Tuesday, February 22, 2011

பகவத் கீதை - ஸ்லோகங்கள்

பகவத் கீதை - ஸ்லோகங்கள்

1. எனக்காய் செயல் புரிவோனும்

பக்தியோடு என்னைப் பணிவோனும்

உலகில் பற்றோ வெறுப்போ இன்றி

வாழும் அன்பன் எனை அடைவான்.

- அத் (11,55)
2. எல்லா உயிரிலும் சமமாயுள்ளேன்

நண்பன் வைரி எனக்கில்லை

எனினும் என்னை அன்பால் அடைவோர்

என்னுள் அவர். அவரில் யான்.

- அத் (9,29)
3. ஸாமங்களிலே பிருஹத் ஸாமம் யான்

சந்தங்களில் யான் காயத்ரி

மாதங்களில் மார்கழி யானே

ருதுக்களிலே யான் வசந்தம்தான்.

- அத்(10,35)
4. யாருள் உயிர்கள் நிலை பெற்றிடுமோ

யாரால் யாவும் நிறைவுறுமோ

பரம்பொருளாகிய அப் பரமாத்மா

அனன்ய பக்திக்கு அகப்படுவான்.

-அத்(8,22)
5. நீரில் சுவையும் வானில் ஒலியும்

மதியில் ரவியில் ஒளியும் யான்-

வேதம் அனைத்திலும் ஒங்காரம் யான்

மாந்தரில் ஆண்மை யானேதான்.

-அத்(7,8)
6. நேயர், நண்பர், பகைவர், இதரர்

நடுவர், வெறுப்போர், பந்துக்கள்

ஸாத்விகர், பாவியர் என்பாரிடமும்

சமமதி உடையோன் மேலோனாம்.

-அத்(6,9)
7. தன்னைவென்று மனத் தெளிவுற்றோன்

குளிர் வெப்பச் சுக துக்கத்தில்

புகழொடு வசையில் சமநிலையுற்றோன்

பரமாத் மாவின் அருளுற்றான்.

-அத்(6,7)
8. தவத்தொடு யாகம் துய்ப்போன் யானே

உலகுக் கெல்லாம் ஈசுவரனே

எல்லா உயிர்க்கும் தோழன் நானே

என அறிவோனே சாந்தியுளான்.

-அத்(5,29)
9. தீமை இல்லாச் சொல்லொடு ஸத்தியம்

இனிமை நலனும் பயக்கும் சொல்

வேதம் ஓதல் நாம ஜபங்கள்

யாவும் வாக்குத் தவமாகும்.

-அத்(17,15)

10. வானவர் அந்தணர் குருக்கள் ஞானியர்

யாவரிடத்திலும் பணிவன்பு,

தூய்மை, நேர்மை, புலன்மேல் ஆட்சி

அஹிம்சை யாவும் உடல் தவமாகும்.

-அத்(17,14)

No comments:

Post a Comment