Sunday, April 24, 2016

சமஸ்கிருதத்தில் ஓரேழுத்து பாடல்...

சமஸ்கிருதத்தில் ஓரேழுத்து பாடல்...

இலக்கியச் சுவை...எஸ்.கண்ணன் கோபாலன்
'தாதிதூ தோதீது தத்தைதூதோ தாது’ என்று 'த்’ என்ற ஒரே மெய்யெழுத்தை மட்டுமே பயன்படுத்தி, காளமேகப் புலவர் எழுதிய ஒரு பாடல் குறித்து, சக்தி விகடன் 4.3.2014 இதழில், இந்திரா சௌந்தர்ராஜன் தனது 'சித்தம் சிவம் சாகசம்’ தொடரில் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்து மகிழ்ந்த சக்தி விகடன் வாசகி, மீனாக்ஷி ராமமூர்த்தி, சமஸ்கிருதத்திலும் அதேபோல் சொல் நயமும். சுவை நயமும் பொருந்திய பல பாடல்கள் இருப்பதாகக் கூறி, அதற்குச் சான்றாக 'ஹிந்துயிஸம் டுடே’ என்ற ஆங்கில இதழில் வெளியாகி இருந்த The Wonder That Is Sanskrit என்ற கட்டுரையின் பிரதியை நமக்கு அனுப்பி இருந்தார். அதில் இருந்து சில பகுதிகள் இங்கே.
சமஸ்கிருதத்தில் பல உயர்ந்த இலக்கியங்கள் உள்ளன. அதே நேரம், எளிமையான முறையில் அமைந்த பல பாடல்களும் உள்ளன. மேலோட்டமாகப் பார்க்கும்போது எளிமையானதாக இருந்தாலும், அதன் உட்பொருளைப் புரிந்துகொள்ள சமஸ்கிருதத்தின் முழுமையான இலக்கண அடிப்படைகளை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். எளிமையான, அதேநேரம் நுட்பமாகப் புரிந்து அனுபவிக்க வேண்டிய அத்தகைய பாடல்கள் 'அதம காவியம்’ என்று அழைக்கப்படுகின்றன. கவிஞர்கள் இப்பாடல்களில் தங்கள் கற்பனைத் திறனைப் பூரணமாகப் பயன்படுத்தி, பாடல்களை உயர்ந்த தரமுள்ளதாகவும், பொருள்சுவை கொண்டதாகவும் செய்துள்ளனர்.
காளிதாசன், பர்த்ருஹரி, மேகா, ஸ்ரீஹர்ஷா போன்ற பிரசித்தி பெற்ற சமஸ்கிருத கவிஞர்கள், தங்களுடைய உயர்ந்த படைப்புகளில்கூட இதுபோன்ற வார்த்தை ஜாலங்கள் கொண்ட பல பாடல்களை இயற்றியுள்ளனர்.
வர்ணசித்ரா, ஸ்வரசித்ரா, கதிசித்ரா எனப் பல வகைகளில் சமஸ்கிருத மொழியில் இத்தகைய பாடல்கள் காணப்படுகின்றன.
வர்ணசித்ரம்: 33 உயிர் மெய்யெழுத்துக் களைக் கொண்டு இயற்றப்படுவதாகும். அதேபோல், பாடலின் ஒவ்வொரு வரி முழுவதும் ஒவ்வொரு எழுத்து மட்டுமே வருவதுமாகும்.
ஜ ஜௌ ஜோ ஜா ஜி ஜி ஜ் ஜா ஜி
தம் த தோ தி தம் தா த து த
பா போ  பா பி பூ பா பூ
ரா ரா ரி ர ரி ரீ ர ர:
இங்கு செய்யுளின் முதல் பாதத்தில் (பகுதியில்) 'ஜ’ என்ற எழுத்தும், இரண்டாம் பாதத்தில் (பகுதியில்) 'த’ என்ற எழுத்தும், மூன்றாம் பாதத்தில் (பகுதியில்) 'ப’ என்ற எழுத்தும், நான்காம் பாதத்தில் (பகுதியில்) 'ர’ என்ற எழுத்தும் அதனதன் பல உயிர் மெய்யெழுத்துக்களோடு வந்துள்ளதைக் காணலாம்.
