Monday, October 5, 2015

சஞ்சீவி மந்திரம்

அந்தக் காலம், அமிர்தத்திற்காகப் பாற்கடல் கடையப்படாத காலம். அமிர்தம் தோன்றுவதற்கும் முற்பட்ட காலம். அப்போதெல்லாம் தேவர்களுக்கும் மரணம் சம்பவித்தது. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அடிக்கடிப் போர் நடைபெற்றது. தேவர்கள் அசுரர்களால் கொல்லப்பட்டார்கள். தேவர்களின் எண்ணிக்கை 
கிடுகிடுவெனக் குறைந்தது. தேவர்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அசுரர்களின் எண்ணிக்கையோ குறையவே இல்லை. அதற்கு ஒரு காரணமிருந்தது. தேவர்களும் போரில் அசுரர்கள் பலரைக் கொன்றார்கள் என்பது உண்மைதான். என்றாலும் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மந்திரம் அறிந்தவர். 

ஒவ்வொருமுறையும் போர் முடிந்த பிறகும் சஞ்சீவி மந்திரத்தின் மூலம் போரில் இறந்த அத்தனை அசுரர்களையும் மீண்டும் உயிர்ப்பித்து வந்தார் அவர். தேவர்களின் குரு பிரகஸ்பதிக்கு சஞ்சீவி மந்திரம் தெரியாது. அந்த மந்திரம் தெரிந்த ஒரே நபர் அசுரகுரு சுக்கிராச்சாரியார் மட்டுமே. இனி என்ன செய்வது? போகிற போக்கைப் பார்த்தால் தேவர் குலமே அழிந்துவிடும் போலிருக்கிறதே? தேவர்கள் தங்கள் குரு பிரகஸ்பதியிடம் கவலையோடு அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பதென ஆலோசனை கேட்டார்கள். பிரகஸ்பதி சொன்னார்:  

‘‘பிரச்னையைச் சமாளிக்க ஒரே வழிதான் இருக்கிறது. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் யாரேனும் எந்தச் சூழ்ச்சி செய்தேனும்  சுக்கிராச்சாரியாரின் சீடனாகச் சேர்ந்து அவரிடமிருந்து சஞ்சீவி மந்திரத்தைக் கற்றுக் கொண்டுவிட வேண்டும். இதைத் தவிர வேறு வழி இல்லை.’’ தேவர்கள் கலந்தாலோசித்து ஒரு முடிவு செய்தார்கள். அவர்களின் குரு பிரகஸ்பதியின் மூத்த மகன் கசன், ஆணழகன். கூர்மையான மூக்கும் சிவந்த உதடுகளும் ஒளிவீசும் முகமும் காணும் யாரையும் கவரும் உடல் வனப்பும் கொண்ட வாலிபன். அசுரகுரு சுக்கிராச்சாரியாருக்கு தேவயானி  என்று ஒரு புதல்வி உண்டே? அவள் காண்போரைக் கவரும் கட்டழகி ஆயிற்றே? அவளைக் கசன் கவர்ந்துவிட்டால் போதுமே?

ஒன்றும், ஒன்றும் இரண்டு என்பது கணக்கு. ஒன்றும், ஒன்றும் ஒன்றுதான் என்பதல்லவா காதல்? அப்படி அவள் மட்டும் இவனிடம் காதல் கொண்டு  மனம் ஒன்றுபட்டுவிட்டால் இவனுக்காக அவள் என்னதான் செய்ய மாட்டாள்? தன் தந்தையிடம் இவனைச் சிஷ்யனாகச் சேர்க்க அவள் நினைத்தால்  முடியாதா என்ன? தன் புதல்வியின் வேண்டுகோளைச் சுக்கிராச்சாரியாரும் மறுப்பாரா என்ன? கசன் தேவர்களுக்கு உதவ முன்வந்தான். தன் தந்தை பிரகஸ்பதியை வணங்கி ஆசிபெற்றான். பின் அசுரகுரு சுக்கிராச்சாரியார் ஆசிரமம் நோக்கிச் சென்றான். ஆசிரமத்திற்கு வெளியே நந்தவனத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தாள் தேவயானி. அவள் அருகே சென்றான் கசன். 

அவனை நிமிர்ந்து பார்த்த தேவயானி, அவனது பேரழகைக் கண்டு மயங்கியவளாய் பூக்கூடையை நழுவ விட்டாள். கசன் பணிவோடு கீழே விழுந்த  பூக்களையெல்லாம் எடுத்து அந்தக் கூடையில் இட்டு அவளிடம் நீட்டினான். பின் அவளைப் பற்றி ஒன்றுமே அறியாதவன் போல அப்பாவியாக முகத் தை வைத்துக்கொண்டு, அவள் எந்த உலகத்துத் தேவதை என்று விசாரித்தான்! இந்த நாசூக்கான புகழ்மொழி தேவயானியின் உள்ளத்தைக் குளிர்வித்தது. அவள் மணிகளை உருட்டி விட்டாற்போல், முத்துப் பல்வரிசை தெரியக்  கலகலவென்று சிரித்தாள். தான் சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி என்று தெரிவித்து அவன் யாரெனக் கேட்டாள்.
 
