Monday, February 14, 2011

ஆனாயநாயனார்

ஆனாயநாயனார் புராணம்

மங்கலமா மழநாட்டு மங்கலமா நகருண்
மருவுபுக ழாயனார் வளரா மேய்ப்பார்
கொங்கலர்பூந் திருக்கொன்றை மருங்கு சார்ந்து
குழலிசையி லைந்தெழுத்துங் குழைய வைத்துத்
தங்குசரா சரங்களெல்லா முருகா நிற்பத்
தம்பிரா னணைந்துசெவி தாழ்த்த வாழ்ந்து
பொங்கியவான் கருணைபுரிந் தென்று மூதப்
போதுகவென் றருளவுடன் போயி னாரே.
மழநாட்டிலே, மங்கலவூரிலே, ஆயர்குலத்திலே, சிவ பத்தியிற் சிறந்த ஆனாயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய ஏவலாளராகிய மற்றை யிடையர்களோடும் பசுநிரைகளைக் காட்டுக்குக் கொண்டுபோய் மேய்த்துக் கொண்டும், காந்தருவ வேதத்திலே சொல்லியபடி செய்யப்பட்ட வேய்ங்குழலினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் சத்தசுரம் பொருந்த வாசித்து ஆன்மாக்களுக்குத் தம்முடைய இசையமுதத்தைச் செவித் துவாரத்தினாலே புகட்டிகொண்டும் வருவார்.
கார்காலத்திலே ஒருநாள், இடையர்கள் பசுநிரைகளைச் சூழ்ந்துகொண்டு செல்ல, அவ்வானாயநாயனார் கையிலே கோலும் வேய்ங்குழலுங் கொண்டு நிரைகாக்கும்படி காட்டுக்குச் சென்றபொழுது; அவ்விடத்திலே மாலையைப்போல நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கிக்கொண்டு புறத்திலே தாழ்கின்ற சடையினையுடைய பரமசிவனைப்போல நிற்கின்ற ஒரு கொன்றைமரத்துக்குச் சமீபத்திலேபோய் அதைப் பார்த்துக்கொண்டு நின்று, அன்பினாலே உருகி இளகிய மனசையுடையவராகி, வேய்ங்குழலினாலே இசை நூலிலே விதித்தபடி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வாசித்தார். அவர் பஞ்சாக்ஷரத்தை அமைத்து வாசிக்கின்ற அதிமதுரமாகிய இசை வெள்ளமானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் தேவ கருவின் பூந்தேனைத் தேவாமிர்தத்தோடு கலந்து வார்த்தாற்போலப் புகுந்தது. புற்களை மேய்ந்த பசுக்கூட்டங்கள் அசைவிடாமல் அவரை அடைந்து, உருக்கத்தினாலே மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட்டுக் கொண்டு நின்றன; எருதுகளும் மான் முதலாகிய காட்டுமிருகங்களும் மயிர் சிலிர்த்துக்கொண்டு அவர் சமீபத்தில் வந்தன; ஆடுகின்ற மயிற்கூட்டங்கள் ஆடுதலொழிந்து அவர் பக்கத்தை அடைந்தன; மற்றைப் பலவகைப் பட்சிகளும் தங்கள் செவித்துவாரத்தினாலே புகுந்த கீதம் நிறைந்த அகத்தோடும் அவரருகிலே வந்து நின்றன; மாடு, மேய்த்துக்கொண்டு நின்ற இடையர்களெல்லாரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டுக்கொண்டு நின்றார்கள்; விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள்; வருத்துகின்ற உயிர்களும் வருத்தப்படுகின்ற உயிர்களும் அவ்விசையைக் கேட்டு அதன்வசமான படியால், பாம்புகள் மயங்கிப் பயமின்றி மயில்களின் மேலே விழும்; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும்; மான்கள் புலிகளின் பக்கத்திலே செல்லும்; மரக்கொம்புகள் தாமும் சலியாதிருந்தன. இப்படியே சரம் அசரம் என்னும் ஆன்மவர்க்கங்களெல்லாம் ஆனாயநாயனாருடைய வேய்ங்குழல் வாசனையைக் கேட்டு, இசைமயமாயின, அவ்விசையைப் பொய்யன்புக்கு அகப்படாத பரமசிவன் கேட்டு, பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயமார்க்கத்தில் எழுந்தருளி வந்து நின்று,
அவ்வானாயநாயனார் மீது திருவருணோக்கஞ்செய்து, "மெய்யன்பனே; நம்முடைய அடியார்கள் உன்னுடைய வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாய்" என்று திருவாய்மலர்ந்தருளி, அவ்வானாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு பக்கத்திலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்

No comments:

Post a Comment