பொருள்: பலராமர், சிறந்த போர்வீரர்; பல போர்களில் வெற்றி கண்டவர்; சுக்ரன் மற்றும் பிருஹஸ்பதியைப் போன்று விளங்குபவர்; திரிகின்ற எதிரிகளை அழிப்பவர்; சிங்கத்தைப் போன்று போர்க்களம் சென்றவர்; எதிரிகளின் முன்னேற்றத்தைத் தடுத்தவர்; நான்குவித படைகளைக் கொண்டவர்.
யாயா யாயா யாயா யாயா யாயா யாயா யாயா யாயா
யாயா யாயா யாயா யாயா யாயா யாயா யாயா யாயா
இதை எப்படிப் பிரித்துப் படிக்க வேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுகிறோம்.
யாயாயா (yayaya) ஆய (aya) ஆயாய (ayaya)
அயாய (ayaya) அயாய (ayaya) அயாய (ayaya)
அயா ய (aya ya) அயாயா (ayaya) யாயாய (yayaya)
ஆயாயாய (ayayaya) ஆயாயா (ayaya)
யா (ya) யா (ya) யா (ya) யா (ya) யா (ya)
யா (ya) யா (ya) யா (ya)
பொருள்: எந்தப் பாதுகை இறைவனின் திருப்பாதங்களை அலங்கரிக்கிறதோ, எது மங்களகரமான அனைத்து நன்மைகளையும் அடைய உதவுகிறதோ, எது ஞானத்தைத் தருகிறதோ, எது தீவிரத் தன்மையைப் போக்கடித்து இறைவன் மீது ஆசையை உருவாக்குகிறதோ, எது உலகெங்கும் சஞ்சரித்து உதவுகின்றதோ, அது (பாதுகை) விஷ்ணு பகவானின் உடைமை.
கதி சித்ரம்: எழுத்துக்கள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் எப்படிப் பார்த்தாலும் ஒரே மாதிரியாக வரும். தமிழில் இதனை 'மாலைமாற்று’ எனக் குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் இது palindrome எனப்படும்.
பின் வரும் செய்யுள்களின் எழுத்துக்கள் வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் அமையப் பெற்றுள்ளன. இது 'கதிசித்ரம்’ என்று அழைக்கப்படுகிறது.
வாரணாககபீரா ஸா ஸாரா பீக  கணாரவா
காரீ தாரீ வதா ஸேனா னாஸேதாவரீ  தாரீகா
பொருள்: குன்றுபோல் உள்ள யானைகள் நிறைந்த இப்படையை வெல்லுவது கடினம். இப்பெரும் படையின் பேரொலியைக் கேட்ட மக்கள் அஞ்சினர். இப்படை எதிரிகளைக் கொல்கிறது.
இதிலேயே மற்றொரு வகையும் உண்டு.
''ஓ! தேவர்களே, கூரிய வாளை விரும்புகிறவர்களே, கோழையைப் போன்று நடுங்கமாட்டான் வீரன். பேராசை என்னும் போரில் அழகிய ரதங்களும், அசுரர்களும் நிறைந்த இந்தப் போரில்...'' என்று பொருள் தரும் இந்தப் பாடல் வரிகளைப் பாருங்கள்.
நி சி தா சிர தோ பி கோ யேன்ஜதே மரணாரு சா 
சாருணா ரமதே ஜன்யே கோ பிதோ ரசி தாசிநி
முதல் வரியில் இடம் பெற்றுள்ள எழுத்துக்களே இரண்டாவது வரியில் தலைகீழாக இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமஸ்கிருதம் இன்றைக்கு வழக்கொழிந்த மொழியாகிவிட்டது. ஆனால், அந்த மொழியை நன்கு கற்றுணர்ந்தால், இது போன்று இன்னும் பலப்பல சுவாரஸ்யங்கள் நமக்குக் கிட்டும்.

No comments:

Post a Comment