Sunday, January 10, 2016

தூங்க சொல்லித்தரும் மதம் !

உறக்கம் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று என்பதை ஒத்துக்கொள்ளும் நமது மதம் உறக்கத்தின் தத்துவத்தை கூட நமக்கு காட்டுகிறது. மரணம் என்பதும், உறக்கம் என்பதும் பெரிய வித்தியாசம் கொண்டது அல்ல. உறங்கி விழிப்பவன் பழைய உடம்பிலேயே விழிக்கிறான் மரணத்திற்கு  பிறகு விழிப்பவன் புதிய உடம்பில் விழிக்கிறான் அல்லது பிறக்கிறான் என்று கூறி மரணத்தின் மேலே மனிதனுக்கு இருக்கும் அச்சத்தை முற்றிலுமாக விலக்கி விடுகிறது இந்துமதம். இந்த தத்துவத்தை உறங்குவது போல் சாக்காடு உறங்கி விழிப்பது போல் பிறப்பு என்று நமது ஞானிகள் மிக அழகாக சொல்கிறார்கள்.
உறக்கம் தேவை எனும்போது அந்த உறக்கம் ஆரோக்கியமானதாகவும் அமைதியானதாகவும் இருக்க வேண்டும். நமது உடம்பை போட்டது போட்டபடி தாறுமாறாக படுத்து உறங்குவோம் என்றால்  தசைகளும் நரம்புகளும் பிசகி நமக்கு வலியை கொடுக்கும். சரியான முறையில் படுத்து உறங்கினால் தூக்கம் கூட நல்ல உடல் பயிற்சியாக அமைந்துவிடும். அதனால் தான் நமது மத பெரியவர்கள் உறங்கும் போது இடதுபுறமாக ஒருக்களித்து படுக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அதாவது இடது புறமாக படுக்கும் போது நமது மூச்சுக்காற்று வலது நாசி வழியாக போய்வரும். வலது நாசியில் மூச்சு ஓடும் போது உடம்பு மிதமான வெப்பத்தில் இருக்கும். இதனால் இரத்த ஓட்டமும் நுரையிரலும் நல்ல முறையில் இயங்கி நோய் எதிர்ப்பு சக்தியும் நீடித்த ஆயுளையும் நமக்கு தரும். மாறாக இடது நாசியில் மூச்சு ஓடினால் உடம்பில் சீதளம் அதிகமாகி சுவாசகோசம் சளியினால் பாதிப்படைந்து தேவையில்லாத உபாதைகளை தரும்.
வடக்கில் தலை வைத்துப்படுப்பதை நமது மதம் கண்டிப்பாக வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நமது பூமி வடக்கு மூலையில் சற்று தாழ்ந்து இருப்பது நமக்கு தெரியும். அப்படி பள்ளமான பக்கத்தில் தலை வைத்து மேட்டு பக்கமாக கால் நீட்டினால் இரத்த ஓட்டம் முழுமையாக சிரசை நோக்கி செல்லும். இதனால் மூளை கோளாறும் மன அழுத்தமும் அதிகரிக்கும். சாதாரண நிலையில் மூளை இருந்தாலே விபரீதமாக நடக்கும் நாம் கோளாறான மூளையை பெற்றால் என்ன செய்வோம். நம்மையும் கெடுத்து நாட்டையும் கெடுத்துவிடுவோம். இதனால் தான் நமது இந்து மதம் உறங்குவதற்கு சரியான இலக்கணம் வகுத்து தந்திருக்கிறது. அதை கடைபிடித்தால் கெடுதி ஒன்றும் ஏற்படாது.

No comments:

Post a Comment