Tuesday, October 6, 2015

பிறப்பு – இறப்பு – மறுபிறப்பு… அறியப்படா சூட்சுமங்கள்!

சித்தார்த்தன் ஒரு மரணத்தை முதன்முதலாகப் பார்த்த பின்னர்தான் ஆன்மீகத் தேடல் ஏற்பட்டு புத்தரானான். மரணத்தைப்பற்றி எப்போது ஒருவர் சிந்திக்க துவங்குகிறாரோ அப்போதுதான் ஆன்மீகத் தேடல் உண்டாகிறது. மரணம் குறித்து பல்வேறு தத்துவங்களும் தகவல்களும் இதுவரை நீங்கள் அறிந்திருந்தாலும் சத்குரு இங்கே மரணம் பற்றி பேசுவது மரணத்தை புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது. தொடர்ந்து படியுங்கள்! சத்குரு: மரணம் என்பது என்ன? உங்கள் அனுபவத்தில் இல்லாத எதையும் நீங்கள் நம்பவேண்டாம் என்று நான் உங்களை வலியுறுத்தி வந்திருக்கிறேன். நீங்கள் கேள்விப்பட்ட விஷயத்தில் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களுக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது, அவ்வளவுதான். யாரோ உங்களுக்கு ஒரு கதை சொன்னார்கள், அது உண்மையா உண்மையில்லையா என்று உங்களுக்குத் தெரியாது. எனவே நான் கூட ஏதாவது சொன்னாலும், அதை நீங்கள் நம்பவேண்டாம். அதேநேரத்தில் அதை நம்பாமலும் இருக்க வேண்டாம். யாரோ ஒருவர் இப்போது உங்கள் அனைவர் முன்னிலையிலும் உட்கார்ந்து மிகவும் முட்டாள்தனமாக ஒன்றைப் பேசுகிறார். சரி, இது என்னவென்று பார்ப்போம் என்னும் ஒரு திறந்த மனதுடன் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் உண்மைக்கான சாத்தியக்கூறு எப்போதும் உயிருடன் இருக்கும். உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றை நம்பினாலும் அந்த சாத்தியத்தை அழித்து விடுவீர்கள் அல்லது நம்பாவிட்டாலும் அழித்துவிடுவீர்கள். நீங்கள் எப்போதாவது இறந்திருக்கிறீர்களா? இல்லை, சரி, இறந்த மனிதனையாவது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் எப்போதாவது இறந்திருக்கிறீர்களா? இல்லை, சரி, இறந்த மனிதனையாவது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் இறந்த உடலைப் பார்த்திருக்கலாம். ஆனால் இறந்த மனிதனைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை. நீங்கள் இறந்த மனிதனைப் பார்த்ததில்லை. உங்கள் அனுபவத்திலும் அது இல்லை. நீங்கள் பார்க்கவும் இல்லை. அல்லது இறந்த ஒரு மனிதன் எழுந்து வந்து, ‘நான் இப்படி இறந்தேன். அப்படி இறந்தேன்’ என்று சொன்னதும் இல்லை. நீங்களும் இறக்கவில்லை, இறந்த மனிதனையும் பார்த்ததில்லை. எனவே இறக்கப் போகிறீர்கள் என்னும் கருத்தை எப்படி உருவாக்கிக் கொண்டீர்கள்? இறப்பு என்பது ஒரு கட்டுக்கதை. ஏராளமானவர்கள் இதைப்பற்றி பேசி உங்களை நம்ப வைத்து விட்டார்கள். இறப்பு என்று எதுவும் கிடையாது. உயிர், உயிர், உயிர் மட்டுமே இருக்கிறது. ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்திற்கும், இன்னொரு பரிமாணத்திலிருந்து மற்றோர் பரிமாணத்திற்கும் நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, உடல் மிகவும் தளர்ந்து விட்டாலும் அல்லது ஏதாவது காரணத்தால் முறிந்துவிட்டாலும், அல்லது விபத்தில் சிக்கிக்கொண்டாலும், அல்லது குடித்துவிட்டு உங்கள் கல்லீரலை அழித்துக் கொண்டாலும், அல்லது காதல் தோல்வியால் இதயம் முறிந்து போனாலும் அல்லது மிகவும் வயதாகிவிட்டதால் உடல் தளர்ந்துவிட்டாலும் உயிரை தக்கவைத்துக் கொள்ள இந்த உடலால் முடியாது போனால், உயிர் வேறு ஒரு பரிமாணத்திற்கு நகர்ந்தாக வேண்டும். அதனால்தான் இன்னொரு பரிமாணத்திற்கு உயிர் நகர்ந்து போகிறது. உயிருக்கு என்ன நடக்கிறது? எனவே