Tuesday, January 25, 2011

திருநீறு

திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.
எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்துஅனைவரும் பிடி சாம்பலாக ஆவார் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.


திருநீறு வகைகள்
திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை
கல்பம்
அணுகல்பம்
உபகல்பம்
அகல்பம்


 கல்பம்
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.
அணுகல்பம்
ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
 அணியும் காரணம்
"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.

1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம்.
2.அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை. அது கபாலக் குகைக்குள்தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்க வேண்டுமாகில் திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.


அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.
சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.
ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.


மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம்.
நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.
எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.


ஆக்ஞா (நெற்றி) தியானம்


மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷிஸ ஈஷா யோகோ போன்ற இடங்களில் சென்றால் சொல்லித்தருவார்கள்.பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.
இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.
இதை முறையாக செய்யவேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி தியானமும் செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடும்.
இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ்.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
அணியும் முறை
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.


 திருநீறு அணியும் இடங்கள்
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை
தலை நடுவில் (உச்சி)
நெற்றி
மார்பு
தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
இடது தோள்
வலது தோள்
இடது கையின் நடுவில்
வலது கையின் நடுவில்
இடது மணிக்கட்டு
வலது மணிக்கட்டு
இடது இடுப்பு
வலது இடுப்பு
இடது கால் நடுவில்
வலது கால் நடுவில்
முதுகுக்குக் கீழ்
கழுத்து முழுவதும்
வலது காதில் ஒரு பொட்டு
இடது காதில் ஒரு பொட்டு
பலன்கள்
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றைமங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!

தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின் சைவ வினாவிடை
3. விபூதி இயல்-
1. சிவபெருமானை வழிபடுஞ் சமயத்துக்குப் பெயர் யாது?
சைவசமயம்.
2. சைவசமயிகள் சரீரத்திலே ஆவசியமாகத் தரிக்க வேண்டிய அடையாளம் யாது?
விபூதி.
3. விபூதி ஆவது யாது?
பசுவின் சாணத்தை அக்கினியாலே சுடுதலால் உண்டாக்கிய திருநீறு.
4. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?
வெள்ளை நிற விபூதி.
5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?
பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்.
6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.
7. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?
நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும்.
8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?
சிந்திய விபூதியை எடுத்துவிட்டு, அந்த இடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.
9. நடந்து கொண்டாயினும், கிடந்துகொண்டாயினும் விபூதி தரிக்கலாமா?
தரிக்கல் ஆகாது.
10. எக்காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்?
நித்திரை செய்யப் புகும் போதும், நித்திரை விட்டெழுந்த உடனும், தந்த சுத்தம் செய்த உடனும், சூரியன் உதிக்கும் போதும், அத்தமிக்கும் போதும், ஸ்நானஞ் செய்த உடனும், போசனத்துக்குப் போம் போதும், போசனஞ் செய்த பின்னும் விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்.
11. ஆசாரியர் ஆயினும், சிவனடியார் ஆயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கல் வேண்டும்?
மூன்று தரம் ஆயினும், ஐந்து தரம் ஆயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கல் வேண்டும்.
12. விபூதி வாங்கித் தரித்துக் கொண்ட பின் யாது செய்தல் வேண்டும்?
முன் போல் மீண்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.
13. சுவாமி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?
முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.
14. விபூதி தாரணம் எத்தனை வகைப்படும்?
உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.
( உத்தூளனம் = நீர் கலவாது, திரிபுண்டரம் =மூன்று குறி)
15. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?
சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.
இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிர்ண்டு தானங் கொள்வதும் உண்டு.
16. திரிபுண்டரந் தரிக்கும் இடத்து, நெற்றியில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?
இரண்டு கடைப்புருவ எல்லைவரையுந் தரித்தல் வேண்டும், அதிற் கூடினாலுங் குறைந்தாலுங் குற்றமாம்.
17. மார்பிலும் புயங்களிலும் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?
அவ்வாறங்குல நீளந் தரித்தல் வேண்டும்.
(அங்குலம் = 2.5 செ.மீ)
18. மற்றைத் தானங்களில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்.
ஒவ்வோர் அங்குல நீளந் தரித்தல் வேண்டும்.
19. மூன்று குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?
ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டல் ஆகாது.







திருசிற்றம்பலம்



No comments:

Post a Comment