Tuesday, October 6, 2015

இறந்தவர்கள் மறுபடியும் எப்போது பிறப்பார்கள்?

சில நாட்களுக்கு முன்பு எங்கள் முன்னோர்களுக்கு ஈஷா யோக மையத்தில் காலபைரவ சாந்தி செய்தோம். இப்போது அவர்கள் ஏற்கனவே வேறு எங்காவது மீண்டும் பிறந்திருந்தால் இப்போது சாந்தி செய்ததில் தவறு ஏதுமில்லையா? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன். சத்குரு: காலபைரவரின் கணக்கு நேரம் என்பது ஒரு உயிர் வெவ்வேறு நிலையில் இருக்கும்போது வெவ்வேறு விதமான அனுபவமாக அமைகிறது. ஒரு நிலையில் ஒரு நிமிடம் என்பது 100 ஆண்டுகளாக இருக்கிறது. இன்னொரு நிலையில் 100 ஆண்டுகள் என்பது 1 நிமிடமாக இருக்கிறது. ஒரு முறை ஒரு புத்திசாலி பகீரதப் பிரயத்தனம் செய்து காலபைரவரை சந்தித்தார். அப்போது கால பைரவரிடம், “எங்களுக்கு 100 கோடி ரூபாயாக இருப்பது உங்களுக்கு ஒரு பைசா மாதிரி, எங்களுக்கு 1 கோடி வருடமாக இருப்பது உங்களுக்கு ஒரு வினாடி மாதிரி என்றெல்லாம் சொல்கிறார்களே?” என்று கேட்டார்.. அதற்கு காலபைரவர் சொன்னார், “ஆமாம், உனக்கு எது 100 கோடி ரூபாயாக இருக்கிறதோ, அது எனக்கு 1 பைசா மாதிரிதான்”. உடனே அந்த புத்திசாலி, “ஐயா, அப்படின்னா, எனக்கு ஒரு பைசா கொடுங்களேன்!”. உடனே அதற்கு காலபைரவர் பதில் சொன்னார், “சரி, ஒரு வினாடி காத்திரு!” (அனைவரும் சிரிக்கிறார்கள்) காலமும் நேரமும்… நேரம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி கிடையாது. உயிர் உடலுடன் ஒட்டியிருக்கும்போது நேரத்தின் அனுபவம் ஒரு மாதிரி இருக்கின்றது. உடலுடன் இல்லாதபோது நேரத்தின் அனுபவம் இன்னொரு மாதிரி இருக்கின்றது. இப்போது இந்த கூட்டத்தில் நெருக்கடியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். கால்கள் மரத்துப் போய் விட்டது. உடம்பு மிகவும் பாதிப்பில் இருக்கிறது. இப்போது ஒவ்வொரு நிமிடம் போவதும் உங்களுக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் உடலே இல்லாமல் போய்விட்டது என்றால் அப்போது அந்த உயிருக்கு நேரம் இப்போது தெரிவது போல தெரியாது. நமக்கு 1 வருடமாக இருக்கலாம். ஆனால் அந்த உயிருடைய அனுபவத்தில் அது ஒரு வினாடி மாதிரி இருக்கிறது. ஏனென்றால் அந்த உயிருக்கு இப்போது உடல் இல்லை. உடல் இருப்பதால்தான் நமக்கு வலியும் தெரிகிறது. ஒவ்வொரு நிமிடம் போவதும் நன்றாகத் தெரிகிறது. நேரமாகிக் கொண்டிருப்பதை உங்கள் கால் எடுத்துச் சொல்கிறது. முதுகு சொல்கிறது. உங்கள் வயிறும் சொல்கிறது. ஆனால் நமக்கு நேரம் புரிந்த மாதிரி உடல் அற்றவர்க்கு அது புரியவில்லை. அதனால் உடல் இழந்தவுடன் அந்த உயிருக்கு விரைவில் இன்னொரு கருவறைக்குள் நுழைய முடியவில்லை. ஏதோ சில உயிர்கள் மட்டும்தான், 40 நாளிலேயே இன்னொரு உடலைப் பெற்று விடுவார்கள். ஆனால் அது மிகவும் குறைவு. காலபைரவ சாந்தி யாருக்கு செய்யலாம்? எனவே மிகப் பெரும்பாலான உயிர்கள் இன்னொரு உடல் பெற மிகுந்த காலம் பிடிக்கும். அதனால் அந்த உயிர்களுக்கு நீங்கள் சாந்தி செய்வதே மேல். இப்போது காலபைரவ சாந்தியை (லிங்கபைரவியில், இறந்தவர்களுக்காக செய்யப்படும் சடங்கின் பெயர் காலபைரவ சாந்தி) நீங்கள் உயிரோடு பார்த்த மனிதர்க்கு மட்டும் செய்தால் போதும். நீங்கள் பார்த்திராத உங்கள் முன்னோர்களுக்கு செய்யத் தேவையில்லை. அவர்களுக்கு வேறு மாதிரி செய்ய வேண்டும். ஆனால் நாம் இன்னமும் அதை இங்கு ஆரம்பிக்கவில்லை. நீங்கள் உங்கள் கண்ணால் பார்த்தவர்களுக்கு மட்டும் போதும் என்று ஏன் சொல்கிறோம் என்றால் பொதுவாகவே அந்த உயிர்கள் இங்கேதான் இருப்பார்கள். அவ்வளவு சீக்கிரம் இன்னொரு உடல் தேடியிருக்க மாட்டார்கள். அவர்களில் 99 சதவிகிதம் மீண்டும் பிறந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப் பிறப்பது மிக மிக அரிது. அந்தக் கணக்கில்தான் நாம் காலபைரவ சாந்தி செய்து வருகிறோம். நீங்கள் உயிர் என்று அழைப்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சக்தி. அந்த சக்தி பல வடிவங்களை எடுக்க முடியும். ஒரு உயிர் நன்றாக வாழ்ந்திருந்தால் அந்த சக்தி மிகவும் மென்மையான வடிவமாக இருக்கும். அந்த உயிர் நன்றாக வாழ்ந்திருக்கவில்லை என்றால் அந்த சக்தி கொந்தளிப்பு நிறைந்ததாக, அமைதியற்றதாக இருக்கும். எனவே அந்த உயிர் உடலற்று இருந்தாலும் சரி அல்லது இப்போது உடலுடன் இருந்தாலும் சரி, அந்த உயிருக்கு அமைதியைத் தர காலபைரவ சாந்தி செய்யலாம். அநேகமாக அந்த உயிர் அதற்குள் உடலைப் பெற்றிருக்காது. ஒருவேளை உடல் பெற்றிருந்தாலும் சாந்தி நல்ல பயனையே தரும். உடலற்ற உயிருக்கு பயனளிப்பது போல் இருக்காது என்றாலும் பயன் தரும்.

No comments:

Post a Comment