யாராவது இறந்துவிட்டால் அவர் இனி நம்முடன் இல்லை என்றுதான் நீங்கள் சொல்கிறீர்கள். அவர் இனி இல்லவே இல்லை, உண்மையாகவே அவர் இனி இல்லை என்று நீங்கள் சொல்லவில்லை. அவர், இனி உங்களுடன் நீங்கள் அவரை தெரிந்திருக்கும் விதமாக இருக்கப் போவதில்லை. ஒருவருடைய உடல் ஏதோ ஒரு காரணத்தால் மேற்கொண்டு வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகும்போது, அவர் அந்த உடலைவிட்டுப் போக நேரிடுகிறது. இது நடக்கும்போது அந்த உயிருக்கு என்ன நேரிடுகிறது? பொருள்தன்மையிலான உடலும், விழிப்புணர்வான மனமும் போய்விடுகிறது. மனதின் பகுத்துப்பார்க்கக்கூடிய அம்சம் போய்விடுகிறது. ஆனால் மனதின் தன்மை போகவில்லை. அதாவது அவர் இன்னமும் மனதின் தன்மைகளைக் கொண்டிருக்கிறார், ஆனால் பகுத்துப்பார்க்க முடியாது. உங்கள் தந்தை அல்லது உங்கள் தாயார், உங்கள் கணவன், மனைவி, குழந்தை, இனிய நண்பர் இப்படி யார் இறந்தாலும், அவர் உடலை விட்டு நீங்கிய வினாடியே அவருக்கும் உங்களுக்குமான தொடர்பு முடிந்துவிட்டது. ஏனெனில் அவர் உங்களைப்பற்றி அறிந்திருப்பதெல்லாம் பொருள்தன்மையிலானது, இல்லையா? பொருள்தன்மை என்னும்போது உடல்மட்டுமல்ல, மனம், உணர்ச்சி ஆகியவையும்தான். அவரைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பதும், உங்களைப் பற்றி அவர் அறிந்திருப்பதும், பொருள்தன்மையிலான உடல் அல்லது மனம் அல்லது உணர்ச்சி குறித்துத்தான். அவை பொருள்தன்மைக்குள் வருவதுதான். எனவே அவர் பொருள்தன்மையை விட்டுப் போகும்போது அனைத்தும் நீங்கிவிடுகிறது. அப்போது, நான், எனது இறந்த அப்பா என்றெல்லாம் கிடையாது. அவர் இறந்துவிட்டால், அவர் உங்கள் அப்பா கிடையாது. அவரின் கதை முடிந்துவிட்டது. இறக்கும் தருவாயில்… எனவே மனதின் பகுத்துப் பார்க்கும் தன்மை போனவுடன், அவர் தனது இயல்பின் படியே செயல்படுவார். அதனால்தான் இந்தியாவில், ஒரு மனிதர் எந்த சூழ்நிலையில் இறக்கிறார் என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது, எந்த சூழ்நிலையில் அவர் இறக்கவேண்டும் என்பதை நிர்ணயித்து அந்த சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. அவர் எப்படி வாழ்ந்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவர் இறக்கும் தருணம் வந்தவுடன், ‘ராம், ராம்‘ என்றோ அல்லது வேறெதாவது உச்சரித்தோ மக்கள் தாங்கள் விரும்பும்வண்ணம் அந்த சூழ்நிலையை உருவாக்குகின்றனர். அடிப்படையாக அப்படிச் செய்வதன் பொருள் என்னவென்றால் அவர் இறக்கும்போது பயத்திலோ, பேராசையிலோ, அல்லது இப்படிப்பட்ட காரணங்களாலோ இறக்கக்கூடாது என்பதுதான். ஏனெனில் அவர் இறக்கும் அந்தக் கடைசி தருணத்தில் அவர் மனம் எப்படி இருக்கிறதோ அதுதான் அவருடைய இயல்பாக அவர் இறந்தபின் செயல்படும். விழிப்பிலிருந்து தூக்கத்திற்கு… இன்றிரவு நீங்கள் தூங்கும்போது இதை முயற்சித்துப் பார்க்கலாம். நீங்கள் விழிப்பிலிருந்து தூக்கத்திற்குச் செல்லும் அந்த கடைசி வினாடியை வெறுமனே விழிப்புணர்வுடன் இருந்து பாருங்கள். முடிந்தால் அப்படி முயற்சித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் விழித்திருப்பீர்கள், உங்கள் விழிப்புணர்வை நழுவவிடும்போதுதான் தூக்கத்திற்குப் போவீர்கள். விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால் சில அற்புதங்கள் நடக்கும். அப்படி முடியவில்லையென்றால் தூக்கத்தில் விழும்முன், அந்த கடைசி வினாடிகளில் ஒரு தன்மையுடனாவது இருக்க முயற்சியுங்கள். அந்த நேரங்களில் உங்களுக்குள் அன்பாக