கசன் தான் கல்வி கற்க விரும்பும் ஒரு பிரம்மச்சாரி என்றும் அவள் தந்தையிடம் சீடனாகச் சேரும் ஆவலிலேயே வந்திருப்பதாகவும் அவளால்  தனக்கு உதவ இயலுமா என்றும் கெஞ்சலுடன் கேட்டான். ஒரு பேரழகனின் கெஞ்சலை அவனால் கவரப்பட்ட ஒரு பேரழகியால் எப்படி மறுக்க முடியும்? அவள் சிரித்துக்கொண்டே அவனைத் தன் தந்தையிடம் அழைத்துச் சென்றாள். ‘‘தந்தையே! உங்களுக்கொரு சீடனைக் கூட்டி வந்திருக்கிறேன்!’’ என்று அறிமுகப்படுத்தினாள். சுக்கிராச்சாரியாரும் அவன் அழகைப் பார்த்து வியந்தார். தன் மகள் மனத்தை அவன் கவர்ந்திருக்கக் கூடும் என ஊகித்தார். ‘‘பெரிய இடத்துப் பரிந்துரையோடு வருகிறபோது நான் இவனை சீடனாக சேர்த்துக் கொள்ளாமல் எப்படி மறுக்க முடியும்?’’ என்று மகளைப் பார்த்து நகைத்தார். 

‘‘போங்களப்பா!’’ என்று வெட்கத்தோடு ஆசிரமத்தின் உள்ளே ஓடினாள், தேவயானி. இவ்விதமாகக் கசன் சுக்கிராச்சாரியாரின் சீடனானான். ‘‘சீடனே! சஞ்சீவி மந்திரம் தவிர மற்ற அனைத்தையும் உனக்குக் கற்பிப்பேன். சஞ்சீவி மந்திரம் மட்டும் எனக்குத் தனி உரிமையானது. அதை நான் யாருக்கும் கற்பிப்பதற்கில்லை!’’ என்றார், குரு. கசன் மனம் சற்றுத் துவண்டது. என்றாலும்  காலம் கனியுமென்று காத்திருந்தான். காலம் கனியத்தான் செய்தது. ஆனால், அதன் பொருட்டு அவன் மூன்று முறை மீண்டும் மீண்டும் இறக்க நேர்ந்தது! அசுரர்கள் கசனை சந்தேகக் கண்கொண்டு பார்த்தார்கள். 

திடீரென ஒரு புதியவன் தங்கள் குருவிடம் சீடனாக சேரவேண்டிய அவசியம் என்ன? சஞ்சீவி மந்திரத்தை அபகரிப்பதற்காக தேவர்கள் செய்யும் சூழ்ச்சியாகத்தான் இது இருக்கும் என்று அவர்கள் சரியாகவே ஊகித்தார்கள். எது எப்படியானாலும் சந்தேகத்தின் பலன் எதிரிக்குப் போய் சேரக் கூடாது, அவன் சஞ்சீவியைக் கற்க வந்தானோ இல்லையோ, அவனை ஒழித்துக் கட்டுவதே தங்களுக்குப் பாதுகாப்பானது என்றும் தீர்மானித்துக்கொண்டார்கள். ஒருநாள் குருவின் உத்தரவுப்படி மாடுமேய்த்துக் கொண்டிருந்தான் கசன். அவனை அசுரர்கள் ஒன்று சேர்ந்து கொன்றார்கள். பின் அவன் உடலைத் துண்டு துண்டாக வெட்டி வன விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தீனியாகப் போட்டார்கள். இனி அவனால் எந்தத் தொந்தரவும் இல்லை என நிம்மதி  அடைந்தார்கள். 

கசன் மேல் உயிரையே வைத்திருந்த தேவயானி அவன் இரவு நெடுநேரமாகியும் ஆசிரமத்திற்கு வரவில்லையே என்று தந்தையிடம் புலம்பினாள்.  மேய்ச்சலுக்குப் போன மாடுகள் வழிதெரிந்து திரும்பிவிட்டன. மேய்த்தவன் வரவில்லையென்றால் என்ன பொருள்? சுக்கிராச்சாரியார் ஒருவேளை அவன் இறந்திருக்கலாம் என்று யூகித்தார். சஞ்சீவி மந்திரத்தை ஜபித்து, ‘‘கசனே! எங்கிருந்தாலும் வா!’’ என்று கூவி அழைத்தார். அடுத்த கணம் நிகழ்ந்த செயல் விந்தையானது. அவன், தன் மாமிசத்தைச் சாப்பிட்ட விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு மாமிசத் துணுக்குகளாக வெளிப்பட்டான். பின் இணைந்து ஒரே உடல் பெற்றான். ஓடிவந்து தன் குருவைப் பணிந்தான்! அதன் காரணமாக  அன்று கானகத்தில் ஏராளமான விலங்குகளும் பறவைகளும் வயிறு கிழிந்து இறந்தன. 

