Wednesday, January 13, 2016

"தன் வினை தன்னை சுடாது விடுமோ?'

"தன் வினை தன்னை சுடாது விடுமோ?'

சிந்து நாட்டு மன்னனுக்கு ஒரே மகன். பெயர் ஜயத்ரதன். அவன் வளர வளர, தீய குணங்களும் அவனிடம் வளர்ந்தன. பிறருக்குத் துன்பம் இழைப்பதைப் பெரும் மகிழ்ச்சியாகக் கருதினான்.

சிந்து மன்னன் விருத்த க்ஷத்திரன் தன் மகன் செய்யும் கொடுமைகளை அறிவான். ஆயினும் ஒரே மகன் என்ற பாசத்தால் அவனைக் கண்டிக்கவில்லை.

திருமணம் செய்து வைத்தால் அவன் கொடுங்குணம் மாறலாம் என்று எண்ணிய தந்தை, அவனுக்கு துரியோதனன் தங்கை துச்செள்ளையைத் திருமணம் செய்து வைத்தான்.

தந்தையின் எதிர் பார்ப்பு வீணானது. திருமணத்துக்குப்பின் ஜயத்ரதன் கொடுமை எல்லை கடந்து போயிற்று.

"இத்தகைய கொடியவனுக்குக் கேடு நேருமே! யாரிடமாவது சிக்கித் தலை அறுப்புண்டு சாகக் கூடுமே! இனி இவனைத் திருத்தவும் இயலாது. இவன் சாகாமல் காக்கவும் வேண்டும். இதற்கு என்ன வழி?' என்று ஆய்ந்தான். "தவம் செய்து இறைவனிடம் வரம் பெற்று ஒரே மகனைக் காப்போம்' என முடிவு செய்தான்.

காட்டின் நடுவே "சியமந்தம்' என்ற குளம் இருந்தது. அதன் கரையெங்கும் மரங்கள் வானூற ஓங்கி வளர்ந்திருந்தன. வெயில் நுழைய முடியாத சோலையாக அது இருந்தது. தவம் செய்வதற்கு ஏற்ற இடம் இதுதான் என்று அதனைத் தேர்ந்தெடுத்தான்.

"என் மகனைக் கொன்று அவன் தலையை நிலத்தில் இடுபவனின் தலை நொறுங்க வேண்டும்' என்று இறைவனிடம் கேட்க வேண்டிய வரத்தையும் தீர்மானித்துக் கொண்டான்.

பல ஆண்டுகள் தவம் செய்தான்; வரமும் பெற்று விட்டான். தவத்தை முடிக்க வேண்டிய தருணம். அந்த சமயத்தில் எதிர் பாராத நிகழ்ச்சி நடந்தது. பாரதப் போரில் அபிமன்யுவை ஜயத்ரதன் வஞ்சனை செய்து கொன்று விட்டான்.

இதை அறிந்த அபிமன்யுவின் தந்தை அர்ஜுனன், "ஜயத்ரதனைக் கொன்றே தீருவேன்' என்று சபதம் பூண்டான். கண்ணன் உதவியால் மறுநாள் மாலை அர்ஜுனன் ஓர் அம்பால் ஜயத்ரதனின் தலையை வெட்டிக் கொன்றான்.

உடனே கண்ணன், ""அர்ஜுனா! அந்தத் தலையை நிலத்தில் பட விடாதே! மேலும் மேலும் அம்பு தொடுத்து சியமந்தகத் தடாகத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் இவன் தந்தையின் கையில் விழச் செய்'' என்றான்.

கண்ணன் சொன்ன படியே அர்ஜுனன் செய்தான். ஜயத்ரதனின் தலை, தவம் செய்து கொண்டிருந்த அவன் தந்தையின் கையில் விழுந்தது. எதிர்பாராது விழுந்தமையால் துணுக்குற்ற தந்தை, தன் மகன் தலையைக் கீழே போட்டான்.

அவன் பெற்ற வரம் பலித்து விட்டது. "என் மகன் தலையை நிலத்தில் இட்டவன் தலை நொறுங்க வேண்டும்' என்பது தானே அவன் பெற்ற வரம்!

இப்போது நிலத்தில் இட்டவன் அவன் தானே! அக்கணமே அவன் தலை நொறுங்கி உயிரிழந்தான். திருந்தாத தீயவனைக் காக்க எண்ணியவன் அத்தீயவனோடு தானும் மாண்டான்.

தீயவர் யாராயினும் திருந்த முயலுதல் வேண்டும். திருந்த இயலாதவன் தீமைக்குத் தக்க தண்டனை தரவேண்டும். அந்தத் தண்டனை பிறர் தந்தால், "தன் வினை தன்னை சுடாது விடுமோ?' என்று ஆறுதல் பெற வேண்டும்.
 

No comments:

Post a Comment