இருக்க முடிந்தால், அல்லது மகிழ்ச்சியாக இருக்க முடிந்தால், அதே தன்மை தூக்கத்திலும் தொடர்வதைக் காணமுடியும். விழிப்பிலிருந்து தூக்கத்திற்குச் செல்லும் அந்த கடைசி வினாடிகளில் என்ன தன்மை கொண்டு வருகிறீர்களோ, அந்த குணம் தொடர்ந்து இருக்கும். இதேதான் இறப்பிலும் நடக்கிறது. மரணத்தின் இறுதி தருணங்களில் ஒரு குறிப்பிட்ட குணத்தைக் கொண்டிருந்தால், பிறகு அந்த தன்மை தொடர்ந்து இருக்கும். காசியில் போய் இறப்பது ஏன்? இந்த நம்பிக்கை இருப்பதால்தான், மக்கள் இறக்க விரும்பும்போது மும்பையில் இறக்க விரும்பாமல், காசிக்குச் சென்று இறக்க விரும்புகிறார்கள். இன்னமும் மக்கள் அங்கே செல்கிறார்கள். நிறைய ஞானோதயமடைந்த மனிதர்கள் அங்கிருப்பதால், பல நூற்றாண்டுகளாகவே இலட்சக்கணக்கான மக்கள் அங்கு வந்து காத்திருந்து இறக்கிறார்கள். இறந்துபோவதற்கான மையமாக காசி இருந்துவந்தது. எனவே அங்கு சென்று இறந்தால் தாங்கள் மோட்சம் அடைவதற்கான உதவி கிடைக்கும் என நினைத்தார்கள். சரியான சூழ்நிலையில் இறக்கமுடியும் என நினைத்தார்கள். ஏதாவது காரணத்தால் இந்த உடல் உரிய காலத்திற்கும் முன்னதாகவே உடைந்து விட்டாலும் உயிர்சக்தி மட்டும் இன்னமும் அதிர்வுடன் இருக்கும். விபத்தில் சிக்கி இறந்தாலோ அல்லது அதிகக் குடியின் காரணமாக இறந்தாலோ அல்லது தற்கொலையின் காரணமாக இறந்தாலோ உடல் போய்விடும். ஆனால் உயிர்சக்தி தளர்ந்துவிடாது, அது இன்னமும் அதிர்வுடன் இருக்கும். எனவே அந்த உயிர்சக்தியானது அடுத்த பரிமாணத்திற்குச் செல்ல அதிக காலம் எடுத்துக் கொள்ளும். ஏனெனில் சக்தியானது அதிர்வுநிலையிலிருந்து தளர்வான நிலைக்கு வரவேண்டியுள்ளது. பிராரப்தா கர்மா ‘பிராரப்தா’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிராரப்தா என்பது ஒரு ஆயுள்காலத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட கர்மா. ஏனெனில் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து கர்மாக்களையும் ஒரு ஆயுள்காலத்திற்கே ஒதுக்கிவிட்டால் உங்களால் தாங்கமுடியாது, உங்களால் வாழமுடியாது. உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா குடோன் இருக்கிறது. அதை ‘சஞ்சிதா’ என்று குறிப்பிடுகிறோம். அந்த கர்மா குடோனிலிருந்து இந்த ஆயுளுக்காக மட்டும் என்று குறிப்பிட்ட அளவு கர்மா ஒதுக்கப்படுகிறது. ஏனெனில் குடோனிலுள்ள அவ்வளவு கர்மாவையும் உங்களால் கையாள முடியாது. எனவே இந்த ஆயுளில் கையாள்வதெற்கென்று குறிப்பிட்ட அளவு கர்மா ஒதுக்கப்படுகிறது. ஆனால் பொதுவாக, ஒரு பிறவிக்கென ஒதுக்கப்பட்ட கர்மாவைக் கழிப்பதை விடவும் அந்தப் பிறவியில் புதிதாக சேர்த்துக் கொள்வது அதிகமாக இருக்கிறது. இப்படி கர்மா சேர்ந்து, சேர்ந்து, சேர்ந்து கொண்டே போகிறது. இதன் காரணமாக உயிர்சக்தியில் ஒருவித அதிர்வு இருக்கிறது. அந்த அதிர்வு தளர்ந்து போகாவிட்டால் அந்த உயிருக்கு அடுத்த உடம்பு கிடைக்காது. நீங்கள் இந்த உடலை விடவேண்டுமானால் உங்கள் உயிர்சக்தி தளர்வடைய வேண்டும். இன்னொரு உடலைப் பெற வேண்டுமானால் உங்கள் உயிர்சக்தி தளர்வடைய வேண்டும். இதைத்தான் நாம் சமாதி நிலை எனக் குறிப்பிடுகிறோம். இந்த நிலையில் நீங்கள் விழிப்புணர்வுடன் உயிர்சக்தியின் தீவிரத்தை குறைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் உயிர்சக்தி மிகவும் தளர்வடைந்து போகும்போது, விரும்பினால் நீங்கள் இந்த உடலை விட்டுப் போய்விட முடியும், மேலும் இன்னொரு உடலில் நுழைய முடியும்.

Read more at : 

No comments:

Post a Comment