Tuesday, October 6, 2015

உண்ணும்போதும்… உடலுறவு கொள்ளும்போதும்…

பலருடன் சேர்ந்து உண்ணும்போது… சாதாரணமாக உணவு உண்ணும்போது மக்கள் பலருடன் சேர்ந்து அமர்ந்து, பேசி, சிரித்துக் கொண்டே தான் உண்பர். இன்னும் சொல்லப்போனால், சில மருத்துவர்கள் கூட இந்தப் பழக்கத்தை ஆதரிக்கிறார்கள். பேசிச் சிரித்துக் கொண்டே சாப்பிட்டால், நீங்கள் கொஞ்சம் குறைவாக சாப்பிடுவீர்கள் என்பது அவர்கள் கணிப்பு. குறைவாக சாப்பிட்டால், நன்றாக செரிமானம் செய்யலாம். நீங்கள் குண்டாகவும் ஆகமாட்டீர்கள். முழுமையான ஈடுபாட்டுடன் உண்ணும் செயலில் ஈடுபட்டால், ஒரு வாய் உணவும் கூட உங்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்திடும். ஆனால் நம் யோகக் கலாச்சாரத்தில் தனியாக அமர்ந்தே உண்பார்கள். சேர்ந்து அமர்ந்து உண்டாலும், அடுத்தவர் என்ன சாப்பிடுகிறார், எப்படி சாப்பிடுகிறார் என்பதை பார்க்கமாட்டார்கள். அந்த நேரத்தில், அடுத்தவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பது உங்கள் வேலை இல்லை. உங்கள் வேலை உண்பது மட்டும்தான். ‘உண்பது’ ஒன்றும் சாதாரணமான காரியம் அல்ல. நீங்கள் உண்ணும் உணவை ‘நீங்களாகவே’ மாற்றிக் கொள்ளும் மாபெரும் செயல் அது. நீங்கள் உண்ணும் பீன்ஸ், காரட், இட்லி, தோசை, வடை எதுவாக இருந்தாலும், அதை ஒரு ‘மனிதனாக’ (அ) ‘உங்களாகவே’ நீங்கள் மாற்றுகிறீர்கள். ஏதோ ஒன்று உங்களில் ஒரு அங்கமாக மாறுகிறது. இதில் உங்களை நீங்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். உண்பது… உடலுறவு… இப்படி பிறவற்றை உங்களில் ஒரு அங்கமாக ‘சேர்த்துக்’ கொள்ள பல வழிகள் இருக்கின்றன. உண்பது ஒரு வழி என்றால், உடலுறவு மற்றொன்று. உடலுறவு கொள்ளும்போது, இன்னொருவர் உங்களில் ஒரு அங்கமாக மாறிவிட்டார் என்பது போல் இருக்கும், ஆனால் அது அவ்வாறு நடப்பதில்லை. உண்ணும்போது இது நிச்சயமாய் நடக்கிறது. ‘நீங்கள்’ அல்லாத ஒன்றை, வெற்றிகரமாக உங்களில் ஒரு அங்கமாக உங்களால் சேர்த்துக் கொள்ள முடிகிறது. இது மாபெரும் விஷயம். சுவையினால் அல்ல, ‘சேர்த்துக்’ கொள்ளும் உணர்வு மேம்படுவதால் இது பெரிய விஷயம். மண்ணாய் இருந்ததை உணவாய் மாற்றி, உணவாய் இருப்பதை மனிதனாக மாற்றும் அதிசயம். முழுமையான ஈடுபாட்டுடன் உண்ணும் செயலில் ஈடுபட்டால், ஒரு வாய் உணவும் கூட உங்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்திடும். இன்னும் அதிகமாக நுண்ணுணர்வுடன் நீங்கள் இருந்தால், நீங்கள் சுவாசிப்பதும் கூட உங்களிடம் உணர்ச்சிப் பெருக்கை உண்டு செய்யும். நீங்கள் உள்ளிழுத்து வெளிவிடும் ஒவ்வொரு சுவாசத்திலும், இம்முழு உலகையும் உங்களுள் நீங்கள் அரவணைக்கிறீர்கள். நீங்கள் உள்ளிழுக்கும் காற்று, இதற்கு முன் எத்தனை எத்தனை முறை, எத்தனை எத்தனை ஆயிரம் உயிரினங்களின் உள் சென்று வெளி வந்த காற்று என்பது உங்களுக்குத் தெரியுமா? காற்று எப்போதும் புதுப்பிக்கப் படவில்லை. லட்சம் லட்சம் ஆண்டுகளாக இதே காற்று தான் இங்கு இருந்திருக்கிறது. சரியாக சுவாசித்தால்… நீங்கள் மட்டும் சரியாய் சுவாசித்தால், நீங்கள் தெரிந்து கொள்ள நினைக்கும் எல்லாமே இங்கு தான் இருக்கிறது. ஒரு புத்தர், பதஞ்சலி முனிவர், இயேசு, யாரை வேண்டுமானாலும் நீங்கள் இப்போது சுவாசிக்கலாம். அவர்கள் சுவாசித்ததும் இதே காற்றைத் தான். அப்படியென்றால் ஞானம் எல்லாம் காற்றில் தான் கலந்திருக்கிறதா? அப்படியில்லை. இந்தக் காற்று எல்லாவற்றையுமே தொட்டு வந்திருக்கிறது. இதை விட முக்கியமான ஒன்று, நீங்கள் எடுக்கும் இந்த உள்மூச்சு, ‘நீங்களாகவே’ ஆகிவிடுகிறது. இந்த உள்மூச்சு இல்லாமல், உங்களால் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. இந்த உள்மூச்சு உங்களுக்கு இத்தனை முக்கியமெனில், அதை உருவாக்கிக் கொடுக்கும் அனைத்துமே உங்களுக்கு முக்கியம்தான். இப்படி செய்யும் ஒவ்வொன்றையும் முழு விழிப்புணர்வுடன் நீங்கள் செய்தால், இப்பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொன்றுமே உங்கள் முக்திக்கு வழிசெய்யும். இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் உங்கள் முக்திக்கான நுழைவாயிலாய் செயல்படும். இதில் எதை பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். உங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டால், பழம் உண்ணும் செயலும் கூட உங்கள் முக்திக்கு வழிசெய்யலாம்.

Read more at : 

No comments:

Post a Comment