Sunday, January 3, 2016

காந்தாரியின் அந்தச் சாபம் விருஷ்ணிகளை எப்போது எப்படி சாய்த்தது?

காந்தாரியின் அந்தச் சாபம் விருஷ்ணிகளை எப்போது எப்படி சாய்த்தது?
ஒரு மனிதன் வாழ்விலும் தாழ்விலும் ஒரே மாதிரியான அடக்கம், பணிவு, பிறர்க்கு உதவும் பாங்கு இவற்றோடு இருந்தால் அவன் பிறவி எடுத்த பயன் உயர்ந்தது. ஆனால் மனிதன் உயர உயர அகந்தையும், செல்வச் செருக்கும் அவன் கண்களை மறைக்க, தான் சர்வ வல்லமைப் படைத்தவன் எனும் அகந்தை ஏற்படுமானால் அவனது முடிவு நெருங்கிவிட்டது என்பதைக் காட்டும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைச் சார்ந்த விருஷ்ணிகளுக்கு உலகில் தாங்களே மிகவும் உயர்ந்தவர்கள் எனும் செருக்கு, கர்வம் ஏற்பட்டுவிட்டது. அது எல்லை கடந்து போய் விட்டது.
துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணனின் தந்தை வசுதேவர் ஒரு யாகத்துக்கு ஏற்பாடு செய்தார். அதற்காக பாரதவர்ஷத்தின் பல பகுதிகளிலிருந்தும் ரிஷிபுங்கவர்கள் வரத் தொடங்கினர். விஸ்வாமித்திரர், துர்வாசர், வசிஷ்டர், நாரதர் முதலான பல ரிஷிகள் வரத் தொடங்கினர். தான் எனும் அகங்காரமும், செருக்கும் தலைக்கு மேல் போய்விட்ட விருஷ்ணிகள் இந்த ரிஷிகளை அவமானப்படுத்தும் நோக்கத்துடன், கிருஷ்ணரின் மகன் சம்பா என்பவனை ஒரு கர்ப்பமடைந்த பெண்போல வேடம் தரித்து அந்த ரிஷிகளின் முன்பாகக் கொண்டு போய் நிறுத்தி, “முனிவர்களே இந்தப் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும்?” என்று கேட்டனர்.
இவர்கள் தங்களை அவமதிப்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட முனிவர்கள் ஆத்திரத்துடன் சொன்னார்கள், “இவளுக்கு ஒரு இரும்புத் தடி பிறக்கும்; அதுவே உங்கள் விருஷ்ணி குலம் அழிவுக்குக் காரணமாகும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர். உண்மையில் அந்த சம்பாவின் வயிற்றில் கட்டப்பட்டிருந்த துணிகளுக்குள் ஒரு இரும்புத் துண்டும் இருந்தது.
ரிஷிகளின் கோபத்துக்கு ஆளான விருஷ்ணிகள் அச்சமுற்று உக்கிரசேன மகாராஜாவிடம் சென்று நடந்தவைகளை விவரித்தனர். அந்த ரிஷிகளின் சாபம் பலித்துவிடுமே. அந்த இரும்புத் துண்டைப் பொடிப்பொடியாக்கிக் கொண்டுபோய் கடலில் தூவிவிடுங்கள் என்று அரசன் சொன்னான். உடனே விருஷ்ணிகள் அந்த இரும்புத் துண்டை பொடியாக்கினார்கள். பெரும்பாலும் பொடியாகிப் போனாலும், ஒரு சிறு இரும்புத் துண்டு மட்டும் பொடியாகாமல் அப்படியே இருந்தது. அதைக் கொண்டுபோய் கடலில் போட்டுவிட்டு விருஷ்ணிகள் இந்த இரும்புத் துண்டுதானே நம் வம்சத்தை அழிக்கும் இப்போது அதைக் கொண்டு போய் கடலில் போட்டாகிவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
நல்ல வேளை இந்த நிகழ்வுகள் எல்லாம் கிருஷ்ணனுக்குத் தெரியாது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் பரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ணன் இவை அத்தனையையும் நன்கு அறிவான். கடலில் போட்ட அந்த இரும்புத் துகள்கள் கரையொதுங்கி அங்கெல்லாம் வளர்ந்திருந்த நாணல் புதர்கள் மூங்கில் தடிகளைப் போல தடித்து வளர்த்தன.
குருக்ஷேத்திர யுத்தம் முடிந்த பின்னர் கிருஷ்ணன் துவாரகை திரும்பியிருந்தார். அங்கு அவர் முப்பத்தாறு ஆண்டுகள் தர்மத்தோடு ஆட்சி புரிந்தார். தன் பிறப்பின் நோக்கங்கள் அனைத்தும் முடிவடைந்து விட்டது எனும் எண்ணமும் கிருஷ்ணனுக்கு உண்டானது. தன்னுடைய யாதவ குலத்து விருஷ்ணிகளும் நாளாக ஆக அகந்தையின் உச்சிக்குச் சென்றுவிட்டதை கண்ணன் கவனித்தான். எவர் ஒருவருக்கு வேண்டிய செல்வமும், அதிகாரமும், செல்வாக்கும் கிடைத்து விடுகிறதோ அவன் அகந்தையின் உச்சத்துக்குச் சென்றுவிடுவான் என்பதுதான் இந்த உலக வாழ்க்கை சொல்லும் நியதி. ஒரு குலம் அல்லது இனம் அழிவதற்கு எவைகள் எல்லாம் காரணங்களாக அமையுமோ அவைகள் எல்லாம் அவர்களிடம் வந்து சேர்ந்தன. இதன் பயனாக துவாரகையில் மெல்ல மெல்ல தீமைகள் எல்லாம் நடக்கத் தொடங்கின.
கிருஷ்ண பரமாத்மாவின் சுதர்சன சக்கரம் மறைந்து போனது. பாஞ்சஜைன்யம் எனும் கிருஷ்ணனின் சங்கும் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டது. கிருஷ்ணனின் தேரும், பலராமனின் ஏர் ஆயுதமும் காணாமல் போயின. காந்தாரி இட்ட சாபம் பலிக்கத் தொடங்கிவிட்டதோ? கிருஷ்ணனிடம் சென்று பலரும் முறையிட்டனர். செய்த பாவங்கள் தீர மக்கள் தல யாத்திரை போய்வரும்படி கிருஷ்ணன் பணித்தான். மக்களும் கிளம்பினார்கள் ஒரு கிரகண சமயத்தில். அதுவே ஒரு கெட்ட சகுனமாக ஆகிவிட்டது.
தல யாத்திரை புறப்பட்டவர்களுக்குள் குருக்ஷேத்திர யுத்தம் பற்றிய விவாதம் தொடங்கி அவர்களுக்குள் கைகலப்பில் முடிந்தது. பாண்டவர்கள் பக்கம் போரிட்ட சாத்யகிக்கும் கெளரவர்கள் பக்கம் போரிட்ட கீர்த்திவர்மனுக்கும் தகறாறு மூண்டது. இந்த சண்டையில் கீர்த்திவர்மனை சாத்யகி கொன்று விடுகிறான். இவ்விருவரும் சண்டை செய்தபோது மீதமிருந்த யாதவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து கொண்டு ஒருவரையொருவர் கடற்கரையில் உலக்கை அளவில் வளர்ந்திருந்த நாணல் தடிகளைக் கொண்டு தாக்கிக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள்.

No comments:

Post a Comment