Tuesday, October 6, 2015

சந்திரன் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

நிலவோடு பெண்ணை ஒப்பிட்டு பாடுவது கவிஞர்களுக்கு வழக்கமானதுதான்! ஆனால், அது வெறும் வர்ணனை அளவில்மட்டும் அல்லாமல், இயற்கையாகவே சந்திரனின் தாக்கங்கள் மனிதர்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றன. குறிப்பாக பெண்கள் சந்திர சுழற்சியோடு இயைந்தே உள்ளனர். எப்படி…? தொடர்ந்து படித்து அறியுங்கள்! சத்குரு: நமது வாழ்க்கை என்பது காலமும் சக்தியும் கலந்த ஒரு கலவையாக இருக்கிறது. இதில் காலம் அல்லது நேரம் என்பது யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தக் காலத்தை அளப்பதற்கு நாமே சில வழிமுறைகளை கண்டுபிடித்து பயன்படுத்துகிறோம். பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வந்தால் அது ஒரு நாள். சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு மாதம். பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வந்தால், அது ஒரு வருடம். அடிப்படையில் நேரத்தைப் பற்றிய நம்முடைய கணிப்பு, சூரியனைச் சுற்றி பூமியின் இயக்கம் மற்றும் பூமியைச்சுற்றி சந்திரனின் இயக்கம் ஆகிய இரண்டு விஷயங்களைப் பொறுத்தே இருக்கிறது. மேலும் சூரியன் மற்றும் சந்திரனைப் பொறுத்து, அந்தந்தக் காலகட்டத்தில் பூமி இருக்கும் இடம், நம் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் இரண்டு அடிப்படை அம்சங்களான ‘நேரம்‘ மற்றும் ‘சக்தி’ பெரும்பாலும் சூரியனாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இந்த பூமிக்கு முக்கியமாக சூரியனிலிருந்துதான் சக்தி கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் உடல் என்பதும் அந்த பூமியின் ஒரு சிறு துகள்தான். எனவே உங்களுக்கும் முக்கியமாக சூரியனிலிருந்துதான் சக்தி கிடைக்கிறது. எனவே எவ்வளவு தூரம் உங்களால் சூரியனின் சக்தியை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதைப் பொறுத்து உங்கள் சக்தி தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே சூரியனைச் சுற்றிவரும் பூமியின் நகர்வு, நேரத்தைத் தீர்மானிப்பதற்கான அளவுகோலாக மட்டும் அல்லாமல், நாம் எவ்வளவு சக்தியுடன் இருக்கிறோம் என்பதையும் தீர்மானிக்கிறது. ஆகவே வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் இரண்டு அடிப்படை அம்சங்களான ‘நேரம்‘ மற்றும் ‘சக்தி’ பெரும்பாலும் சூரியனாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இந்த உலகில் இருக்கும் அனைத்தின் மீதும் சூரியனுக்கு இருக்கும் ஆதிக்கம் மிகப் பெரியது. சந்திரனால் சூரியனைப் போல் சக்தியை வெளியிட முடியாது என்றாலும் அது பூமிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால் அதுவும் நம்முடைய உடல், மன அமைப்புகளின் மேல் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு இயந்திரத்தை சுழல வைத்துத்தான் நாம் மின்சக்தி தயாரிக்கிறோம். அதேபோல சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது, அந்த சுழற்சியால் அங்கு சக்தி உருவாகிறது. எனவே சந்திரனுடைய ஆதிக்கம் பூமியின் மேல் காந்த ஈர்ப்பு சக்தியாக இருக்கிறது. எனவேதான் நமக்கு நடக்கும் வெளிப்புற வாழ்வை புரிந்து கொள்ள சூரியனையும் உள்புற வாழ்வை புரிந்து கொள்ள சந்திரனையும் பார்க்கிறோம். யோக வழிமுறை, ஒரு குறிப்பிட்ட எல்லைவரை, இவ்விரண்டையும் சார்ந்துதான் இருக்கிறது. அந்த எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்டால், இவற்றின் தாக்கத்திலிருந்து நீங்கள் விடுதலை ஆகிவிடுவீர்கள். எனவே யோகாவின் நோக்கமே சுழற்சியுடன் இருக்கும் பூமி மற்றும் சந்திரன் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதுதான். இந்த