Monday, March 28, 2016

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!
குருசேத்திர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் தீவிரமாய் போர் செய்து கொண்டிருக்கிறார்கள். கவுரவர் அணியில் இருந்து துரோணர் உக்கரமாய் போர் செய்கிறார். துரோணர் சிறந்த வீரர். அவரை போரிட்டு வெல்ல முடியாது என்பது பகவான் கிருஷ்ணனுக்கு தெரியும்.எனவே துரோணரை தந்திரமாக வீழ்த்த எண்ணுகிறார்.
துரோணரின் ஒரே பலவீனம் அவரது மகன் அஸ்வத்தாமன் மீது அவருக்குள்ள பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் துரோணர் தவித்துப் போய்விடுவார் என்று கணக்கு போடுகிறான் கிருஷ்ணன்.
உடனே கிருஷ்ணன் தருமரை அழைத்து சொல்கிறான் " தருமா! துரோணரை போரில் வீழ்த்த உங்களால் இயலாது. எனவே நான் ஒரு உபாயம் சொல்கிறேன். அதன்படி செய்" என்கிறான். தருமர் உடனே ,"சொல் கிருஷ்ணா" என்கிறார்.
கிருஷ்ணன் சொல்கிறான் " தருமா! துரோணருக்கு தன் மகன் அஸ்வத்தாமன் மீது அளவு கடந்த பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் இவர் துடித்துப் போய்விடுவார்.அந்த நேரத்தில் நாம் அவரை வீழ்த்திவிடலாம். அதனால் நீ இப்போது "அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்" என்று சத்தம் போட்டு சொல்.அதை கேட்டவுடன் அவர் போரை நிறுத்திவிடுவார். பிறகு அர்ஜுனன் அவரை தாக்கட்டும்"
.இதைக்கேட்ட தருமர் , "கிருஷ்ணா! என்னைப் பற்றி நன்கு அறிந்த நீயா இப்படி சொல்கிறாய். எந்த காரணம் கொண்டும் நான் பொய் சொல்ல மாட்டேன் என்பது உனக்கு தெரியாதா? நான் நிச்சயம் இந்த பாவத்தை செய்யமாட்டேன் " என்கிறார்.
கிருஷ்ணன் யோசிக்கிறான்."இந்த தருமனை பொய் சொல்ல வைப்பது சிரமம்.அதேநேரம் தருமன் சொன்னால் தான் துரோணர் நம்புவார்.என்ன செய்யலாம்" என யோசிக்கிறான்.
பிறகு பீமனை அழைக்கிறான்.ஓடோடிவந்த பீமனிடம், "பீமா! நீ ஒரு முக்கியமான் வேலை செய்ய வேண்டும்" என்கிறான். என்ன என்று கேட்கும் பீமனிடம் , "பீமா! கவுரவ சேனையில் அஸ்வத்தாமன் என்னும் யானை இருக்கிறது.அது போர்க்களத்தில் புகுந்து நமது வீரர்களை பந்தாடுகிறது. நீ உடனே பொய் அதை கொன்றுவிட்டு வா" என்கிறான். பீமனும் சரி என்று சொல்லி கையிலே கதையை எடுத்தான். நேரே அந்த யானையிடம் சென்று கதையால் ஒரு போடு.யானை கீழே விழுந்து இறந்தது.
பீமன் கிருஷ்ணனிடம் ஓடோடி வந்து நடந்ததை சொல்கிறான். கிருஷ்ணர் இப்போது தருமரைப் பார்க்கிறார். "தருமா! கேட்டாயா? பீமன் அஸ்வத்தாமன் என்னும் யானையை கொன்றுவிட்டான்.அதனால் நீ இப்போது தாராளமாக அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்று சொல்லலாம்" என்கிறான்.
அதற்கு தருமர், "கிருஷ்ணா! நான் நீ சொன்னபடி செய்கிறேன்.ஆனால் அஸ்வத்தாமன் எனும் யானை இறந்துவிட்டது என்றுதான் சொல்வேன் " என்கிறார்.
கிருஸ்ணன் உடனே, " தருமா! நான் சொல்வதைக் கேள்.இல்லையென்றால் துரோணரை வீழ்த்தவே முடியாது.அதனால் , ' இறந்துவிட்டான் அஸ்வத்தாமன் என்னும் யானை' என்று சொல்.இதில் 'இறந்துவிட்டான் அஸ்வத்தாமன்' என்பதை சத்தமாகவும் , 'என்ற யானை' என்பதை மெதுவாகவும் சொல்" என்கிறான்.
இதற்கு தருமர் சம்மதிக்கிறார். அதற்குள் கிருஷ்ணன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற செய்தியை பரப்புகிறார்.இந்த செய்தி துரோணர் காதில் விழுகிறது. ஆனால் அவர் அதை நம்ப மறுக்கிறார்.ஏனென்றால் அஸ்வத்தாமன் ஒன்றும் சோற்றுக்கு செத்தவனல்ல. நிகரற்ற வீரன்.அவனை வீழ்த்துவது மிகக் கடினம்.
அதனால் எப்போதும் சத்தியமே பேசும் தருமரைப் பார்த்து துரோணர் கேட்கிறார், "தருமா! நீ சொல்.அஸ்வத்தாமன் என்ன ஆனான்? இறந்துவிட்டானா ?" அதற்கு தருமர், ஆமாம்! 'இறந்துவிட்டான் அஸ்வத்தாமன்' என்று சத்தமாகவும், 'என்ற யானை' என்று மெதுவாகவும் சொல்கிறார்.
இதைக்கேட்ட துரோணர் கலங்கி போய் தனது வில்லை தூக்கி எறிந்து இனி போர் செய்ய மாட்டேன் என்று அமைதியாய் அமர்ந்து விடுகிறார்.
உடனே கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கண் காட்டுகிறான்.புரிந்துகொண்ட அர்ஜுனன் தனது சக்திவாய்ந்த பாணத்தால் துரோணரை வீழ்த்துகிறான்.
இந்த சம்பவத்தின் முக்கிய நிகழ்வு என்ன தெரியுமா? தருமர் எமதர்மனின் அம்சமாக குந்திதேவி வயிற்றில் உதித்தவர்.மகா சத்யவான்.பொய்யே பேசாதவர்.
இதனால் போர்க் களத்தில் அவரது தேர் இந்த பாவ பூமியில் படாமல் ஒரு அடி உயரத்திலேயே நிற்கும்.அதாவது அந்தரத்தில் நிற்கும்.
அவர் சொன்ன இந்த சிறிய பொய்யினால் அவரது தேர் தடாலென்று பூமியில் வந்து விழுந்தது.
இந்த சம்பவத்தின் முக்கிய பாத்திரமான அஸ்வத்தாமன் பிற்பாடு சிரஞ்சீவி பட்டம் பெறுகிறான்,அதாவது ஆஞ்சிநேய சுவாமி போல் அவனும் இன்றும், என்றென்றும், இந்த உலகம் உள்ளளவும் வாழ்வான்.

No comments:

Post a Comment