சிவாலயங்களில் மூலவராக சிவலிங்கம் ஏன் ?
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாகிய இறைவன்,
உயிர்கள் ( ஆன்மாக்கள் ) உய்வு பெற வேண்டும் என்பதற்காக
மூன்று விதமான வடிவங்களை எடுத்துக் கொண்டு வந்து,
நமக்கு அருள்செய்கின்றான்.
அவ் வடிவங்கள்,
அருவம் - சிவம் - அதிசூக்குமம் - கண்ணுக்கு புலனாகாது -
இது நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
உருவம் - மகேசுவரன் - தூலம் - கண்ணுக்குப் புலப்படும் -
இது சகளத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
அருவுருவம் - சதாசிவன் - சூக்குமம் - வடிவம் இல்லை -
இது சகள நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
இதில் அருவம் - கண்ணுக்கு புலனாகாது
உருவம் - உமா மகேசுவரர், தட்சிணா மூர்த்தி, நடராசர் - போன்றவை
இந்த உருவத் திருமேனிகள் அறுபத்து நான்கு ( 64 ) வகையாக உள்ளதாக
ஆகமங்கள் கூறுகின்றன,
அதிலும் சிறப்பாக இருபத்தி ஐந்து ( 25 ) வடிவங்கள் -
மகேசுவர மூர்த்தங்கள் என்று சொல்லப்படுகின்றன.
மூன்றாவதாக இருக்கக் கூடிய அருவுருவத் திருமேனியே - சிவலிங்கம் எனப்படும்.
" இலிங்கம் " - என்பதற்கு குறி என்பது பொருள்,
" குறி " - என்றால் = ஒரு அடையாளம்
ஆக காண முடியாத இறைவனை காணுவதற்கான அடையாளமே சிவலிங்கம் எனப்படும்.
சிவலிங்கம் = சிவ + லிம் + கம்
சிவம் - இறைவர்
லிம் - அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்கும் இடம்
கம் - ஒடுங்கிய அப்பொருள்கள் ( சராசரங்கள் ) மீண்டும் தோன்றும் இடம்,
ஆக அண்ட சராசரங்களையும் படைத்தும் அழித்தும் அருளவும்
வல்ல வடிவமே சிவலிங்கம் எனப்படும்,
சிவலிங்கத்தின் அடிப்பாகம் - நாற்கோண வடிவினதாய் இருக்கும் -
இது பிரம தத்துவம்
சிவலிங்கத்தின் நடுப்பாகம் - எண்கோண வடிவினதாய் இருக்கும் -
இது விஷ்னு தத்துவம் ( இது ஆவுடை எனப்படும் )
சிவலிங்கத்தின் மேல் பாகம் - நீண்ட வட்ட வடிவினதாய் இருக்கும் -
இது சிவ தத்துவம் ( இது பாணம் எனப்படும் )
இந்த பாணத்தின் அடிப் பாகத்தில் - உருத்திரனும்,
இந்த பாணத்தின் நடுப் பாகத்தில் - ஈசுவரனும்,
இந்த பாணத்தின் மேல் பாகத்தில் - சதாசிவனும்,
இருக்கிறார்கள்.
இந்த சிவலிங்கம் என்பது இரண்டு வகைப்படும், அவை,
1. பரார்த்த லிங்கம்
( திருக்கோயில்களில் அனைவரும் வழிபடத் தக்க வகையிலே கருவறையில் எழுந்தருளியிருப்பது )
2. ஆன்மார்த்த லிங்கம் அல்லது இஷ்ட லிங்கம்
( விரும்புகின்ற அன்பர்கள் முறையான தீக்கை பெற்று இல்லத்தில் வைத்து பூசிப்பது )
விஞ்ஞானிகள் அணுவை ( எலக்ட்ரான் ) ஆராய்ச்சி செய்த போது,
அந்த அணுவானது பச்சை நிறமான ஒரு வட்ட வடிவமாகவும்,
அதன் மீது ஒரு சோதியுமாக காட்சி தந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்,
இந்த பச்சை வடிவம் ஆவுடையாகவும் + அதன் மீதிருந்த சோதி இலிங்கமாகவும் காட்சியளித்தது என்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி பூர்வமான உண்மை.
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
நாணாது நேடிய மால் நான்முகனும் காண நடுச்
சேணாரும் தழல் பிழம்பாய் தோன்றியது தெளிந்தாராய்.
- எம்பிரான் சாக்கிய நாயனார் புராணம் : 8
என்று குறிப்பிட்டு அருளியிருப்பதை சிந்தித்து வியக்கலாம்.
ஆக நம்பொருட்டு இறைவன் எடுத்து அருளார்ந்த நிலையிலே திருக்கோயில்களில்வீற்றிருக்கும் இலிங்கத் திருமேனியை தரிசிப்போம்.. உய்வு பெறுவோம்.
No comments:
Post a Comment