Sunday, January 30, 2011

வள்ளுவர் வாசுகி

வள்ளுவர் வாசுகி

செல்வச் செழிப்புமிக்க நிலச்சுவான்தார் மகளாகப் பிறந்தவள் வாசுகி. இளம் பருவத்திலேயே சாவித்ரி, அனுசூயை போன்ற கற்புக்கரசிகளின் சரிதங்களை அறிந்து அவ்வாறே வாழவேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்தாள்.
வள்ளுவர் என்ற இயற்றமிழ் வித்தகரை வாசுகி மணந்தாள். இருவரும் மயிலாப்பூரிலே இனிய இல்லறம் நடத்தி வந்தார்கள். நடராஜப் பெருமானிடம் பக்தி கொண்டிருந்த வள்ளுவரையே, வாசுகி தெய்வமாகக் கொண்டாடினாள். அவருடைய சொல்லே அவளுக்கு வேதமாக இருந்தது.
துணி நெய்யும் நெசவுத் தொழிலை வள்ளுவர் செய்துவந்தார். அவர், தாம் இயற்றிய திருக்குறளிலே ‘இல்வாழ்க்கை’ என்ற அதிகாரத்தில் இல்லறத்தின் சிறப்பைக் கூறியிருக்கிறார்.

“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.”
துறவிகளுக்கும் எளியவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இல்லறத்தில் இருப்பவரே துணையாகிறார்கள். வாசுகி, வள்ளுவரின் இல்லறம், அவர் குறளில் கூறியவாறே அன்பும் அறனும் உடையதாகி பண்புடனும் பயனுடனும் அமைந்திருந்தது.
எளிய வாழ்க்கை; மகிழ்ச்சிகரமான தம்பதி. ஊரெங்கும் இவர்களுடைய அன்யோன்யமான இல்லறத்தைப் பற்றிய புகழ் பரவியது. கொங்கணர் என்ற சித்தர் ஒருவர், வாசுகியின் இல்லற மாண்பை நேரில் சென்று காண விரும்பினார். மயிலாப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
வானத்தில் பறந்து கொண்டிருந்த கொக்குக் கூட்டத்திலிருந்து ஒரு கொக்கு எச்சமிட்டது. அது நடந்து சென்ற கொங்கணரின் உச்சந்தலை மீது விழுந்தது. கோபம் கொண்ட கொங்கணர் எச்சமிட்ட கொக்கைப் பார்த்தார். அவருடைய தவவலிமையால் அவரது பார்வையே அந்தப் பறவையை எரித்துச் சாம்பலாக்கி விட்டது. பின்பு வாசுகி-வள்ளுவர் இல்லத்துக்குச் சென்றார். அவர் ஒரு சன்யாசிக்குரிய கோலத்துடன் வள்ளுவரின் இல்லத்தின் முன்பு வந்து “தாயே! அன்னமிடுங்கள்” என்று கேட்டார். வாசுகியின் விருந்தோம்பும் பண்பைச் சோதிக்க விரும்பினார். வள்ளுவர், தாம் இயற்றிய திருக்குறளில் விருந்தோம்பலைப் பற்றி மிக உயர்வாக எழுதியிருக்கிறாரே!

“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.”
வீட்டில் பொருள்களைச் சேர்ப்பது, விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்காகவே என்று வலியுறுத்தியிருப்பவரின் மனைவியின் குணம் எத்தகையது என்று அறிய கொங்கணர் விரும்பினார். அதற்காகவே சந்யாசியாக வந்தார்.
தாயே! அன்னமிடுங்கள்” என்று குரல் கேட்டால், உடனே இல்லத்தரசியர் அன்னமோ, அரிசியோ கொண்டு வந்து அளிப்பது வழக்கம். ஆனால் கொங்கணர் குரல் கொடுத்து சில நிமிடங்கள் ஆன பிறகும் எவரும் வரவில்லை.

