Sunday, February 13, 2011

சிறந்தது அரச தருமம்

சிறந்தது அரச தருமம்


பிரமசர்யம் - குருவின் கட்டளைக்கு அடங்கி நடக்க வேண்டும்.அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும்.வேதம் ஓத வேண்டும்.அடக்கம்,சுறுசுறுப்பு ஆகைய இவை பிரமசர்யம் ஆகும்
கிரகஸ்தம்- இல்லற தருமத்தில் தலையாயது விருந்தோம்பல்.மனைவியுடன் கூடித் தான தருமத்துடன் வாழ்தல் இல்லற தருமமாகும்.
சந்யாசம்-துறவு மேற்கொண்டு பற்றற்று இருப்பது சந்யாசம்.உயிர் வாழ சிறிதே உண்பர் துறவிகள்.ஒரு நாளைக்கு ஒரு வேளை..அதுவும் எட்டுக் கவளமே உண்பர்.ஒரு நாள் தங்கிய ஊரில் மறுநாள் தங்குவதில்லை.புலன் ஐந்தும் அடங்கும் வகையில் தியானம்,தவம் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பது சந்யாச தர்மமாகும்.
யாவற்றினும் சிறந்தது அரச தருமம்- யானையின் அடியில் மற்ற விலங்குகளின் அடிகள் அடங்கி விடுவது போல அரச தருமத்தில் அனைத்து தருமங்களும் அடக்கம்.எந்த நாட்டில் அரச தருமம் குன்றுகிறதோ அந்த நாட்டில் அனைத்துத் தருமங்களும் சிதைந்து போகும்.வேதம் ஓதுதல்,ஓதுவித்தல்,தானம்,தருமம் ஆகிய அனைத்துத் தருமங்களும் அரச தருமத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளன.ஆதலால் அரச தருமத்தை விட மேலானதாக எந்தத் தருமமும் இல்லை.
மாந்தாதா என்ற மன்னன் அரச தருமங்களை விளக்குமாறு திருமாலிடம் முறையிட வேள்வி செய்தான்.திருமால் இந்திரன் வடிவில் வந்து அரச தருமங்களை விளக்கினார். 'நல்லாட்சி நடத்தும் அரசர்களைத் தேவர்களும் பாராட்டுவர்.உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்து நாடாளும் மன்னன் எல்லோராலும் போற்றப்படுவான்.' என்றார்.'எனவே அரச தருமத்திற்கு மேலான தருமம் எங்கும் , எக்காலத்தும் கிடையாது.எனவே..தருமா..நீயும் அரச தருமத்தில் உறுதியோடு இருப்பாயாக'
தருமா..பகை நட்பு இன்றி அனைவரையும் சம நிலமையில் வைத்து அரசாளும் அரசன் துறவிகள் பெறும் மேலான கதியை அடைவான்.போர்க்களத்தில் வெற்றி அல்லது வீர மரணம் என கடைசி வரை போராடும் மன்னன் துறவிக்கு நிகரானவன்.நீதி தவறாது நாடாளும் அரசனை நாட்டில் இருக்கும் மக்கள் செய்யும் தருமங்களின் புண்ணியப் பலனில் நான்கில் ஒரு பாகம் வந்தடையும்.அதேபோன்று கொடுங்கோல் ஆட்சி புரியும் மன்னனை..நாட்டில் வாழும் மக்கள் செய்யும் பாவத்தில் நான்கில் ஒரு பாகம் வந்து சேரும்.கானகம் சென்று கடுந்தவம் செய்யும் முனிவர்களை விட நாட்டை நன்கு பரிபாலிக்கும் அரசன் நூறு மடங்கு தருமத்தை அடைவான்.நாட்டில் நல்லாட்சி இல்லையெனில் நீர் நிலைகளில் பெரிய மீன் சிறு மீன்களை விழுங்குவதைப்போல வலியோர் மெலியோரை விழுங்கி விடுவர்.
முற்காலத்தில் நாட்டில் அரசன் இல்லாததால் எங்கும் அராஜகம் நிலவியது.மக்கள் பிரமனிடம் சென்று 'நாட்டில் எங்கும் குழப்பம் நிலவுகிறது.நாட்டை நல்வழிப் படுத்தி நல்லாட்சி அமைய ஒரு அரசரை அளித்தால்..அவரை வழிப்படுவோம்' என முறையிட்டனர்.பிரம தேவர் மனுவை அரசனாக இருக்கச் சொன்னார்.நாட்டாட்சி என்பது கடினமான செயல் என மனு தயங்க..மக்கள் ஒத்துழைப்பதாக வாக்களித்தனர்.நல்லாட்சியை மக்களுக்கு மனு வழங்கி, யாவரும் போற்றத்தக்க மேலான கதியை அடைந்தான்.

முன்னொரு சமயம் வசுமனஸ் என்னும் அரசன் தேவ குருவான பிரகஸ்பதியிடம் சென்று தனக்கு ராஜநீதியை அருளும்படிக் கேட்டான்.அவர்'உலகில் தருமம் நிலைத்திருக்க வேண்டுமானால் நல்ல அரசன் இருக்க வேண்டும்.அரசனிடம் கொண்ட அச்சம் காரணமாகத்தான் மக்கள் ஒருவரை ஒருவர் வஞ்சிக்காமல் இருக்கின்றனர்.சூரியனும், சந்திரனும் இல்லையெனில் உலகம் இருளில் மூழ்கிவிடும்.அது போல அரசன் இல்லா நாடும் கெடும்.ஒழுங்காக நாட்டை ஆளும் அரசன் இல்லையெனில் மேய்ப்பவன் இல்லா..பசு மந்தைப் போல நாடு சிதறிப் போகும்.தண்ட நீதியில்லை எனில் நாட்டில் திருடர் பயம் அதிகரிக்கும்.அப்பாவிகள், தருமவான்கள் ஆகியோரை அடித்துத் துன்புறுத்திப் பொருளைக் கவர்ந்து செல்வர்.உத்தமர் ஆட்சியில் மக்கள் கதவைத் திறந்து வைத்து உறங்குவர்.விலை உயர்ந்த அணிகளை அணிந்து மகளிர்..ஆடவர் துணையின்றி அச்சமின்றி வெளியில் சென்று வருவர்.ஒரு நாட்டில் பெண்கள் பயமின்றி வாழ்கிறார்கள் எனில் அது அந்த நாட்டில் நல்லாட்சி நிலவுகிறது என்பதற்கான அடையாளமாகும்.
மன்னன் முறையே அக்கினி,சூரியன்,மிருத்யு,குபேரன்,யமன் ஆகிய ஐந்து தேவர்களின் வடிவமாவான்.எனவே அரசனைப் பெருந் தெய்வமாக வணங்க வேண்டும்.உடன்பிறந்தவனாயினும் ,மகனாயினும்,நண்பனாகினும் அரசனுக்கு துரோகம் இழைத்தால்கடுமையாகதண்டிக்கப்படுவான்.அரசனின் சினத்தீயிலிருந்துயாரும்தப்பமுடியாது.நாடாளும்மன்னன்போஜன்,விராட்,சாம்ராட்.க்ஷத்திரியன்,பூபதி என்றெல்லா, புகழப்படுகிறான்.அரசன் அறிவு மிக்கவரை அமைச்சராக வைத்துக் கொள்ள வேண்டும்.நாட்டு மக்களைக் காப்பது அவனது தலையாய கடமை'என்று கூறினார் பீஷ்மர்.



No comments:

Post a Comment