தேவயானியிடம் நடந்ததைச் சொன்னான் அவன். எப்படியோ மீண்டும் அவன் உயிர்பெற்று விட்டது குறித்து தேவயானி மகிழ்ச்சி அடைந்தாள். ஓர்  உயிரைக் காப்பாற்ற விலங்குகள், பறவைகள் எனப் பலவற்றின் உயிர் மாய்க்கப்பட்டதை எண்ணிச் சுக்கிராச்சாரியார் மனம் வருந்தினார். கசன் உயிர்பெற்ற விவரம் அறிந்த அசுரர்கள் அவன் மேல் கடும் விரோதம் கொண்டார்கள். ஒருநாள் அவன் பூஜைக்காகப் பூக்கொய்து கொண்டிருந்த நேரத்தில், மறுபடி அவனைக் கொன்றார்கள். இம்முறை அவன் மீண்டு வரக்கூடாது என்று உடலை, மாமிசத் துணுக்கே மீதமில்லாமல் சுட்டுச் சாம்பலாக்கி, அந்தச் சாம்பலை சமுத்திரத்தில் கரைத்தார்கள்.

தேவயானி மறுபடியும் தன் தந்தையிடம் அழுது புலம்பினாள். சுக்கிராச்சாரியார், அசுரர்கள் கசனை விரோதியாகக் கருதுவதால் மறுபடி மறுபடிக்  கொல்வதாகக் கூறி, ஏன் தேவயானி அவனை மறக்கக் கூடாது என்று கேட்டார். ‘‘மறக்க முடியவில்லையே’’ என்று அரற்றினாள் தேவயானி. அவளது  கண்ணீரைக் கண்ட சுக்கிராச்சாரியார் மனந்தாளாமல், சஞ்சீவி மந்திரம் ஜபித்து, ‘‘சீடனே வா’’ என அழைத்தார். கடல் அலைகளிலிருந்து ஒன்று  சேர்ந்த அவன் மீண்டும் வந்து சுக்கிராச்சாரியாரை நமஸ்கரித்தான். அசுரர்கள் திகைப்படைந்தார்கள். இனி கசனை நிரந்தரமாக ஒழித்துக் கட்ட என்னதான் செய்வது? திடீரென அவர்களில் ஒருவனுக்கு விந்தையான ஒரு யோசனை தோன்றியது. அதை மற்றவர்களிடம் சொன்னபோது எல்லா அசுரர்களும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தார்கள்.

இம்முறை கசனைக் கொன்ற அசுரர்கள் அவன் உடலைச் சுட்டுச் சாம்பலாக்கியதோடு நிற்கவில்லை. அதை சோமபானத்தில் கலந்து, ‘குருவே! தங் களுக்காகத் தயாரிக்கப்பட்ட விசேஷமான பானம் இது!’ என்று அவரை நம்பவைத்து அவரையே அருந்தச் செய்தார்கள்! இப்போது கசன் சஞ்சீவி மந்திரத்தின் மூலம் வெளிப்பட வேண்டுமானால் குருவின் வயிற்றைக் கிழித்துக் கொண்டுதான் வெளிப்பட வேண்டும்! குரு  எப்படி, தான் இறக்கச் சம்மதிப்பார்! கசன் கதை முடிந்தது என்று அசுரர்கள் திருப்தி அடைந்தார்கள். ஆனால், அந்தத் திருப்தி நிலைக்கவில்லை. அது ஒரு விபரீதத்தில் முடிந்தது. வழக்கம்போல் தேவயானி தன் தந்தையிடம் அசுரர்களால் கொல்லப்பட்ட கசனை உயிர்ப்பிக்குமாறு அழுதாள். 

மகளின் சோகத்தைத் தாங்க இயலாது சுக்கிராச்சாரியார் சஞ்சீவி மந்திரம் ஜபித்து அவனை அழைத்தார். அவரது வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வரத் தயங்கிய கசன், வயிற்றின் உள்ளிருந்தே குரல் கொடுத்தான். சுக்கிராச்சாரியார் திகைத்தார். அசுரர்களின் முட்டாள்தனத்தை எண்ணிக் கடும் சீற்றமடைந்தார். 
ஆனாலும் இனிச் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. தன் மகளை அழைத்தார். ‘‘தேவயானி! முடிவுசெய்து கொள். உனக்கு யார் வேண்டும்? நானா,  கசனா? கசன் என் வயிற்றில் இருக்கிறான். நீ சொன்னால் அவன் என் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்டு விடுவான். ஆனால், நீ என்னை  இழப்பாய். சம்மதமா?’’ என்று கேட்டார்.

