவைத்தான். அவனை மீட்கவும், தேவர்களைப் பாதுகாக்கவும் அனைவரும் சிவனைச் சரணடைந்தனர். அவர், தன் நெற்றிக்கண்ணில் இருந்து உருவாக்கிய குழந்தையே முருகப்பெருமான்.
திருச்செந்தூரில் ஜெயந்தன் சிறை வைக்கப்பட்டிருந்ததை அறிந்த முருகன், அங்கு சென்று சூரபத்மனுடன் போரிட்டார். யுத்தம் பல நாட்களாக தொடர்ந்தது. யாருக்கும் வெற்றி, தோல்வியற்ற நிலை.
மேலும், தன்னை ஒரு மாமரமாக உருமாற்றி, கடற்கரையில் நின்றான் சூரபத்மன். அப்போது, தன் தாய் பார்வதியிடம் இருந்து வாங்கிச் சென்ற வேலை அந்த மரத்தின் மீது எய்தார் முருகன். மரம் இரண்டு கூறானது; ஆனால், மீண்டும் இணைந்து கொண்டது.
எனவே, மரத்துண்டுகளை இடம் மாற்றிப்போட்டார் அந்த ஞானப்பண்டிதன்; மரம் ஒட்டவில்லை. சூரனின் மரணம் நிச்சயமானது. ஆனாலும், சூரனைக் கொல்ல அவர் விரும்பவில்லை; அறியாமல் பிழை செய்த அவனை ஆட்கொள்ளவே விரும்பினார். எதிரியாக இருந்தாலும் அவனை திருத்த வேண்டுமென்பதே அவரது நோக்கம்.
தன் உடலில் வேல் பட்டதும், தான் செய்வது தவறு என்ற ஞானம் சூரபத்மனுக்கும் பிறந்தது. உலகில், கடவுளே உயர்ந்தவர் என்பதைப் புரிந்து கொண்டான். முருகப்பெருமானின் பாதங்களைப் பணிந்தான். இரண்டு கூறாகி நின்ற சூரனின் ஒரு பகுதியை மயிலாகவும், ஒரு பகுதியை சேவலாகவும் மாற்றினார். சேவலைத் தன் கொடியில் பொருத்திக் கொண்டார்; மயிலைத் தன் வாகனமாக்கிக் கொண்டார்.
சேவல், விடியலை அறிவிப்பது. முருகப்பெருமானை வணங்குபவர்களின் துன்பங்களுக்கு, அவரது கொடி தரிசனம் விடியலைத் தரும். சூரன் என்பவன் ஆணவத்தின் சின்னம். மயிலை வாகனமாக்கி, அதில் அமர்ந்ததன் மூலம், நம் மனதில் தோன்றும், "தான்' என்னும் ஆணவ உணர்வை அடக்க வேண்டும் என்பது மனித சமுதாயத்துக்கு உணர்த்தப்படுகிறது.
கந்தசஷ்டி விரதம், ஆறுநாட்கள் அனுஷ்டிக்கப்பட வேண்டும். எந்த முருகன் கோவி லிலும் தங்கி இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம் என்றாலும்,
திருச்செந்தூர் முக்கியத் தலமாக கருதப்படுகிறது.
இந்த நாட்களில் பால், பழம் நீங்கலாக, எதுவும் சாப்பிடக்கூடாது என்பது விதி. குறிப்பாக, குழந்தை யில்லா பெண்கள் இவ்விரதம் மேற்கொண்டால், அவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. விரதநாட்களில் கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
ஆறாம் நாளான சூரசம்ஹாரத்தன்று மாலையில் சம்ஹார நிகழ்ச்சி முடிந்ததும், நீராடிவிட்டு, தயிர் சேர்த்த பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்பும், சாத்வீகமும் மனதில் பெருக கந்தசஷ்டி விரதத்தை அனுஷ்டியுங்கள்.

No comments:

Post a Comment