இரண்டின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு விட்டால் பிறகு சூரியன் என்பது உங்களுக்கு வெறும் ஒளி ஆதாரமாக மட்டுமே இருக்கும். அதுதான் யோகாவின் இலட்சியம். ஆனால் இன்றைக்கு நீங்கள் இருக்கும் நிலையில் சூரியனின் ஆதிக்கம் உங்கள் மேல் மிக அதிகமாக இருக்கிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில், சந்திரன், கடலில் பேரலைகளை ஏற்படுத்தி மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்குவது உங்களுக்குத் தெரியும். அதாவது கடல் நீர் முழுதும் அந்த இரு நாட்களில் அல்லது அதைச் சுற்றியுள்ள நாட்களில் மேலெழும்புகின்றன. தண்ணீர் மட்டுமல்ல, அனைத்துமே மேலெழும்புகின்றன. ஆனால் நீரில் அது கண்கூடாகத் தெரிகிறது. உங்கள் உடலில் கூட எழுபது சதவிகிதத்திற்கும் மேல் நீராக இருப்பதால், அந்த இரு நாட்களில் உங்கள் உடலில் இருக்கும் நீரும் வேகமாக மேலெழும்பலாம். குறிப்பாக உங்கள் மூளையில் எழுபத்தி எட்டு சதவிகிதம் நீராக இருக்கிறது. எனவே சந்திரனின் தாக்கம் மூளையின் மேல் அதிகமாக இருக்கும். மனோரீதியாக பலவீனமான மனிதர்கள் அன்றைய தினத்தில் மேலும் சமநிலை தவறுகிறார்கள் என்பதை நாம் கவனித்திருக்கிறோம். அதாவது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில், மனிதனின் மேல் சந்திரனின் தாக்கம் இருக்கும்போது, மனிதன் எந்த தன்மையில் இருக்கிறானோ அந்த தன்மை மேலும் சிறிது அதிகமாகிறது. மேம்பட்ட தன்மையில் இருந்தால் மேலும் மேம்பாடு அடைகிறது. பாதிப்புத் தன்மையில் இருந்தால், அந்தப் பாதிப்பு இன்னமும் அதிகமாகிறது. ஆனால் பாதிக்கப்படுவதை மட்டும் மனிதன் நன்றாக உணர்கிறான். தன்மை மேம்படும்போது அது நமக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் இது மனிதனின் குணம். உங்கள் உடலில் ஏதாவது நன்றாக நடந்தால் அது உங்கள் கவனத்திற்கு வருவதில்லை. ஆனால் உடல் ஏதாவது காயப்பட்டால் அது உடனே உங்கள் கவனத்திற்குள் வருகிறது. சந்திரனின் சுழற்சிகளும், பெண் உடலில் இருக்கும் உயிரியல் சார்ந்த சுழற்சிகளும் நூறு சதவிகிதம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சந்திரனின் சுழற்சிகளும், பெண் உடலில் இருக்கும் உயிரியல் சார்ந்த சுழற்சிகளும் நூறு சதவிகிதம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. எனவே நமது பிறப்பின் அடிப்படையே கூட சந்திரனின் சுழற்சிக்குத் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே நமது உடல், மனக் கட்டமைப்பின் மீது சந்திரனுக்குள்ள ஆதிக்கம் மறுக்க முடியாதது. எனவே உள்தன்மை பற்றி அக்கறை கொண்டிருக்கும் அத்தனை கலாச்சாரங்களும், இயல்பாகவே சந்திர நாள்காட்டி, மற்றும் சந்திரசூரிய நாள்காட்டியை பயன்படுத்தினார்கள். பஞ்சாங்கம் என்றழைக்கப்படும் இந்தியாவின் பாரம்பரிய நாள்காட்டியை இன்று மிகச் சிலர்தான் பின்பற்றுகிறார்கள். இது ஒரு சந்திரசூரிய நாள்காட்டியாகும். சந்திரசூரிய நாள்காட்டி என்பது சந்திரனின் தாக்கம் உள்ள நாள்காட்டி என்றாலும் 100 சதவீதம் சந்திர நாள்காட்டி கிடையாது. இந்தியப் பஞ்சாங்கங்கள் சூரியன் மற்றும் சந்திரன் இரண்டின் இயக்கங்களையும் கவனத்தில் கொள்கிறது. சந்திரன், சூரியன் இரண்டின் இயக்கத்தையும் இவர்கள் சேர்த்துப் பார்த்ததற்குக் காரணம், உள்நிலை மற்றும் வெளிநிலை வளர்ச்சி இரண்டின் மீதும் இவர்களுக்கு ஈடுபாடு இருந்ததுதான். இதுதான் ஒரு நாள்காட்டியை உருவாக்குவதற்கான மிக புத்திசாலித்தனமான வழி. துரதிருஷ்டவசமாக இன்றைய நாட்களில் இது போன்று ஒரு நாள்காட்டி இருப்பதுகூடத் தெரியாமல் மக்கள் இருக்கிறார்கள். சூரியன் பூமத்திய ரேகையைக் கடந்து செல்லும் காலத்தில் பகலும் இரவும் சமமான ஒரு நாள் வருகிறது. அந்த நாளுக்கும் அடுத்த சில