Tuesday, May 31, 2011

செவ்வாய்தோஷம்

நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் உடலின் ரத்த அணுக்களுக்குரிய கிரகம். இதனை பூமிக்குரிய கிரகமாகவும், உடன்பிறப்பிற்குரிய கிரகமாகவும் சோதிடவியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். மனிதர்களின் நடத்தையை நிர்ணயிப்பதில் செவ்வாய்க்கு முக்கிய பங்குண்டு. மரபணு, ரத்த அணுக்கள், ஆண்களின் விந்தணுக்கள் ஆகியவற்றிர்க்கு செவ்வாய்தான் காரணமாக உள்ளது.

நீச்ச செவ்வாய்

செவ்வாய் வீரியத்திற்குரிய கிரகம் என்பதால் ஆண், பெண் இருபாலருக்கும் அது சரியாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் தோஷம் என்று குறிப்பிடப்படுவது இந்த குறைபாட்டினைத்தான். எனவே ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சமாகி சுபகிரகப் பார்வை இல்லாமல் இருந்தால் அவருக்கு காமத்தில் ஈடுபாடு இருக்காது.

ஆண் பெண் இருவருக்கும் சரியான விகிதத்தில் செவ்வாய் அமைந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் இன்பம் ஏற்படும். பெண்ணிற்கு வலுவாக செவ்வாய் இருக்கும் பட்சத்தில், ஆணிற்கும் வலுவாக செவ்வாய் இருக்க வேண்டும் என்று சோதிடவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால்தான் தோஷமுள்ளவர்களின் திருமணம் தடைபடுகிறது.

தோஷநிவர்த்தி

செவ்வாய் தோஷக்காரர்கள் சுப்பிரமணிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தால் தோஷநிவர்த்தி நிச்சயம். திருவாரூர் மாவட்டம் பேராளத்துக்குப் பக்கத்தில் கடகம்பாடி அருகே உள்ள சிறுகுடியில் மங்களநாயகி சமேத சூட்சுமபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு முன்புறம் மங்களதீர்த்தம் என்னும் குளம் உள்ளது. குளக்கரை விநாயகர், மங்களவிநாயகர், செவ்வாய் தோஷ ஜாதகக்காரர்கள் மங்களதீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை முறைப்படி வழிபட்டு திருநீறு பெற்று பூசிக்கொண்டால் தோஷநிவர்த்தி நிச்சயம். செவ்வாய்க்கிழமைகளில் காலையும், மாலையும் நீராடி வழிபடுவது உத்தமம்.

செவ்வாய்க்கிழமை விரதம்

ஜாதகத்தில் அங்காரக தோஷம் உள்ளவர்க்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தை மங்களவார விரதம் என்று சொல்வார்கள். செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் அம்மனின் அருளும், முருகனின் அருளும் கிடைக்கிறது. செவ்வாய் தோஷமும் நீங்குகிறது. ரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கி மனதில் தைரியமும் வீரமும் பிறக்கின்றன.

செவ்வாய்கிழமை விரதம் இருக்கும் பெண்கள் பூஜை முடிந்த பின் துவரை வழங்கவேண்டும். அதன்பிறகு சுமங்கலிப்பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் ஆகியவற்றைத் தரவேண்டும்.

செவ்வாய்திசை, செவ்வாய்தோஷம், செவ்வாய் நீசம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது நன்மை தரும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செம்பவழத்தைக் கழுத்துச் சங்கிலியிலோ, மோதிரத்திலோ அணிந்து கொள்ள வேண்டும்.

இத்தோஷம் உள்ள பெண்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை நாட்களில் காலையில் அம்மனையும், மாலையில் முருகனையும் வழிபட்டு வந்தால் தோஷம் நீங்கிவிடும்.

பிரிந்தவர்களை இணைக்கும் செவ்வாய்

நவகிரகத்தில் செவ்வாயை சகோதரகாரர் என்று குறிப்பிடுவர். இவரை வழிபட்டால் சகோதரர் உறவு பலப்படும். பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர செவ்வாய்க்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட வேண்டும்.

தாரதோஷம்

சில ஆண்களுக்கு ஜாதகரீதியாக தாரதோஷம் ஏற்படுவதுண்டு. செவ்வாயினால் உண்டாகும் இந்த தோஷத்திற்காக, வாழைமரத்தை வெட்டி பரிகாரம் செய்யும் படி ஜோதிடர்கள் கூறுவதுண்டு. இது மனத்திருப்திக்காக மட்டுமே செய்யப்படுகிறது.

முருகனை நினைத்து அனுதினமும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு எந்த வித தோஷமும் தீண்டாது.

No comments:

Post a Comment