Tuesday, October 6, 2015

எதற்காக மரியாதையை எதிர்பார்க்கிறீர்கள்?

கேள்வி நான் தன்மானம் மிக்க ஒரு போலீஸ் அதிகாரி. பெரும்பாலானவர்கள் எனக்கு எதிரில் அதிர்ந்து பேசக்கூடப் பயப்படுவார்கள். எங்கே போனாலும் எனக்கு அபரிமிதமான மரியாதை கிடைக்கிறது. ஆனால், வளர்ந்துவிட்ட என் மகன், வெளியில் எனக்கு இருக்கும் மதிப்பையும், மரியாதையையும் தெரிந்து கொள்ளாமல், என்னை எடுத்தெறிந்து பேசுகிறான். உடைந்து போகிறேன். என் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல், அவனைத் திருத்துவது எப்படி? சத்குரு: திருத்த வேண்டியது அவனை அல்ல… உங்களை! ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சுயம் எந்த மரியாதையையும் எதிர்பார்க்கவில்லை. சுயமரியாதை என்று ஒன்று கிடையவே கிடையாது. அது கற்பனை உணர்வு. இன்றைக்கு உங்களுக்கு அளவுக்கதிமான மரியாதை தருபவர்களே நாளைக்கு உங்களைத் திரும்பிப் பார்க்காமல் போக நேரலாம். ஒவ்வொரு முறையும், அது உங்களுக்கு வலி தருமேயானால், தவறு உங்களிடத்தில்தான் இருக்கிறது. நீங்கள் மற்றவரிடம் எதற்காக மரியாதையை எதிர்பார்க்கிறீர்கள்? மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புதானே? மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் என்ன? அவர்களும் மற்றவர் கவனத்தைக் கவர்வதற்காகத்தானே அப்படிச் செய்கிறார்கள்? அவர்களை மட்டும் ஏன் தடியடி நடத்திக் கலையச் சொல்கிறீர்கள்? உண்மை என்னவென்றால்… இன்றைய கட்டத்தில், நீங்கள் உள்ளுக்குள் முழுமையாகிவிட்டதாக உணரவில்லை. அரைகுறையாக இருப்பதாக நினைக்கிறீர்கள். காலியிடத்தை இட்டு நிரப்புவதற்கு, உங்களுக்கு மற்றவர்களின் கவனம் தேவைப்படுகிறது. சங்கரன்பிள்ளை தன் நண்பருடன் டென்னிஸ் ஆடிக் கொண்டு இருந்தார். தாரை தம்பட்டத்துடன் ஒரு பிண ஊர்வலம் அவர்களைக் கடந்தது. நண்பர் சட்டென்று நின்றுவிட்டார். கண்களை மூடிக் கைகளைக் கூப்பி, அந்த ஊர்வலம் கடந்து போகும் வரை காத்திருந்துவிட்டு, பின்பு ஆட்டத்தைத் தொடர்ந்தார். “மற்றவர்களிடம் என்னவொரு மரியாதை! உன் செயல் கண்டு நெகிழ்ந்து போகிறேன்” என்றார் சங்கரன்பிள்ளை. நண்பர் சொன்னார்… “முப்பது வருடம் கூட வாழ்ந்தவளுக்கு இதுகூடச் செய்யாவிட்டால் எப்படி?” இப்படிப்பட்ட மரியாதையையா நீங்கள் விரும்புகிறீர்கள்? மரியாதையை அதிகாரத்தினாலோ, பாசத்தினாலோ கேட்டுப் பெறுவது பிச்சை எடுப்பது போல! உணவுக்காகக் கையேந்தலாம். உணர்வுக்காகக் கையேந்தலாமா? உங்களை முழுமையாக்கிக் கொள்வது எப்படி என்று பார்ப்பதை விடுத்து, அடுத்தவர்கள் இடத்தில் மரியாதைக்காகக் கையேந்துவது கேவலம் அல்லவா? உணவுக்காகக் கையேந்தலாம். உணர்வுக்காகக் கையேந்தலாமா? உங்கள் மகன் எப்போதுமா உங்களை அவமரியாதை செய்கிறார்? சில சமயம், மற்றவர் பார்வையில் நீங்கள் வேண்டாதவராகத் தெரிந்தால், அதற்குக் காரணம் நீங்கள்தான் என்பதை அறியுங்கள். அதற்கு யார் மீதாவது, எதன் மீதாவது குற்றம் சொல்லாதீர்கள். எப்போதெல்லாம் நீங்கள் அரைகுறையாக உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் உங்கள் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் தைரியமின்றி, எதன் மீதாவது பழி சுமத்துவதே உங்கள் வழக்கமாகி விட்டது. நீங்கள் இப்படி இருப்பதற்குக் காரணம், உங்கள் கடவுள் அல்ல. உங்கள் பெற்றோர் அல்ல, உங்கள் தன்மானம் அல்ல. முழுக்க முழுக்க நீங்கள்தான். உங்களைச் சரிப்படுத்திக் கொண்டுவிட்டால், எல்லாம் சரியாகிவிடும். உங்களுக்குள் இருக்கும் மோசமான பகுதிக்குத் தன்மானம், சுயமரியாதை என்றெல்லாம் பெயர் வைத்து அழகு பார்க்காதீர்கள். சங்கரன்பிள்ளை தெருவைக் கடக்கும்போது, தெருவோரத்தில் ஒரு தவளையைப் பார்த்தார். “நீ என்னை முத்தமிட்டால், மாறுவேன். உன்னுடனேயே தங்குவேன்” என்று கத்தியது தவளை. சங்கரன்பிள்ளை அதை எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். சற்று நேரம் கழித்துத் தவளை மீண்டும் அவர் பாக்கெட்டிலிருந்து, முத்தமிடச் சொல்லிக் குரல் கொடுத்தது. சங்கரன்பிள்ளை அதை எடுத்துப் புன்னகையுடன் பார்த்துவிட்டு, மீண்டும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். ஒவ்வொரு முறை தவளை பேசியபோதும், அதை அவர் வெளியே எடுப்பதும், புன்னகைப்பதும், பாக்கெட்டில் வைப்பதுமாகவே இருந்தார். தவளை தாங்க முடியாமல் கேட்டுவிட்டது… “என்னய்யா மனிதன் நீ? நீ முத்தமிட்டால், அழகிய பெண்ணாக மாறுவேன் என்கிறேன். சும்மா பார்த்துவிட்டு வைத்துவிடுகிறாயே? விருப்பமில்லை என்றால், ஏன் என்னை எடுத்தாய்?” சங்கரன்பிள்ளை சொன்னார்.. “இதோ பார்.. எனக்கு ஆயிரம் அழகிய பெண்கள் கிடைப்பார்கள்! ஆனால், ஒரு பேசும் தவளை கிடைப்பது அபூர்வம் அல்லவா?” நீங்களும் சங்கரன்பிள்ளை போலத்தான்… ஒரு பேசும் தவளை அழகிய பெண்ணாக உருமாறினால், அந்த அதிசயப் பெண்ணால் எத்தனை வரங்கள் கிடைக்கும் என்பதை யோசிக்காமல், ஒரு பேசும் தவளை கிடைத்ததற்கே திருப்தி அடைந்து விடுகிறீர்கள். வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்வதை ஏன் இப்படித் தள்ளிப் போடுகிறீர்கள்? இன்றைக்கு உங்களுக்கு அளவுக்கதிமான மரியாதை தருபவர்களே நாளைக்கு உங்களைத் திரும்பிப் பார்க்காமல் போக நேரலாம். ஒவ்வொரு முறையும், அது உங்களுக்கு வலி தருமேயானால், தவறு உங்களிடத்தில்தான் இருக்கிறது. என்னைக் கேட்டால், நீங்கள் கசப்பாக உணரும் இந்த மோசமான அனுபவங்கள் எல்லாம் அடுத்தடுத்து உடனே அனுபவித்துவிடுவது கூட நல்லதுதான். வாழ்க்கையின் சின்னச் சின்ன படிப்பினைகளை அறிவதற்குத் தாமதமாகத் தாமதமாக, உங்கள் வாழ்க்கை அல்லவா வீணாகிக் கொண்டு இருக்கிறது? உங்கள் அனுபவங்களுக்கு விதி, தன்மானம், சுய கௌரவம், ரோஷம் என்று எதன் மீதாவது பழி சுமத்திக் கொண்டு இருக்கும் வரை, ஒருநாளும் ஆனந்தத்தின் ருசியை நீங்கள் உணரமாட்டீர்கள். எல்லாவற்றுக்கும் முழு முதற் காரணம் நீங்கள், நீங்கள், நீங்களேதான். இது நீங்கள் தெளிந்துணர வேண்டிய ரகசியம். இதை உணர்ந்துவிட்டால், மிச்சமிருக்கும் வாழ்க்கையையாவது அற்புதமாக, ஆனந்தமாக நடத்திக் கொள்வது எப்படி என்று பார்க்க ஆரம்பிப்பீர்கள்!

 

No comments:

Post a Comment