நாட்கள் கழித்து, தமிழ் வருடம் துவங்குவதாக நமது பஞ்சாங்கத்தில் கணித்திருக்கிறார்கள். அதாவது இந்திய நாள்காட்டியின்படி தமிழ்ப் புத்தாண்டு ஆங்கில ஏப்ரல் மாதத்தில் துவங்குகிறது. அது புத்துணர்ச்சி மலரும் காலம். அப்போது எல்லா உயிர்களும் புத்துணர்ச்சியுடன் தீவிரத் தன்மையுடன் இருக்கின்றன. ஒளிச்சேர்க்கை அதிகமாக இருப்பதால் தாவரங்களின் வளர்ச்சியும் உச்சத்தில் இருக்கிறது. மரங்கள் இல்லாமல் செய்து விட்டதால் கோடை வருகிறது என்றாலே பயப்படுகிறோம். ஆக, இது மனிதன் செய்த தவறு. மற்றபடி மனிதர்க்கும், இந்த மாதம், அந்த வருடத்திலயே வளர்ச்சிக்கு உகந்த மாதம். இருநூறு வருடங்களுக்கும் மேலாக அந்நிய படையெடுப்பின் கீழ் இருந்ததால், நம்முடைய நாள்காட்டியை இழந்துவிட்டோம். மக்கள் விசேஷங்கள் மற்றும் திருமணங்களுக்கு நாள் குறிப்பதற்கு மட்டுமே அந்த நாள்காட்டியை பயன்படுத்துகிறார்கள். ஆங்கில நாள்காட்டி என்பது எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் ஒரு வருடத்தை வெறுமனே பனிரெண்டு மாதங்களாகப் பிரித்து வைத்திருக்கிறது. ஆங்கில நாள்காட்டியைப் பின்பற்றுபவர்களுக்கு, என்று அமாவாசை வருகிறது, என்று பௌர்ணமி வருகிறது என்பதெல்லாம் தெரியாது. பௌர்ணமி என்பது ஆச்சர்யமான அழகான விஷயம். உங்களால் ஒரு பௌர்ணமியைக் கூட கவனிக்காமல் இருக்க முடிந்தால், என்ன மாதிரி வாழ்க்கை இது? கண் இருந்தும் பார்க்கத் தெரியாதவர்கள்தான் இதைத் தவறவிடுவார்கள். ஒருவேளை அவர்கள் மூளையில் எழுபத்திஎட்டு சதவிகித நீருக்கு பதிலாக கான்க்ரீட் கலவை இருக்கிறதோ, என்னமோ? நமது பஞ்சாங்கத்தின்படி, ஒரு தினத்தின் திதியைச் சொன்னாலே நீங்கள் சந்திரனின் அன்றைய நிலையைத் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் சந்திரனின் நிலையைத் தெரிந்து கொள்வது நமது உள்நிலை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. அந்த அறிவுணர்ச்சியுடன் இந்திய நாள்காட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் மேல் சூரியன் அல்லது சந்திரனின் தாக்கம் இல்லாதபடி செய்துகொள்ள வழிகள் இருக்கின்றன. அது வேறு விஷயம். ஆனாலும் உங்கள் வாழ்க்கையில் இன்றைக்கு அவற்றின் ஆதிக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய தினம் சிறிது சந்திரன் தொடர்புள்ள நாள் என்று நீங்கள் தெரிந்து கொள்ளும்போது, நீங்கள் சிறிது எச்சரிக்கையுடன் இருக்க முடியும். ஆனால் இப்போது உங்களுக்கு அதைப் பற்றித் தெரியாமல், தவறானபடி விஷயங்களைத் திட்டமிட்டு, வாழ்க்கையில் அனைத்து விதமான தேவையற்ற சூழ்நிலைகளிலும் சிக்கிக் கொள்கிறீர்கள். ஏனென்றால் உங்கள் பிறப்பு, வாழ்க்கை, மரணம் இவற்றின் மேல் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் இரண்டு மிக முக்கியமான கோள்களுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேயில்லை. அலுவலகம் போன்ற அன்றாடப் பணிகளுக்கு ஆங்கில நாள்காட்டியே இருந்துவிட்டுப் போகட்டும். அதேநேரத்தில், சந்திரனின் நிலையைப் பார்க்கவாவது, நம்முடைய பழைய நாள்காட்டியையும் பார்க்க சிறிது கற்றுக் கொள்ளுங்கள். சந்திரன் நிலையைத் தெரிந்து கொள்வது, உங்களை நீங்கள் இன்னும் அதிகமாகப் புரிந்து கொண்டு உங்களை இன்னும் சிறப்பாகக் கையாள்வதற்கும், உங்கள் உள்நிலைப் பயணத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உள்நிலையில் பயணம் செய்ய விருப்பமில்லாமல் ஒரே இடத்தில் நங்கூரமிட்டதைப் போல இருக்க முடிவு செய்துவிட்டால், பிறகு நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. எனவே இந்த நாள்காட்டியின் வழியாக வெளிப்பட்டிருக்கும் நம் முன்னோர்களின் அற்புத அபார அறிவை நாமும் உணர்ந்து உபயோகிப்போம்

No comments:

Post a Comment