Wednesday, September 2, 2015

மாமிச உணவு பற்றி… – ‪#‎சோ

மாமிச உணவு பற்றி… – ‪#‎சோ‬--‪#‎தொகுப்பு‬ :
எங்கே பிராமணன்? – டெலிவிஷன் விளக்கங்கள்
கேள்வி : மாமிசம் சாப்பிடுவது பற்றி சாத்திரங்கள் என்ன சொல்கின்றன? அதிலும் குறிப்பாக, பிராமணர்கள் மாமிசம் சாப்பிடலாமா? இப்போது பிராமணர்கள் பலர் மாமிசம் சாப்பிடுகிறார்களே – அது சரிதானா?
சோ : இதில் ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும். முன்பு – அதாவது நீண்ட, நெடுங்காலத்திற்கு முன்பு – எல்லோரும் மாமிச உணவை ஏற்றார்கள் – பிராமணர்கள் உட்பட. அது சர்வ சாதாரணமாக நடந்து வந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால், ஒரு நிகழ்ச்சியின் காரணமாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது பற்றி, மஹாபாரதத்தில் கூறப்பட்டிருக்கிறது. ‘இனி பிராமணன் மாமிசம் சாப்பிடக் கூடாது’ என்ற விதிமுறையை ஏற்படுத்திய நிகழ்ச்சி அது. ‘இனி சாப்பிடக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளதால், அதுவரை சாப்பிட்டார்கள் என்றுதான் ஆகிறது. அந்த நிகழ்ச்சியைப் பற்றி மஹாபாரதம் கூறுவதைப் பார்ப்போம்.
இல்வலன், வாதாபி என்ற இரு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் மிகவும் பலம் பெற்றவர்கள். அவர்களை வெல்வது என்பது, மிக மிகக் கடினம். நமது புராணங்கள், இதிஹாஸங்கள் – இவை எல்லாவற்றிலுமே ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் உண்டு. அசுரர்கள், அரக்கர்கள் ஆகியோர் கொடூரமானவர்களாக வர்ணிக்கப்பட்டார்கள். அதே சமயத்தில் அவர்கள் பலமற்றவர்களாகவோ, கோழைகளாகவோ சித்தரிக்கப்படவில்லை; மிகவும் சக்தி படைத்தவர்களாக அவர்கள் கூறப்பட்டிருக்கிறார்கள்; அவர்களில் பலர் நன்கு படித்தவர்கள்; சாத்திரம் தெரிந்தவர்கள். அவர்களை வெல்வது கடினம் என்ற நிலைக்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அவர்கள் மாயவேலைகளில் நிபுணர்கள். நினைத்த உருவத்தை எடுப்பார்கள். அது தவிர, எந்த நெறிமுறைக்கும் கட்டுப்படாதவர்கள் என்பதால், அவர்களுடைய தாக்குதல்கள், விதிமுறைகளைப் பற்றி கவலைப்படாமல் நடத்தப்பட்டன. அவர்களை எதிர்த்த நல்ல சக்திகளோ, பாவ புண்ணியத்திற்கு அஞ்சியும், நியாய அநியாயம் பார்த்தும் செயல்பட வேண்டியிருந்தது. இதனால் தீய சக்திகளின் கை ஓங்கி இருந்தது.
அதனால்தான், அந்தத் தீய சக்திகளை அழிப்பது கடினமாக இருந்தது. பெரும்பாலான நேரங்களில், கடவுளே ஒரு அவதாரம் எடுத்து வந்து, சில தீய சக்திகளுக்கு முடிவு கட்ட வேண்டியிருந்தது.
இந்த இல்வலனும், வாதாபியும் பலரைக் கொலை செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு அவர்கள் கையாண்ட வழிகளில் ஒன்று – விருந்து வைப்பது. ஒருவரை அழைத்து விருந்து வைப்பார்கள்; வாதாபியை வெட்டி, மாமிச உணவாகச் சமைத்து, விருந்தாளிக்கு இல்வலன் படைப்பான். விருந்தாளி சாப்பிட்டவுடன், ‘வாதாபி! வெளியே வா!’ என்பான் இல்வலன்.
உடனே விருந்துண்டவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு, வாதாபி வெளியே வருவான். விருந்துண்டவர், வயிறு கிழிபட்டு உயிர் துறப்பார். இப்படித் தங்களுக்கு வேண்டாதவர்கள் பலரை, மிகச் சுலபமாக அந்த அசுர சகோதரர்கள் தீர்த்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.
இதே வழியில் அகஸ்திய முனிவரைக் கொன்று விடத் திட்டமிட்ட அந்தச் சகோதரர்கள், அவரை விருந்துக்கு அழைத்தனர். வழக்கம் போல, வாதாபியை வெட்டி அவருக்கு விருந்து படைத்தான் இல்வலன். அவருடைய தவ வலிமையின் முன்பு, அந்த அசுரர்களின் மாயாஜாலம் எடுபடாததால், சாப்பிட்ட உடனேயே, நடந்தது என்ன என்பது அகஸ்தியருக்குப் புரிந்து விட்டது.அவர் உடனே ‘வாதாபி! ஜீர்ணோ பவ!’ என்றார். அதாவது ‘வாதாபி! நீ ஜீர்ணம் ஆகிவிடுவாயாக!’ என்றார் அகஸ்தியர். அவ்வளவுதான். அவன் ஜீர்ணமாகி விட்டான். இல்வலன் வழக்கம் போல, ‘வாதாபி! வெளியே வா!’ என்று உரக்கக் கூப்பிட்டான். ஆனால், எப்படி வருவான் வாதாபி? அவன்தான் ஜீர்ணமாகி விட்டானே! இல்வலன் பல முறை ‘வாதாபி! வெளியே வா!’ என்று கதறியும், வாதாபி வரவில்லை. அவன் அத்தியாயம் முடிந்தது. பின்பு இல்வலன் வீழ்த்தப்பட்டான்.அன்று இம்மாதிரி நடந்தவுடன் அகஸ்தியர் சொன்னார்: ‘இந்த நிலை ஏன் வந்தது? நான் மாமிசம் சாப்பிட்டதால்தான், இப்படி நேர்ந்தது. அதனால் இனி ஒரு விதி செய்கிறேன். இனி பிராமணர்கள் மாமிசம் சாப்பிடக் கூடாது; மதுவையும் தொடக் கூடாது!’ என்றார்.இப்படி அகஸ்திய முனிவர், ஒரு விதிமுறையை ஏற்படுத்தினார். அவருடைய ஆணை அது. அதிலிருந்துதான் பிராமணர்கள் மாமிசம் சாப்பிடுவது கிடையாது என்ற பழக்கம் வந்திருக்கிறது.ஆனால், இன்றைக்கு உள்ளவர்கள், அகஸ்தியருக்கு முந்தைய காலத்திற்குத் திரும்பப் போய் விட்டார்கள்! இன்று நாம் எல்லாவற்றிலும் பின்னோக்கித்தானே போகிறோம்! அப்படி இதிலும் பின்னோக்கிச் சென்று, அகஸ்தியருக்கு முன்பு இருந்த பழக்கத்தை இன்று சிலர் ஏற்றிருக்கிறார்கள். 

1 comment: