Sunday, October 25, 2015

பெற்ற மகனிடம் எப்படி நடந்துகொள்வது?

சத்குரு, என் பைக் திருடு போயிருந்த நாள். மிகவும் வருத்தத்துடன் இருந்தேன். அன்றைக்குப் பார்த்து பத்தாம் வகுப்பு படிக்கும் என் மகன் மிகக் குறைவான மதிப்பெண்களுடன் வந்து நின்றான். அவன் உருப்படவே போவதில்லை, நடுத்தெருவில் நிற்பான் என்றெல்லாம் மிகக் கடுமையாகக் கத்திவிட்டேன். அதற்கு அப்புறம் எங்களுக்கு நடுவில் இடைவெளி விழுந்துவிட்டது. அதைச் சரிசெய்வது எப்படி? சத்குரு: ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் விரும்புவது அச்சத்தினாலும் கிடைக்காது… ஆசையினாலும் அடைய முடியாது. அதற்கான திறமையினால்தான் வரும். உங்கள் மகன் படிப்பில்தான் வெற்றிபெற வேண்டும் என்றால், அவனிடம் அதற்கான திறமையை அதிகப்படுத்துவது எப்படி என்று பார்க்க வேண்டும். நீங்கள் மிக மோசமான சூழ்நிலை என்று நினைப்பதிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கிறது. யாராக இருந்தாலும், எந்த அளவு தகுதி இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் கிடைக்கும். கூடுதலாகவும் கிடைக்காது… குறைவாகவும் கிடைக்காது. எதிர்பார்ப்புகளால் எப்போதும் செய்யும் வேலைகளில் கவனத்தைச் சிதறடித்துவிடும். மாறாக, திறமையுடனும் தீர்மானத்துடனும் எதையும் அணுகினால், நடப்பது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும், கவனத்தில் கொள்ளுங்கள்… இந்த வெற்றி, தோல்வி என்பது எல்லாம் நம் மனதில்தான் இருக்கிறது. வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகள் அமைகின்றன. எந்தச் சூழ்நிலை நமக்குச் சாதகமாக அமைகிறதோ, அதை வெற்றி என்று கொண்டாடுகிறோம். எந்தச் சூழ்நிலை நமக்கு சாதகமற்றுப் போகிறதோ, அதைத் தோல்வி என்று துக்கம் கொள்கிறோம். சொன்னால் நம்பமாட்டீர்கள்… நீங்கள் மிக மோசமான சூழ்நிலை என்று நினைப்பதிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கிறது. அதைக் கவனித்துக் கவர்ந்துகொள்வதில்தான் உங்கள் உண்மையான வெற்றி இருக்கிறது. நான் அப்படித்தான் இருக்கிறேன். எனக்குத் தோல்வி என்றால், என்னவென்றே தெரிவதில்லை. என்ன நடந்தாலும் சரி, அதில் என்ன நன்மை இருக்கிறது என்று கவனிக்கிறேன். இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவில் வெடித்த காலம். அடால்ஃப் ஹிட்லரின் நாஜி அமைப்பு பல லட்சம் அப்பாவி மக்களைச் சிறைபிடித்து சித்ரவதை செய்தது. முக்கியமாக, யூதர்களாக இருந்தவர்கள் எல்லாவிதமான அராஜகங்களுக்கும் உட்படுத்தப்பட்டார்கள். அப்போது நடந்த ஒரு சம்பவம் இது… ஹிட்லரின் நாஜி அமைப்பால் ஒரு குடும்பம் சிதறடிக்கப்பட்டது. முதலில் பெரியவர்கள், தொழிலாளர் முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள். மிச்சம் இருந்தது 13 வயதுச் சகோதரியும், எட்டு வயதுச் சகோதரனும்தான். அவர்களையும் சிறை பிடித்து இழுத்துப் போனார்கள். அவர்களைப் போல் இன்னும் எத்தனையோ சிறுவர்கள், சிறுமிகள் பல குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு, ஆட்டுமந்தை மாதிரி