Monday, May 2, 2011

சக்தி பீடங்கள்

அண்ட சராசரங்களுக்கும் அதிபதியாய் திகழக் கூடியவன் சிவபெருமான். திருமாலும் பிரம்மனும் அடி முடி காண முயன்ற போது ஜோதி வடிவாய் நீண்டு வளர்ந்து அவர்களை பிரமிக்க செய்தவன். இவ்வாறு அகில லோகத்திற்கும் நாயகனாக விளங்கக் கூடிய சிவபெருமான் தனக்கு மருமகனாக வர வேண்டும் என்று  ஆசை கொண்டான் ஒரு மன்னன். அவன் பெயர் தட்சன்.
தன்னுடைய ஆசையை நிறைவேற்ற எண்ணம் கொண்ட தட்சன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவனுடைய தவத்திற்கு இரங்கி வந்த சிவபெருமான் வேண்டிய வரங்களை கேள் என்று அவனிடம் கூறினார். தாங்கள் எனக்கு மருமகனாக வேண்டும். இதுவே  நான் விரும்பும் வரம் என்று தட்சன் கூறினான். கேட்டதை கேட்டபடியே கொடுக்கக் கூடிய எம்பெருமானாகிய சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தார்.
அதன் காரணமாக தட்சனுக்கு தாட்சாயணி என்ற பெயரில் ஒரு மகள் தோன்றினாள். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்த தட்சன் உரிய பருவம் வந்ததும் சிவபெருமானுக்கு மணமுடித்தான். சிவபெருமான் தனக்கு மருமகனாக வரவேண்டும் என்று தட்சன் ஆசைப்பட்டது உண்மையான அன்பின் காரணமாகவா? அதுதான் இல்லை அகில லோகத்திற்கும் அதிபதியாக விளங்கக்கூடிய சிவபெருமான் தனக்கு மருமகனாகி விட்டால் எல்லோரும் தனக்கு அடங்கி நடக்கக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள் என்று நினைத்துதான் அவன் அந்த வரத்தினைக் கேட்டான்.

அனைத்தும் அறிந்த சிவபெருமானுக்கு இது தெரியாமல் போகுமோ? அவனுடைய ஆணவப் போக்கை புரிந்து கொண்ட அவர் எவரிடமும் சொல்லாமல் தாட்சாயணியை அழைத்துக் கொண்டு கைலாயம் போய் விட்டார். மாமனார் என்ற மரியாதை வைக்காமல் அவர் தாட்சாயணியை அழைத்துக் கொண்டு போய்விட்டதாக நினைத்தான் அவன். அதன் காரணமாக எம்பெருமானாகிய சிவபெருமானையே எதிரியாக நினைத்தான். அதன் காரணமாக ஒரு பெரிய யாகத்தை அவன் தொடங்கினான். சகல தேவர்களுக்கும் அழைப்பு அனுப்பினான்.
தேவர்களுக்கெல்லாம் தேவனான மகாதேவனுக்கு மட்டும் அழைப்பு இல்லை. யாகம் தொடங்கும் நாளும் வந்தது. சகல தேவர்களும் அந்த கூட்டத்தில் குவியத் தொடங்கினர். தாட்சாயணி யாகத்துக்குச் சென்று வர சிவபெருமானிடம் அனுமதி கேட்டாள். மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றார் மகாதேவன். ஐயனே யாகத்திற்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. தட்சனின் தவறினை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாங்கள் எனக்கு தர வேண்டும். சென்று வர அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் தாட்சாயணி. பிறைசூடனாகிய எம்பெருமான் அதனை மறுத்து பேசுகிறார்: தாட்சாயணி சகல தேவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளான் அந்த தட்சன். வேண்டும் என்றே எனக்கு அழைப்பு அனுப்பவில்லை அவன் அழியும் காலம் நெருங்கிவிட்டது. அழிய போகிற ஒருவனை நல்வழிப்படுத்தப் போகிறேன் என்கிறாய். அது உன்னால் முடியாது. நீ போக வேண்டாம். போய் அவமானம் அடைய வேண்டாம் என்று கூறுகிறார்.
தாட்சாயணி விடவில்லை முயற்சி செய்து பார்க்க விரும்புகிறேன் தாங்கள் அதற்கு அனுமதி தந்தருள வேண்டும் என்று மீண்டும் கூறத் தொடங்கினாள். பிறந்த வீட்டார் அநியாயக்காரர்களாக இருந்தாலும் புகுந்த வீட்டில் அவர்களைப் பற்றி விட்டுக்கொடுக்காமல் பேசுவது பெண்களின் வழக்கம் அகிலாண்ட நாயகனின் துணைவியான தாட்சாயணியும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாதல்லவா?

