Wednesday, January 13, 2016

பொறாமையினால் ஏற்படும் துன்பம்

பொறாமையினால் ஏற்படும் துன்பம்

பாண்டுவின் மனைவியர்களான குந்தி, மாதுரி இருவரும் ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். தனது ஓரகத்திகளுக்குப் பிள்ளைப் பேறு உண்டாகியும், தனக்கு உண்டாகாததை எண்ணி பொறாமை கொண்ட பாண்டுவின் அண்ணன் மனைவியான காந்தாரி ஓர் உலக்கையால் வயிற்றில் அடித்துக் கொண்டாள். சில நாள்களில் கர்ப்பமான காந்தாரி ஒரு மாமிசப் பிண்டத்தைப் பெற்றுஎடுத்தாள்!

வியாச முனிவர் அதை நூறு பிள்ளைகளாகவும், ஒரு பெண்ணாகவும் மாற்றினார். அதாவது, காந்தாரியின் பொறாமை நூறு பிள்ளைகளாகவும் பெண்ணாகவும் உருவெடுத்தது. பொறாமையே மனித உருவாகப் பிறந்ததனால், அவர்களில் மூத்தவனான துரியோதன் பாண்டவர்களின் வீரம், புகழ் ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொண்டான். குறிப்பாக, நிகரற்ற உடல் பலம் கொண்டிருந்த பீமனைக் கண்டு மிக அதிகமாகப் பொறாமைப் பட்டான்.
 
அதன் விளைவாக, ஒருநாள் துரியோதனன் தன் சகோதரர்களுடன் சேர்ந்து பீமனுக்கு விஷமளித்து, அவனை நாகப்பாம்புகள் நிறைந்த ஆற்றினில் தூக்கி வீசினர். நாகங்கள் அவனைத் தீண்ட, அவற்றின் விஷம், ஏற்கெனவே துரியோதனன் அளித்த விஷத்தை முறியடித்து விட்டது. ஆற்றில் மூழ்கிய பீமன் ஆற்றின் அடியிலிருந்த நாகலோகத்தை அடைந்தான். நாகராஜா அவனை வரவேற்று உபசரித்து, ஆயிரம் யானைகளின் பலத்தை அவனுக்கு அளித்தான்.
 
உயிர் பிழைத்து வந்த பீமனைக் கண்டு, துரியோதனின் பொறாமை பல மடங்கு பெருகியது. பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரருக்கு சூதாட்டத்தில் ஆசை உண்டு. அதைப் பயன்படுத்திக் கொண்டு அவரை சூதாட்டத்தில் தோற்கடித்த துரியோதனன், பாண்டவர்களை பதின்மூன்று ஆண்டுகளுக்கு நாடு கடத்துகிறான்.
 
பதின்மூன்று ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகும், பாண்டவர்களின் உரிமையை துரியோதனன் தர விரும்பாததால், பாரதப் போர் நிகழ்கிறது. மொத்தத்தில், துரியோதனுடைய பொறாமையினால் மற்றவர்களுக்குத் துன்பமும், இறப்பும் உண்டாகிறது.
 

No comments:

Post a Comment