ரயில்வே நிலையத்தில் கொண்டு குவிக்கப்பட்டனர். தாங்கமுடியாத குளிர். எப்போதாவது வீசப்படும் சாப்பாட்டைப் பொறுக்கி உண்டுகொண்டு, குளிரிலும் பயத்திலும் நடுங்கிக்கொண்டு, ரயிலுக்காக சிறுவர்கள் காத்திருந்தார்கள். மூன்று குளிர் இரவுகள் கழித்து, ஒரு வழியாக ரயில் வந்தது. எப்படியாவது அதில் ஏறி இடம் பிடித்துவிட வேண்டும் என்று அத்தனைபேரும் வெறியோடு முண்டியடித்துக்கொண்டு ஓடினார்கள். அந்தக் கலவரத்தில், அந்தச் சிறுவன் தன் ஷூக்களை விட்டுவிட்டு ஏறிவிட்டான். ‘டம்… டும்’ என்று ரயிலில் எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. சிறுவன் தன் அக்காவிடம் ஷூக்களை தவறவிட்டதைச் சொன்னான். ஏற்கெனவே அவளுடைய அப்பாவையும் அம்மாவையும் எங்கே கூட்டிப் போனார்கள் என்றே தெரியாத நிலை. தங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்ற அச்சமும் பதற்றமும் வேறு. எல்லாமாகச் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு ஒரேயடியாகக் கோபம் வந்துவிட்டது. இருக்கும் கஷ்டம் போதாதா? இந்தக் குளிரில் ஷூக்கள் இல்லாமல் எப்படி இருக்கப் போகிறாய்? பொறுப்பில்லாமல் ஷூக்களை விட்டுவிட்டு வந்திருக்கிறாயே, முட்டாள் என்று ஆவேசமாகி தம்பியை என்னென்னவோ வார்த்தைகளால் திட்டித் தீர்த்தாள். அடுத்த ரயில் நிலையத்தில், பெண்களையும் பையன்களையும் தனித்தனியே பிரித்து அடைத்தார்கள். அதற்கு அப்புறம், அந்தப் பெண்ணால் தம்பியைப் பார்க்கவே முடியவில்லை. ஒரு கடும்சிறை முகாமில் அடைக்கப்பட்டான். போர் நிறுத்தத்துக்குப்பின் அவள் விடுதலையாகி வெளியே வர மூன்றரை வருடங்கள் ஆகின. அவள் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே உயிரோடு இல்லை என்று அறிந்தாள். தம்பியைக் கடைசிக் கடைசியாகப் பார்த்தபோது, இடைவிடாமல் திட்டித்தீர்த்தாளே, அதுதான் அவள் உறவினரோடு கடைசியாகப் பேசிய வார்த்தைகள். அவள் உருகினாள், ஆனால் உடைந்து போகவில்லை. மனதில் ஓர் உறுதிபூண்டாள். ‘நான் யாருடன் இனி பேசினாலும், அது அவர்களுடன் பேசும் கடைசிப் பேச்சாக இருந்தால் எப்படிப் பேசுவேனோ அப்படித்தான் பேசப்போகிறேன்’. இந்த ஓர் உறுதி எடுத்ததால், அந்த சாதாரணப்பெண் ஒரு மகான்போல் வாழமுடிந்தது. பேரிழப்புகளைச் சந்தித்திருந்தபோதிலும், அதிலிருந்து ஒரு மாபெரும் நன்மையை அவளால் எடுக்க முடிந்தது. அப்புறம், அவளுக்கு ஏது தோல்வி? உங்களுக்கும் அதையேதான் சொல்வேன். எப்போது, யாருடன் பேசினாலும், அவர்களை மறுபடி பார்க்கப் போகிறீர்களா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்பதைக் கவனத்தில் வைத்துப் பேசுங்கள். உங்கள் எதிர்பார்ப்பைத் தள்ளிவைத்துவிட்டு, உங்கள் மகனிடம் ஓர் உற்ற நண்பனாகப் பழகுங்கள். அவனுடைய திறமைகளைக் கூர்தீட்ட உறுதுணையாக இருங்கள். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும், அதில் கிடைக்கக்கூடிய நன்மையில்தான் கவனம் வைப்பேன் என்ற விழிப்புணர்வுடன் ஒருவன் உறுதிகொண்டால், வாழ்க்கையே அவனுக்கு வெற்றிதான். தோல்வி என்பதே கிடையாது

No comments:

Post a Comment