Friday, March 11, 2011

விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்கள் குடும்பத்திற்கு ஆகாதா?

விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்கள் குடும்பத்திற்கு ஆகாதா?
ஒரு ஆணுக்கு திருமணம் செய்யும் போது விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்களை காரணமின்றி சில குடும்பங்கள் தவிர்க்கின்றன. காரணம் கேட்டால் விசாகம் கொழுந்தனாருக்கு ஆகாது; ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது; கேட்டை, மூலம் போன்றவை மாமனாருக்கு ஆகாது என சில ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறுகின்றனர். உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட நட்சத்திரப் பெண்ணால், புகுந்த வீட்டினருக்கு பாதிப்பு ஏற்படுமா? ஜோதிடத்தில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா?
பதில்: ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தைப் பற்றி உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ எந்தஒரு ஜோதிட நூலிலும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் போன்ற உவமைகள் ஜோதிடத்தில் எங்கும் கூறப்படவே இல்லை. மூலம் நட்சத்திரத்தைப் பொறுத்தவரை ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதாவது ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் அரசு, அரசு தொடர்பானவர்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள்; மூலம் 4ஆம் பாதத்தில் (பின் மூலம்) பிறப்பவர்கள் எதிரிகளை நிர்மூலமாக்குவார்கள் என்பதே அதன் பொருள். இதேபோல் ஆயில்யம் நட்சத்திரப் பெண்ணைக் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால், மாமியாருக்கு ஆகாது என்று கூறுவதும் மிகத் தவறானது. இதுபற்றியும் பண்டைய கால நூல்களில் கூறப்படவில்லை. இது விசாகம், மூலம், கேட்டை ஆகியவற்றுக்கும் பொருந்தும்.
இதுமட்டுமின்றி, மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆள்வார்; பரணி தரணியை ஆளும் என்பது போன்ற உவமைகளையும் சிலர் காலப்போக்கில் கூறிவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் பண்டைய ஜோதிடம் எந்த ஒரு நட்சத்திரத்தையும் தாக்கியோ அல்லது தூக்கியோ கூறவில்லை.
எனவே, நட்சத்திரத்தை மட்டும் பார்த்து ஒரு பெண்ணின் ஜாதகத்தை மாப்பிள்ளை வீட்டார் வேண்டாம் என்றும் கூறுவது கூடாது; இது பெண் வீட்டாருக்கும் பொருந்தும். மாறாக, சம்பந்தப்பட்ட பெண்/ஆணின் ஜாதகத்தில் மாமனார், மாமியார், இதர உறவுகளைக் குறிக்கும் இடம்/கிரகங்களின் நிலை எப்படி இருக்கிறது என ஜோதிடப்படி ஆராய்ந்த பின்னரே அந்த வரனைத் தவிர்க்க வேண்டும்.



No comments:

Post a Comment