Monday, February 14, 2011

நரசிங்கமுனையரையநாயனார்

நரசிங்கமுனையரையநாயனார் புராணம்


நாடுபுகழ் முனைப்பாடி நாட்டுண் மேய
நரசிங்க முனையர்புவி நயத்து மன்று
னாடுமவ ராதிரைநா ளடியார்க்கம்பொ
னமுதளிப்பா ரொளிவெண்ணீ றணிந்துதூர்த்த
வேடமுடை யவர்க்கிரட்டிச் செம்பொ னீந்து
விடுத்தழகா ராலயங்கள் விளங்கச் செய்து
தோடலர்தா ருடையபிரா னருளை யாளத்
தோன்றினா ரெனையருளி னூன்றி னாரே.

திருமுனைப்பாடி நாட்டிலே, குறுநில மன்னர் குலத்திலே நரசிங்கமுனையரையநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார், அவர் தமக்குப் பெருஞ்செல்வமாவது விபூதியே என்னுஞ் சிந்தையுடையவர். சிவனடியார்களது திருவடியை அடைதலே தமக்குப் பெரும்பேறெனத் துணிந்தவர். அநித்தியமுந் துக்கமுமாகிப் அரசியற்கையில் வைத்த விருப்பத்தாலன்று, சர்வான்மாக்களுஞ் சற்சமயமாகிய சைவத்தைக் கைக்கொண்டு முத்தியின்பத்தை அடைதல் வேண்டுமென்னும் பெருங்கருணையினாலே பலசத்துரு முனைகளைக் கடந்து, சைவநெறி வாழும்படி திருவருளை முன்னிட்டு நின்று அரசாள்வார். சிவாலயங்கடோறும் நித்திய நைமித்தியங்களை ஒழுங்குபெற நடத்துவிப்பார். திருவாதிரை நஷத்திரந்தோறும், விசேஷபூசை செய்வித்து, தம்மிடத்தில் எழுந்தருளிவரும் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து, அவர்களுக்குத் தனித்தனியே நூறுபொன் கொடுப்பார்.
ஒரு திருவாதிரை நக்ஷத்திரத்திலே அப்படியே அடியார்களுக்குப் பொன் கொடுக்கும்பொழுது, தூர்த்தவேடமுள்ள ஒருவர் விபூதி அணிந்துகொண்டு வந்தார். அவருடைய வடிவு இருந்தபடியே கண்டு, பக்கத்தில் உள்ளவர்கள் இகழ்ந்து ஒதுங்க; நரசிங்கமுனையரையர் அதுகண்டு, எதிரே சென்று, அவரை அஞ்சலி செய்து, அழைத்து கொண்டு போய், அவரை மிக உபசரித்து, சீலம் இல்லாதவர்களாயினும் விபூதியை அணிந்தவர்கள் உலகத்தார் இகழ்ந்து நரகத்தில் வீழாவண்ணம் அவருக்கு இருநூறு பொன் கொடுத்து, அவரை வணங்கி, இன்சொற்சொல்லி, விடை கொடுத்து அனுப்பினார். இந்தப் பிரகாரம் அருமையாகிய திருத்தொண்டுகள் பலவற்றைச் செய்து சிவபதமடைந்தார்.



No comments:

Post a Comment