Wednesday, September 9, 2015

திருக்கோயில் கருவறைக்குள் மகளிர் நுழையலாமா?

திருக்கோயில் கருவறைக்குள் மகளிர் நுழையலாமா?
“எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை எனவுரைத் தருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்ல வளாயின பெருந்தவர்க் கொழுந்து”
என்று காமாட்சியம்மை வழிபட்டதைச் சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார்.
மகளிர் கருவறைக்குள் சென்று வழிபட்டதைத் தலபுராணங்கள், திருமுறைகள், கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கும்பகோணத்துக்கு வடகிழக்கில் திருப்பனந்தாள் என்ற பாடல் பெற்ற தலம் உள்ளது. தாடகை என்ற பெண் திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் திருக்கோவிலில் நாள்தோறும் வழிபாடு செய்து வந்தாள்.
ஒருநாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது கட்டிய ஆடை அவிழ்ந்து விழத் தொடங்கியது. நழுவிய ஆடையை இரு முழங்கைகளாலும் அழுத்திப் பற்றிக் கொண்டு இருகைகளாலும் பிடித்திருந்த மாலையைச் சிவலிங்கத்திற்குச் சூட்ட முயன்றாள். அப்போது இறைவன் மனமிரங்கித் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றுக் கொண்டார். அன்றுமுதல் அச்சிவலிங்கம் சாய்ந்தபடியே இருந்தது.
சோழ மன்னன் செஞ்சடையப்பரை வழிபடச் சென்றபோது சிவலிங்கம் சாய்ந்திருப்பதைப் பார்த்தார். சிவலிங்கத்தை நேர் செய்ய முயன்றார். மன்னன் ஆணைப்படி யானை, சேனை முதலியவற்றின் துணையுடன் கயிறு கொண்டு இழுத்தும் சிவலிங்கம் நேராகவில்லை. குங்குலியக்கலயநாயனார் மன்னனின் இவ்வருத்தத்தைக் கேட்டுக் கோயிலுக்குச் சென்று தம் கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்டு, கயிற்றின் மறுநுனியைச் சிவலிங்கத்தின் மேல் சுற்றி வலிந்து இழுத்தார். அவருடைய அன்புக்குக் கட்டுப்பட்ட இறைவன் நிமிர்ந்தார்.
பெரியபுராணம், தலபுராணம் இரண்டிலும் இச்செய்திகள் உள்ளன. தாடகை என்ற பெண், கருவறைக்குள் சென்று வழிபட்டதை இதனால் அறியலாம். சோழ நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் திருச்சாத்தமங்கை என்பது திருநீலக்க நாயனாரால் சிறப்புப் பெற்றது. மயிலாடுதுறை திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமருகல் என்ற தலத்திற்கு வடகிழக்கில் இது உள்ளது. இன்று சீயாத்தமங்கை என்று வழங்குகின்றது.
திருநீலநக்க நாயனார் நாள் தோறும் திருச்சாத்த மங்கையில் உள்ள அயவந்தி என்ற கோவில் இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு திருவாதிரை நாளன்று மனைவியுடன் வழிபாடு செய்யக் கோவிலுக்குச் சென்றார். கருவறைக்குள் சென்று வழிபாடு செய்யத் தொடங்கினார். பக்கத்திலிருந்த மனைவியார் வழிபாட்டுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொடுத்தார்.
வழிபாட்டு நிறைவில் இறைவன் முன் அமர்ந்து ஐந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்கத் தொடங்கினார். மெய்ம்மறந்து ஐந்தெழுத்தை ஓதினார். அப்போது சிலந்திப் பூச்சியொன்று சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இதனைக் கண்ட மனைவியார் உடனே பக்கத்தில் சென்று, பச்சிளம் குழந்தை மீது சிலந்தி விழுந்தால் தாய் வாயால் ஊதி உமிழ்ந்து வெப்பக் கொடுமையை நீக்குவதைப் போலச் சிவலிங்கத்தின் மீது விழுந்த சிலந்தியை வாயால் ஊதி உமிழ்ந்தாள்.
