Wednesday, January 13, 2016

கண்ணனிடம் ஏமாந்த யசோதை

கண்ணனிடம் ஏமாந்த யசோதை

  கோகுலத்தில்கண்ணனால்பெரும்தொல்லை கோபியருக்கு.
கண்ணனில்லாவிடிலோ தொல்லை. அதைவிடப் பெரும் தொல்லை. தனிமைத் தொல்லை.

        கண்ணனால் தொல்லைகளையும் துன்பத்தையும் அனுபவிக்கவேண்டும் அதை யசோதையிடம் சொல்லி மகிழவேண்டும் இதுதான் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தவர்களல்லவா கோபியர்.

 வசுதேவர் வருவதைக் கூடக் கவனிக்காமல் கோபத்துடன் தயிர் கடைந்து கொண்டிருந்தாள் யசோதை. வசுதேவரும் அவளைப் பார்த்து "ஏன் யசோதா, வழக்கம்போல உன் மகனைப் பற்றி யாரேனும் புகார் கொடுத்தார்களா?"என்றார் மெதுவாக.

      "வேறென்ன, இந்தக் கண்ணனுக்கு எவ்வளவு சொன்னாலும் தெரியவில்லையே. ஊர்வம்பையெல்லாம் விலைக்கு வாங்கி வருகிறான்."  "அப்படி என்ன செய்தானாம் கண்ணன்?"  

"ஒருத்தி புதுப் பாவாடையில் மண் அள்ளிப் போட்டான் என்கிறாள்.ஒருத்தி பின்னலைப் பிடித்து இழுக்கிறான் என்கிறாள். வேரொருத்தியோ  வாயில் கட்டெறும்பைப் பிடித்துப் போட்டுவிட்டான் என்கிறாள். கடைசியில் பழத்தைப் பறித்துக் கடித்து எச்சில் படுத்திக் கொடுத்தான் என்கிறாள் "

"இதோ பார். அந்த கோபியர் என்ன சொன்னார்களோ எனக்குத் தெரியாது.வேண்டுமானால் நீ  கண்ணன்   பின்னால் சென்று பார்."

"சரி உங்கள் சொற்படி நான் அவன் பின்னே சென்று பார்க்கிறேன் என்று வேகமாக வெளியே வந்த யசோதை தெருவில் தான் வருவது தெரியாமல் மறைந்து நின்று கண்ணனைப் பார்த்தாள்.

   தெரு முனையில் ஒருத்தி பின்னலை அசைத்துக் காட்டி நின்றாள். கண்ணன் தன்னைப் பாராமல் போகிறானே என்ற ஏக்கம் அவள் முகத்தில் தெரிந்தது.

சற்று தொலைவில் இன்னொருத்தி பாவடையை பிடித்துக் கொண்டு அழகுடன் நின்றால். அவளையும் கண்ணன் கவனியாதவன் போல் தலை குனிந்து நடந்தான்.

அதேபோல் சற்றுத் தொலைவில் கையில் பழத்தை வைத்துக் கொண்டு ஒருத்தி கண்ணனை வா வா என அழைப்பதைப் போல நின்றாள் இவர்களையெல்லாம் அலட்சியப் படுத்திவிட்டு ஒன்றுமறியாதவன் போல வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன்.

           தன மகன் எவ்வளவு நல்லவனாக இருக்கிறான் இவனைப் பற்றி கோள் சொல்லும் கோபியரைக் கடிந்தவாறே  வீட்டுக்குள் நுழைந்த யசோதை தன மகனுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டாள்.

    கண்ணனும் கள்ளச் சிரிப்புடன் கோபியரோடு தாயும் ஏமாந்து போனதை எண்ணிப் புன்னகைத்துக் கொண்டான்.
       கண்ணனின் கள்ளத்தனம் நம்மையும் புன்னகைக்க வைக்கிறது இல்லையா.

No comments:

Post a Comment