அந்த நேரத்தில் வள்ளுவர் உணவருந்திக் கொண்டிருந்தார். உணவு பரிமாறுவதிலும் அருகில் அமர்ந்து விசிறியால் விசிறுவதுமாக வாசுகி பதிசேவையில் ஈடுபட்டிருந்தாள். கொங்கணரின் அழைப்பு அவளுக்குக் கேட்டது. ஆயினும் உடனே செல்ல இயலவில்லை. சற்று நேரம் தாமதித்த பின்பே உணவு வட்டிலுடன் வெளியே வந்தாள். கொங்கணர் அதற்குள் பொறுமை இழந்தார். வாசுகி வெளியில் வந்ததும் அவளைத் தீவிழியால் பார்த்தார். அவளோ முகத்தில் முறுவல் பூத்தவளாக, “என்னையும் கொக்கு என்று நினைத்தீரோ? கொங்கணரே!” என்று கேட்டாள். கொங்கணர் திகைப்புற்றார்.
‘நான்கு சுவர்களுக்குள் வாழும் இப்பெண்மணி வெகு தொலைவில் நான் வரும் வழியில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் பற்றிக் கூறுகிறாளே! கொக்கை எரித்தது போல என்னையும் எரிக்கலாம் என்று நினைத்தீரோ என்று கூறாமல் கூறிவிட்டாளே!’ என வியந்தார்.
உடனே கொங்கணர் பணிவுடன், “மன்னிக்க வேண்டும். திருக்குறளை எழுதிய வள்ளுவரும் அவர் மனையாள் வாசுகியும் நடத்தும் இல்லற வாழ்வின் சிறப்பைப் பற்றிக் கேள்வியுற்றேன். நேரில் அறிய ஆவலுடன் வந்தேன். இந்த ஒரு நிகழ்ச்சியிலேயே தெளிவாகத் தெரிந்து விட்டது” என்று உரைத்தார்.
“வாருங்கள். உள்ளே வந்து அமருங்கள். உணவருந்தலாம்.” என்று வாசுகி அழைத்தாள். உள்ளே வந்த கொங்கணர் வள்ளுவரைக் கண்டார். அவருடைய வேண்டுகோளை ஏற்று சில தினங்கள் அவர் இல்லத்தில் கொங்கணர் தங்கினார்.
ஒருநாள் கொல்லைப் புறத்தில் வாசுகி கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தாள். அப்போது ‘வாசுகி’ என்று வள்ளுவர் அழைத்தார். அழைப்பைக் கேட்டதும் வாசுகி இறைத்துக் கொண்டிருந்த கயிற்றை விட்டாள். குடம் நீருடன் பாதியளவில் வருவதைப் பற்றிய நினைவின்றி அப்படியே வீட்டினுள்ளே சென்றாள். கொங்கணர் ஆச்சர்யத்துடன் பார்த்தார். குடம் கிணற்றுக்குள் விழாமல் தொங்கியபடி அப்படியே இருந்தது. வாசுகி திரும்பி வந்து கயிற்றை இழுத்து குடத்தை எடுக்கும் வரை அவ்வாறே இருந்தது.
மற்றொரு நாள், காலையில் வள்ளுவர் பழையமுது சாப்பிட அமர்ந்தார். வாசுகி ‘வீசு’ என்றதும் வாசுகி விசிறியுடன் வந்து வீசிய போது, பழையமுதிலிருந்து ஆவி பறந்ததை கொங்கணர் நம்ப முடியாத வியப்புடன் நோக்கினார்.
கணவர் சொல்லே வேதம் என்று வாழ்ந்து வரும் வாசுகியை நோக்கியபோது கொங்கணருக்கு குறள் நினைவுக்கு வந்தது.

“தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.”
கணவனே தெய்வமாக வாழ்பவள் வாசுகி. அவள் கணவர் சொல்லியது எதையும் மீறி நடந்ததில்லை. தினந்தோறும் வள்ளுவர் சாப்பிட அமரும் போது சிறுகிண்ணத்தில் நீரும் அருகில் ஊசியும் வைக்க வேண்டும் என்பது அவரது நிபந்தனை. அதை காரண காரியம் கேட்காமலே செய்து வந்தாள் வாசுகி.
காலங்கள் கடந்தன. இருவரும் வயோதிகம் அடைந்தார்கள். வாசுகி தன் இறுதிக் காலத்தில் அருகில் இருந்த கணவரிடம் “ஒரே ஒரு கேள்வி உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.” என்றாள். வள்ளுவர் “கேள்” என்றார்.
“தினமும் நீங்கள் சாப்பிடும் போது அருகில் கிண்ணத்தில் நீரும் ஊசியும் எதற்காக வைக்கச் சொன்னீர்கள்?” என்று கேட்ட வாசுகியைப் பார்த்து,
“நம்முடைய முன்னோர் உணவை வீணாக்கக் கூடாது என்று கூறிச் சென்றார்கள். உணவு பரிமாறும் போது ஒரு பருக்கை கீழே சிந்தினாலும் அதை ஊசியால் எடுத்து நீரில் சுத்தம் செய்து உண்பதற்காகவே வைக்கச் சொன்னேன். ஆனால் நீ ஒரு நாளும் உணவைச் சிந்தியதில்லை. எனவே அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் எனக்கு நேரவில்லை.” என்றார் வள்ளுவர்.
இந்த விளக்கத்தைக் கேட்டு வாசுகி மகிழ்ந்தாள். “வள்ளுவருக்கேற்ற வாசுகி போல்” என்று மணமக்களை வாழ்த்துவது வழக்கம். பதிக்கேற்ற பத்தினியாக வாழ்ந்து காட்டியவள் வாசுகி.





2 comments:

  1. மிகவும் அருமையான பதிவு. நன்றி

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பதிவு. நன்றி

    ReplyDelete