தேவயானி திகைத்துப் பதறினாள். தந்தை, கசன், இருவரையும் தான் இழக்க விரும்பவில்லை என்றாள். இருவரில் ஒருவர் இறந்தாலும் தானும் இறப் பது உறுதி என்றாள். எந்த முறையிலேனும் இருவரும் உயிர் பிழைக்க உபாயம் தேடுமாறு வற்புறுத்தினாள். சுக்கிராச்சாரியார் யோசித்தார். இனி வேறு வழியில்லை. கசனுக்கு அவன் தன் வயிற்றில் இருக்கும்போதே சஞ்சீவி மந்திரத்தை உபதேசித்தார். அவன் தன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்டதும் உபதேசிக்கப்பட்ட சஞ்சீவி மந்திரத்தின் மூலம் அவன் தன்னை உயிர்ப்பிக்க வேண்டும் எனக்கட்டளையிட்டார். கசன் தன் எண்ணம் நிறைவேறுவதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். சஞ்சீவி மந்திர உபதேசத்தைப் பெற்றான். குருவின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளிப்பட்ட அவன், தனக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத்தின் மூலம் தன் குருவையும் உயிர்ப்பித்து விட்டான். 

அசுரர்களிடம் அவர்களின் முட்டாள்தனத்தால் கசன் சஞ்சீவி மந்திர உபதேசம் பெற்றுவிட்டான் என்று கூறி சுக்கிராச்சாரியார் அவர்களைக் கண்டித்தார்.  அவர்கள் வெட்கத்துடன் தலைகவிழ்ந்து சென்றார்கள். தேவயானி கசனிடம் வந்து தான் அவனைக் காதலிப்பதாகவும் தன்னை மணம் புரிந்துகொள்ளுமாறும் வேண்டினாள். கசன் அவளையே கூர்மையாகப் பார்த்தான். பின்னர் சொன்னான்: ‘‘பெண்ணே! நீ தான் என்னைக் காதலித்தாய். நான் ஒருபோதும் உன்னைக் காதலிக்கவில்லை. சஞ்சீவி மந்திர உபதேசம் பெறத்தான் உன் தந்தையின் சீடனானேன். குருவின் மகள் சகோதரி ஆவாள். தவிர நான் உன் தந்தை வயிற்றில் சிறிது நேரம் இருந்தேன்.  அந்த வகையிலும் உன் சகோதரனாகிறேன்! விடைபெறுகிறேன்.’’

அவன் விடைபெற்றுச் செல்வதைக் கண்ணீர் வழிய வழியப் பார்த்துக் கொண்டிருந்தாள் தேவயானி. தன் மகளைத் தேற்றிய சுக்கிராச்சாரியார் சொன் னார்: ‘‘மகளே! திருமண விஷயத்தில் விதிப்படிதான் மணவாழ்க்கை அமையுமே தவிர, நாம் விரும்பிய ஒரே காரணத்தால் அவ்விதமே மணவாழ்க்கை  அமையாது. காதல் திருமணமோ நிச்சயித்த திருமணமோ எது நடந்தாலும் அதுவே விதியின் கட்டளை என ஏற்று அமைதியாக வாழ்க்கை நடத்த வேண்டும். உன் கண்ணீரைத் துடை. இன்னொருவன் வருவான். அவன் பல விதங்களில் இவனை விட உனக்குப் பொருத்தமானவனாக அமைவான்!’’ தந்தை சொற்படிக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் தேவயானி.   

வானுலகம் சென்ற கசனைத் தேவர்கள் வெகு பிரியமாக வரவேற்றார்கள். தாங்கள் இறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக மூன்று முறை இறந்த  அவனை அவர்கள் கட்டி அணைத்துப் பாராட்டினார்கள். கசனின் தந்தையும் தேவகுருவுமான பிரகஸ்பதியின் மனம் அந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தது.  (மகாபாரதம் உத்தியோக பர்வம் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தக் கதை, காதலித்தாலும் காதலிக்கா விட்டாலும் ஒருவரின் மணவாழ்வு விதிப்படியே அமையும் என்பதையும், காதல் நிறைவேறாவிட்டால் வருந்துவதில் அர்த்தமில்லை என்பதையும் காதலைவிட ஒவ்வொருவரின் வாழ்க்கையே  முக்கியமானது என்பதையும் விளக்குகிறது.)

No comments:

Post a Comment