மஹோற்சவம் இறைவனின் ஐந்தொழில் தத்துவத்தினை உணர்த்துகின்றது
மகோற்சவம் என்பது பெரிய விழா எனப் பொருள்படும். நித்திய பூசை, மாச உற்சவம் போன்றவற்றில் இடம்பெறும் குறை குற்றங்களை நிவர்த்தி செய்வதற்காக மஹோற்சவம் நடைபெறுகிறது. இது இறைவனின் ஐந்தொழில் தத்துவத்தினை உணர்த்துகின்றது.
அமாவாசை என்பது சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்கின்ற நாளாகும். அதில் ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை தினம் மிகவும் சிறப்பு மிக்கதாகும். எம்மை விட்டு பிரிந்து இறைபதம் எய்திய பிதிர்களுக்கும், மூதாதையர்களுக்கும் தர்ப்பணம் செய்து தானங்கள் கொடுத்து அவர்களை மகிழ்விப்பதற்குரிய நாளாகும்.
சிறப்பாக தந்தையை இழந்தவர்கள், அவருடைய மூதாதையர்களுக்கு ஆடி அமாவாசை தினத்தன்று விரதமிருந்து தர்ப்பணம் செய்து தீர்த்தமாடி தங்களால் இயன்றளவு தான தருமங்களைச் செய்தல் வேண்டும். இதனால் பிதிர்கள் சந்தோஷமடைந்து எங்களுக்கு எல்லாவிதமான செல்வங்களையும், குழந்தைப் பாக்கியம், தோச நிவர்த்தி, நோய்களற்ற தேக ஆரோக்கிய த்தினையும் வழங்குவர் என்பது திண்ணம். இதனால் கட்டாயம ¡க தந்தையை இழந்தவர்கள் தீர்த்தமாடி தானங்களை வழங்குவதால் சகல நன்மைகளையும் பெறுவீர்கள்.
மஹோற்சவத்தின் போது மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கும் இறைவன் மக்களுக்கு அருகில் வந்து அருள் வழங்குகின்றார். அதாவது இறைவன் இக்காலங்களில் தம்பம் (கொடிமரம்) சிவாச்சாரியார் (குருக்கள்) யாகசாலை (கும்பம்) போன்ற இடங்களுக்குள் வந்து இறையன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
கொடியேற்றத் திருவிழா படைத்தல் தொழிலைக் குறிக்கின்றது. கொடிமரம் பதி (பரம்பொருள்), கொடிச்சீலை பசு (ஆன்மா), கயிறு - பாசம் (கன்மவினைகள்) ஒரு ஆன்மாவானது தான் செய்த கன்ம வினைகளுக்கு ஏற்ப பிறப்பெடுத்து பல்வேறு வகையான துன்பங்களை அனுபவிக்கின்றது.
ஆன்மா ஆணவம் கன்மம், மாயை என்று சொல்லப்படும் பாசத்தில் இருந்து விடுபடுகின்ற போது பரம்பொருளின் திருப்பாதத்தினை அடையலாம். மல நீக்கம் பெற்ற ஆன்மா இறைவனை அடையும் என்ற தத்துவத்தினை எடுத்துக் காட்டுகின்றது.
இறைவனுக்கு ஐந்து முகங்கள் உள்ளன. அதாவது ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்பவையாகும்.
இதேபோல் ஐந்து முகங்களை கொண்ட கணபதி ஹேரம்ப கணபதி என அழைக்கப்படுகின்றது. ஐந்து யானைத்தலையுடன் பத்து கண்களும், பத்து திருக்கரங்களையும் கொண்டு ஒரு நோக்காக பஞ்ச முக விநாயகர் பார்க்கின்ற போது மக்களுக்கு இருக்கின்ற துன்பங்கள் எல்லாம் பறந்தோடி விடுகின்றன. இந்த பஞ்சமுக விநாயகருக்கு தினமும் பஞ்சமுகார்ச்சனை இடம்பெறுவது மிகச்சிறப்பாகும்.
இறைவனை திருவிழாக் காலங்களில் வாகனங்களில் ஏற்றி வெளி வீதி வருகின்ற போது இறைவன் இன்னும் மக்களுக்கு அருகில் வந்து அருள் வழங்குகின்றார். இது காத்தல் தொழிலை குறிக்கின்றது.
சாந்த மூர்த்தியாக இருக்கின்ற இறைவன் மலநாசம் செய்வதற்காக மாணிக்கப் பிள்ளையார் திருவேட்டை திருவிழாவில் புறப்படுகிறார். எங்களிடம் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை போன்ற மும்மலங்களால் நாம் தினமும் பல்வேறு வகையான துன்பங்களுக்குள் உழன்று தத்தளிக்கிறோம். இந்த மலங்களை அழித்து எங்களை நல்லவர்களாக மாற்றுவதற்காகவே இறைவன் திருவேட்டை தினத்தன்று அழித்தல் தொழிலைச் செய்கின்றார்.
முன்னொரு காலத்திலே சிவனிடம் நாரதர் மாங்கனியைக் கொடுத்து பிள்ளையாருக்கும், முருகனுக்கும் இடையில் போட்டியை ஏற்படுத்தி விநாயகர் வெற்றி பெறுவதும் முருகன் கோபித்து பழனிமலை செல்வதும், பெற்றோர் சாந்தப்படுத்தி திரும்ப கூட்டிவருவதும் போன்ற காட்சிகள் மாம்பழத் திருவிழாவில் இடம்பெறுகின்றது. எமது குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்து விட்டுக் கொடுப்புடன் வாழவேண்டும் என்ற தத்துவத்தினை உணர்த்துகின்றது.
நீர் நிலைகளில் மிகச் சிறந்தது சமுத்திரமாகும். ஆலயத்தில் மக்களுக்கெல்லாம் அருள் பாலித்த விநாயகப் பெருமான் நீர்நிலைகளில் இருக்கின்ற உயிரினங்களுக்கும் தனது அருளை வழங்க சமுத்திர தீர்த்த உற்சவம் இடம் பெறுகின்றது. மக்களுக்கும், உயிரினங்களுக்கும் தனது அருளால் தொழிலைச் செல்வதே தீர்த்தமாகும். இக்காலங்களில் பக்தர்கள் தீர்த்தமாடுவது சிறந்ததாகும்.
பத்து நாட்களாக கொடிமரத்தில் இருந்து அருள் வழங்கிய இறைவன் மல நீக்கம் பெற்ற ஆன்மாவினை தன்னுடன் சேர்த்துக் கொள்வதே கொடியிறக்கமாகும். இதன்போது மறைத்தல் தொழிலை இறைவன் செய்கின்றார்.
இறைவன் மீது சதா சிந்தனையில் இருப்பவர் சண்டேஸ்வரர் நாயனார். இறைவனை வணங்கிய பின் இவரை வணங்கினால் தான் அதன் பலன் முழுமையாக எங்களுக்கு கிடைக்கும். அதனால்தான் சண்டேஸ்வரருக்கு உற்சவம் எடுத்து திருவிழாவின் பூரண பலனையும் நாங்கள் பெற்றுக் கொள்கின்றோம்.
இறைவன் சிவாச்சாரியாரிடத்தில் வந்து உறைகின்றான். அதனாலும் உற்சவத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்கு நன்றி சிவாச்சாரிய உற்சவம் இடம் பெறுகின்றது
No comments:
Post a Comment