வாயின் உமிழ் நீர் சிவலிங்கத்தின் மீது பட்டது. இதனைக் கண்ட திருநீலநக்கநாயனார் கண்களை மூடிக் கொண்டு மனைவியாரைப் பார்த்து, ‘அறிவற்றவளே! இச் செயலை ஏன் செய்தாய்? ’ என்று கேட்டார். சிவலிங்கத்தின் மீது வீழ்ந்த சிலந்தியை ஊதி உமிழ்ந்ததாக மனைவியார் கூறினார். ‘வேறு வகையில் போக்கியிருக்கலாம்; ஊதி உமிழ்ந்தது தவறு, அதனால் வழிபாடு தவறு உடையதாயிற்று என்று கூறி’ மனைவியைக் கோவிலிலேயே விட்டுச் சென்று விட்டார். அஞ்சிய மனைவியார் இரவு முழுவதும் கோவிலிலேயே தங்கி விட்டார்.
இரவிலே திருநீலநக்கநாயனார், கனவில் இறைவன் தோன்றி ‘உம்முடைய மனைவியார் தாயன்போடு எம்மை ஊதி உமிழ்ந்த இடம் தவிரப் பிறவிடங்களிலெல்லாம் சிலந்தியால் உண்டான கொப்புளங்கள் தோன்றியுள்ளன. அவற்றைப் பார்’ எனக் காட்டினார். உடனே நாயனார் இறைவனைத் தொழுது வணங்கி விடிந்ததுதம் கோவிலுக்குச் சென்று கண்ணீர் சிந்தி அழுதார். பிறகு மனைவியாரை அழைத்துச் சென்றார்.
இச்செய்திகளைப் பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் பக்திச் சுவை ததும்பப் பாடியுள்ளார். நாயனாருடன் மனைவியாரும் கோவில் வழிபாட்டில் பங்குபெற்றதையும் கருவறைக்குள் மகளிர் சென்று வழிபட்டதையும் இதன் மூலம் அறிய முடிகிறது.
கொங்கு நாட்டில் வேடுபறியால் சிறப்புப் பெற்ற தலம் திருமுருகன்பூண்டி. சேரமான் பெருமாளிடம் சுந்தரமூர்த்தி நாயனார் பெற்று வந்த பொருள்களைச் சிவகணங்கள் திருடர் வடிவில் வந்து கவர்ந்து சென்றனர். சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி இழந்த பொருள்களை மீட்டார்.
திருமுருகன் பூண்டி கோவிலில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. முருகநாதர் கோவில் கருவறை வடக்குச் சுவரில் கொங்குப் பாண்டியன் வீரபாண்டியதேவன் (கி.பி. 1265–1285) காலக் கல்வெட்டு ஒன்று உள்ளது. அக்கல்வெட்டில் தேவரடியார்க்குக் கொடுத்த வரிசைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
மாலைக் காலத்தில் பூசையின் போது அரங்கேறி நடனம் புரிதல், திருவிழாக் காலத்தில் ஊர்வலத்தின் இறுதியில் இறைவனுக்கு உண்டாகும் கண்ணேறு (திருஷ்டி) போக்கி ஆரத்தி எடுத்தல், பூசை முடிவில் திருநீறு, பிரசாதம் பெறும் உரிமை பெற்றிருத்தல், இறைவன் உற்சவத்தின் உலாவரும் போது உயர்ந்த ஆசனங்களிலிருந்து பார்த்தல், நடனம் ஆடிச் செல்லும் போது நடைக் காவனம் விரித்தல், மார்கழித் திருவாதிரையில் திருவெம்பாவைப் பாடலுக்கு அபிநயம் பிடித்தல் முதலிய வரிசைகள் தரப்பெற்றன.
இவற்றிக்கெல்லாம் மேலாகக் கோயிலில் மூன்றாம் அறையாகிய மகாமண்டபம் கடந்து, அர்த்த மண்டபம் கடந்து கருவறை சென்று வழிபட உரிமை தரப்பட்ட செய்தி கல்வெட்டில் வருகின்றது.
தேவரடியாராகிய நாட்டிய பெண்கள் கருவறை வரை சென்றனர் என்பதனால் கருவறைக்குள் சென்றனர் என்பது கல்வெட்டால் புலனாகிறது. கோகர்ணம், திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்) ஆகிய தென்னிந்தியக் கோவில்களிலும் சோமநாதம், கேதாரநாத், காசி, உஜ்ஜியினி, நாகநாதம், திரியம்பகம், பீமநாதம் முதலிய வட இந்தியக் கோவில்களிலும் ஆண், பெண் அனைவரும் கருவறைக்குள் சென்று வழிபடுவது இன்றும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் புலியூர் சிமெண்ட் ஆலைக்குப் பக்கத்தில் உள்ள உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியார் கோவிலும், தாடிக்கொம்பு திருவருள்துறை நாதர் கோவிலும் ஆண், பெண் அனைவரும் சென்று வழிபடலாம் என்ற மரபு நடைபெற்று வருகிறது.
— ந. இரா. சென்னியப்பனார்

No comments:

Post a Comment