அதனை புரிந்து கொண்ட எம்பெருமான் போ என்று வெறுப்புடன் கூறினார். தாட்சாயணி யாக சாலைக்கு வந்தாள் தட்சனைப் பார்த்து அவள் பேசுகிறாள் தந்தையே.. மாமன் வீட்டில் விழா என்றால் முதல் அழைப்பு மருமகனுக்குத்தானே? சாதாரண குடிமகனுக்கு தெரிந்த இந்த நீதி உங்களுக்கு தெரியவில்லையா? என்றாள். அதைக் கேட்ட தட்சன் அடங்கா சினம் கொண்டான். என்னை மதிப்பவர்களை நான் மதிப்பேன். என்னை மதிக்காதவர்களை எதிர்க்க தயங்க மாட்டேன் என்று இருமாப்புடன் கூறினான் அவன்.
அதனைக் கேட்ட தாட்சாயணி கடுமையுடன் பேசுகிறாள். சிவபெருமான் உங்கள் மருமகன் என்று குறுகிய எண்ணத்தோடு நோக்க வேண்டாம். அகில லோகத்துக்கும் அதிபதி அவர். அவரை அவமதித்து அவனிலே வாழ முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவிர்பாகம் அளித்து ஆணவத்தை விடுங்கள் என்றாள். தட்சனின் கோபம் தலைக்கேறியது. சுடுகாட்டில் சுற்றித் திரியும் பித்தன் எனக்கு மருமகனும் அல்ல நீ எனக்கு மகளும் அல்ல. அழையாத வீட்டுக்கு வந்த உன்னை யாரும் எதிர்கொண்டு அழைக்கவில்லை. போய்விடு என்று கூச்சலிட்டான் ஆத்திரம் அவனது அறிவை மறைத்தன. சுடுகாட்டில் சுற்றித்திரியும் பித்தன் பேயன் என்றெல்லாம் எம்பெருமானை சாடினான். தட்சனின் வார்த்தகளைக் கேட்ட தாட்சாயணி எரிமலையாகிறாள்.

அவளுடைய கடும் கோபத்திலிருந்து உருவமற்ற காளி உருவெடுததாள் அதேசமயம் சிவபெருமானின் கோபததிலிருந்து வீரபத்திரன் தோன்றினான். சிவபெருமான் வீரபத்திரனைப் பார்த்து கூறுகிறார் வீரபத்திரா தட்சன் நமக்கு அவிர்பாகம் கொடுக்க மறுத்தால் அவனையும் யாகத்தையும் அழித்து வருக என்றார். எம்பெருமானின் கட்டளையை ஏற்ற வீரபத்திரன் வேகமாக யாக சாலைக்கு வந்து , "ஏ தட்சனே அகிலாண்ட நாயகனான ஆதிசிவனுக்கு அவிர்பாகம் அளிக்காமல் நீ யாகத்தை நடத்த முடியாது. அறியாமை காரணமாக யாகத்தை தொடங்கியிருக்கிறாய். மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஆண்டவனை பணிந்தால் உனக்கு உயிர் பிச்சை கொடுக்கிறேன். இல்லையேல் உன்னையும் உன் யாகத்தையும் உருத்தெரியாமல் ஆக்கிட உத்தரவு பெற்று வந்திருக்கிறேன். உன் முடிவை நீயே முடிவு செய்துகொள்" என்றான்.
வீரபத்திரன் கூறியும் தட்சனுக்கு புத்தி வரவில்லை. ஆணவத்துடன் வார்த்தைகளை கூறினான். உடனே காளியாக தோன்றிய தாட்சாயணியும் வீரபத்திரனும் சேர்ந்து யாகத்தை நிர்மூலமாக்கினார்கள். யாகத்திற்கு வந்திருந்த தேவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தட்சனின் தலை கீழே உருண்டது. சற்று நேரத்திற்கு முன்வரை ஆணவமாக பேசிய அவன் தலை கீழே உருண்டது.
தட்சனாகிய கொடியவன் வளர்த்த அந்த உடலை அவள் வெறுத்தாள். அகிலாண்ட நாயகனை அவமதித்தவனின் மகள் என்று உலகம் கூறுவதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதன் காரமணமாக தன் உடலை அவள் தீக்கிரையாக்கினாள். தீயிலே கருகிய அவள் உடலை கண்டு சிவபெருமான் துயரம் கொண்டு அவளின் உடலை தோளில் தாங்கி ருத்ர தாண்டவம் ஆடினார். அவருடை ஆட்டத்தில் அண்ட சராசரங்களும் ஆடின. அனைத்து உயிர்களும் என்ன நடக்குமோ என்று அதிர்ச்சி அடைந்தன.

அவருடைய ஆட்டத்தை நிறுத்த திருமால் தன்னுடைய சக்ராயுதத்தை ஏவினார். அந்த சக்கரம் தாட்சாயணியின் உடலினை சிதைத்து துண்டு துண்டுகளாக்கியது. சிதறிய அந்த துண்டுகள் பாரத தேசம் முழுவதும் விழுந்தன. அந்த துண்டுகள் விழுந்த இடங்களே சக்தி பீடங்களாகவும் அன்னையின் ஆலயங்களாகவும் இன்று திகழ்ந்து கொண்டிருக்கின்றன.
பிறகு, அந்த மகேசன் அன்னையை திரும்பவும் வரவழைத்தார்..
  அந்த 51 இடங்களிலிருந்து , அன்னை பராசக்தி யின் ஆத்ம சக்தி , பல்கிப்  பெருகி - இன்றும்  உலகை, நாடி வரும் பக்தர்களை  - காத்துக் கொண்டு இருக்கிறது.. !!
பக்தர்களின் துயர் துடைக்க , நமக்கு ஒரு வழியை ஏற்படுத்த - அன்னை நடத்திய ஒரு திருவிளையாடல் இது.. ..!!

No comments:

Post a Comment