Thursday, November 10, 2016

காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால்.......

நாம் பொதுவாக எப்பொழுதும் காலைத் தொங்க வைத்துத்தான் அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும்பொழுது, பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபா, கட்டில், சேர் இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரம் காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம். இதனால் நமக்குப் பல நோய்கள் உருவாகின்றன. காரணம் என்னவென்றால், காலைத் தொங்க வைத்து அமரும்பொழுது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதியில் மட்டுமே அதிகமாகச் செல்கிறது. மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. நாம் காலை மடக்கிச் சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்குக் கீழே இரத்த ஓட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஓட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில்தான் இருக்கின்றன. எனவே, ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தி அதிகமாகக் கிடைக்கிறது. ஆரோக்கியமும் அதிகமாகிறது. கால்களுக்கு, நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.
எனவே, தயவு செய்து இனிமேல் காலைத் தொங்க வைத்து அமருவதைத் தவிருங்கள்! குறிப்பாக, சாப்பிடும்பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. இதனால், ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசானத்தில் (சம்மணமாக) அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிடச் சாப்பிடச் சாப்பாடு ஜீரணமாகி விடும்.
ஆனால், இப்பொழுது பலர் காலை மடக்கி உட்காரவே முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், நாம் ஒரே ஓர் இடத்தில் மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்; அது மலம் கழிக்கும்பொழுது. யாருடைய வீட்டில் இந்திய பாணிக் கழிப்பறை (Indian style toilet) என்று அழைக்கப்படும் காலை மடக்கி அமரும்படியான கழிப்பறை இருக்கிறதோ அவர்களுக்கு மூட்டு சம்பந்தப்பட்ட எந்த வலியும் வருவதில்லை. ஆனால், மேலைப் பாணிக் கழிப்பறை (European style toilet) உள்ள வீடுகளில் உள்ள அனைவருக்கும் மூட்டு, முழங்கால் வலியும் அவை சம்பந்தப்பட்ட நோய்களும் வருகின்றன. ஏனென்றால், இவர்கள் ஒரு முறை கூட வாழ்க்கையில் காலை மடக்கி அமர்வதே கிடையாது.
முதலில் வயதானவர்களுக்கு மட்டுமே இந்தப் பிரச்சினை இருந்தது. ஆனால், இப்பொழுது சிறு குழந்தைகள் கூட மேலைப் பாணிக் கழிப்பறையைப் பயன்படுத்துவதால் அவர்களும் தரையில் அமர முடியாமல் தவிக்கிறார்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுத் தரையில் உட்காரக் கூட முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்குக் கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
எனவே, ஏற்கெனவே மூட்டு, முழங்கால் வலி முதலான ஏதேனும் காரணங்களுக்காக மருத்துவர் பரிந்துரைப்படி மேலைப் பாணிக் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்கள் தவிர, மற்றவர்கள் தயவு செய்து அதைப் பயன்படுத்த வேண்டாம்! அதற்குப் பதிலாக இந்திய பாணிக் கழிப்பறை பயன்படுத்துங்கள். இதனால், குறைந்தபட்சம் ஒரு நாளில் இரண்டு முறை மூன்று முறையாவது நாம் யோகாசனம் செய்வதைப் போல் அமர்ந்து எழ வேண்டியிருக்கும்.
முடிந்த வரை காலைத் தொங்க வைத்து அமர்வதைத் தவிருங்கள்! கட்டிலிலோ, சோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்! சாப்பிடும்பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும். சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து கொள்ளலாம். ஆனால், அந்த நாற்காலியில் காலைத் தொங்கவிடாமல் மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிடுங்கள்!
இன்று முதல் காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால், ஜீரணமும் நன்றாக நடக்கும். உடம்பில் சக்தியும் அதிகரிக்கும். மூட்டு வலியும் கால் வலியும் வராது!

2 comments:

  1. ஆமாம்... நல்ல பகிர்வு... அம்மா

    ReplyDelete
  2. அருமையான பதிவு...

    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete