Thursday, May 5, 2011

"திருமணப் பொருத்தம்

"திருமணப் பொருத்தம்"

 :திருமணப் பொருத்தம்" என்பது; கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் நிலையான மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இன்பமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, சுபீட்சமான எதிர்காலம் என்பன அமையுமா? என இருவருடைய ஜாதகங்களின் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் (நிலைகளைக்) கொண்டு கணித்து அறிதல் என்பதாம்.
விவாகப் பொருத்தம் பார்க்கும் பொழுது மணமகன், மணமகள் ஆகிய இருவருடைய ஜாதகங்களிலும், பிறந்த நட்சத்திரங்களை வைத்து 10-பொருத்தங்களும், ஜாதக-கிரக நிலையை கொண்டு கிரக-தோஷங்களும் பார்த்து விவாகம் முடிவு செய்யப்படுகின்றது.

மேலும் வாசிக்க கீழே உள்ள read more என்ற பொத்தானை அழுத்துங்கள்

இன்பமான குடும்ப வாழ்க்கைக்கு; மனப் பொருத்தம், புரிந்துணர்வு, அன்பு , பெருந்தன்மை, பரஸ்பர நம்பிக்கை, பிள்ளைப் பேறு, மகிழ்ச்சியான சிற்றின்ப வாழ்க்கை, அதிஸ்டம் ஆகியன அடிப்படைத் தேவைகளாகும். இவற்றுடன் மாரக தோஷம் அற்றவர்களாகவும் அமையப் பெற்றவர்களின் குடும்ப வாழ்க்கை ஆயுட் காலம் வரை மகிழ்ச்சியாக இருக்கும் என்பது அனுபவ உண்மை.

எனவே திருமணத்திற்கு மன(காதல்) பொருத்தமும், ஜாதகப் பொருத்தமும் மிக முக்கியமானதாகும். கிரகப் பொருத்தம் இல்லாத மன பொருத்தம் தற்காலிகமானது. காலப் போக்கில் கிரகநிலை மற்றங்களினால் மனம் மாற்றமடைந்து குழப்பங்கள் ஏற்படலாம். ஆதலினால், நீடித்த மகிழ்ச்சியான தி்ருமண வாழ்க்கையை உறுதி செய்வதற்கு "ஜாதப் பொருத்தம்" மிக கட்டாயமாகின்றது.

முக்கியமான பத்துப் பொருத்தங்களாவன: (நட்சத்திரமூலம் கணிக்கப்பெறுபவை)
1. நட்சத்திரப்-பொருத்தம், 2. கணப்-பொருத்தம், 3. மகேந்திரப்-பொருத்தம், 4. ஸ்திரி தீர்க்க-பொருத்தம், 5. யோனிப்-பொருத்தம், 6. ராசிப்-பொருத்தம், 7. ராசி அதிபதிப்-பொருத்தம், 8. வஸ்யப்-பொருத்தம், 9. ரச்சுப்-பொருத்தம், 10. வேதைப்-பொருத்தம் என்பனவாம்.

1. நட்சத்திரப்-பொருத்தம்: (ஆயுள் ஆரோக்கிய விருத்தி)
இதனை தினப்பொருத்தம் என்றும் சொல்வார்கள். இந்தப் பொருத்தம் ஆண் பெண் இருபாலாருடைய ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக் கூடியது.

பெண்ணின் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆக வரின் உத்தமம். இந்த எண்ணிக்கையுள் இல்லாதிருந்தால் பொருத்தம் இல்லை.

ஜன்ம நட்சத்திரம் முதல்:
10வது நட்சத்திரம் கர்ம நட்சத்திரம்
7-வது நட்சத்திரம் வதம்
19-வது நட்சத்திரம் அனு ஜென்மம்
22-வது நட்சத்திரத்தின் 4ம் பதம் வைநாசியம்
27-வது நட்சத்திரம் மருத்யு நட்சத்திரம்
27-வது நட்சத்திரம் வேறு ராசியகில் நீக்கவும், ஒரே ராசியாகில் உத்தமம்

ரோகினி, திருவாதிரை, மகம், விசாகம், திருவோணம், ஹஸ்தம், உத்திரட்டதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உத்தமம்.
பூரம், உத்திரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அஸ்வினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீர்ஷம், அனுஷம் ஆகிய 11 நட்சத்திரங்களும் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் மத்திமம்.

ஒரே ராசியாக இருந்தால் புருஷ நட்சத்திர பாதம் முந்தி இருந்தால் உத்தமம்.
மற்றைய நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் இல்லை. விலக்கப் படவேண்டும்.

ஸ்திரீ நட்சத்திரத்தில் இருந்து 7வது நட்சத்திரமாக புருஷ நட்சத்திரம் வரின், வதம் என்றும், புருஷ நட்சத்திரத்தில் இருந்து 22வது நட்சத்திரமாக ஸ்திரீ நட்சத்திரம் வரின், வைநாசிகம் என்றும் சொல்லப்படும். இந்த வதம், வைநாசிகம் ஆகிய இரண்டும் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால்; திருவாதிரைக்கு - உத்திரமும், பூரத்திற்கு - அனுஷமும்; பூசத்திற்கு - சித்திரையும்; புனர்பூசத்திற்கு - ஹஸ்தமும்; பூரட்டாதிக்கு - ரோகினியும் வதம்; வைநாசிகமானால் சுபம்-கெடுதல் இல்லை.
உத்தராடத்திற்கு - ரேவதியும்; மூலத்திற்கு -பூரட்டாதியும்; பரணிக்கு - பூசமுமானால் வதம்-வைநாசிக தோஷம் இல்லை.

ஏக-ராசியில் பெண் நட்சத்திரம் முந்தியது விரும்பத்தக்கதல்ல. ஏக-ராசியிலும் பரணி, அவிட்டம், பூசம் இவை புருஷ நட்சத்திரங்களாக வந்து பெண் நட்சத்திரத்திற்கு முந்தியதானாலும் விலக்கப்பட வேண்டியவை.

சதையம், அசுவினி, ஹஸ்தம், ஸ்வாதி, கிருத்திகை,பூராடம், ரோகினி, மகம் இந்த 8ம் ஏக ராசிகளாகளில் ஸ்திரீ முன்வந்தால் செய்யலாம்.

2. கணப்பொருத்தம்: (மங்களம்)
இப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் சுப பலன்களை அடைந்து சுகமாக வாழ்வார்கள். தம்பதியின் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்துவது இப்பொருத்தமே யாகும்.

இதை; குணப்பொருத்தம் என்றும் அழைப்பார்கள். பரந்த மனப்பான்மை, உயர்ந்த லட்சியங்கள், நன்னடத்தை, நல்ல குணங்கள் கொண்டவர்களை தேவகணம் என்றும்; சாதாரணமான குணமும், புத்தியும், லட்சியங்களும், நோக்கங்களும் உடையவர்களை மனுஷகணம் என்றும்; முரட்டு குணமும், மட்டமான எண்ணங்களும் கொண்டவ்ர்களை ராக்ஷ்தகணம் என்றும் மூன்று கணங்களாக பிரிக்கப்ப்ட்டுள்ளது.

ஸ்திரீ, புருஷருக்கு ஒரே கணமாக இருந்தால் பொருத்தம் உண்டு. ஸ்திரீ மனுஷ கணமும் புருஷர் தேவ கணமுமாய் இருந்தால் பொருந்தும்.

ஸ்திரீ தேவ கணமும் புருஷர் மனுஷ கணமுமாய் இருந்தால் பொருந்தும். ராக்ஷஸ கணத்திற்கு மனுஷகணமும், தேவ கணமும் பொருந்தாது.
(நட்சத்திரங்களும் அவற்றிற்கான கண விபரங்களையும் பஞ்சாங்கதில் பார்க்கவும்)

3. மகேந்திரப் பொருத்தம்: (சம்பத்து விருத்தி)
இப்பொருத்தம் இருந்தால் புத்திரவிருத்தி உண்டாகும். மக்கட் செல்வங்களை உண்டாக்கி, அவர்கள் மேன்மையாக வாழ்கின்ற யோகத்தை உண்டாக்குவதே, இந்த மகேந்திரப் பொருத்தமாகும்.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வரின் பொருந்தும். சம்பத்து கொடுக்கும்.

4. ஸ்திரீ தீர்க்கம்: (சகல சம்பத் விருத்தி)
இதன் மூலம் திருமகள் கடாட்சமும், சுபீட்சமும் நீடிக்கும். ஸ்திரீதீர்க்கப் பொருத்தமிருந்தால் சகலவிதமான சம்பத்துகளும் விருத்தியாகும்.

பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 13 நட்சத்திரங்களுக்குக் கீழாக ஆண் நட்சத்திரம் இருந்தால் பொருந்தாது. 13க்கு மேல் இருந்தால் உத்தமம். 9-க்கு மேல் 13 வரை மத்திமம். 9 வரை (7க்கு மேல் இருந்தால் பொருந்தும் என்று அபிப்பிராயம் தெரிவிப்பாரும் உளர்.)

5. யோனிப் பொருத்தம்: (தம்பதிகளின் அன்யோன்ய நட்பு - மகிழ்ச்சியான சிற்றின்ப உறவு)
இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.

இருவருக்கும் ஒரு யோனியாயினும், பகையில்லாத யோனிகளைல் ஆண் யோனி ஆணுக்கும் பெண் யோனி பெண்ணுக்கும்மாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம். இருவருக்கும் பகையில்லாத ஆண் யோனியாயின் மத்திமம். ஆணுக்கு பெண் யோனியும் பெண்ணூக்கு ஆண் யோனியுமாயினும் ஒன்றிற் கொன்று பகையோனி யாயினும் பொருந்தாது.

ஒன்றிற்கொன்று பகை யோனிகள்:
குதிரை - எருமை; யானை - சிங்கம்; குரங்கு - ஆடு; பாம்பு - கீரி; மான் - நாய்; எலி - பூனை; மாடு - புலி; பெருச்சாளி - பூனை.

6. ராசிப் பொருத்தம்: (வம்ச விருத்தி)
இந்த இராசிப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும்.

பெண்ணும் புருஷனும் ஒரு ராசியாயினும்; பெண் ராசிக்கு புருஷன் ராசி 6-க்கு மேற்படினும் உத்தமம்.
பெண் ராசிக்கு புருஷன் ராசி 2-ஆயின் மிருத்து; 3-ஆயின் துக்கம்; 4-ஆயின் தரித்திரம்; 5-ஆயின் வைதவ்வியம்; 6-ஆயின் புத்திர நாசம். இடபம் முதலான இரட்டை ராசிகளில் பிறந்த பெண்ணுக்கு 6-ம் ராசி புருஷ ராசியாக வரினும் மத்திமமான பொருத்தத்தை கொடுக்கும்.

பெண்ணும் புருஷனும் ஒரே ராசியாகும் போது பெண் நட்சத்திரத்திற்கு புருஷ நட்சத்திரம் பிந்தியதாகிற் பொருந்தாது. (இராசி என்பது சந்திர லக்கினத்தை குறிக்கும்)

7. ராசி அதிபதிப்-பொருத்தம்: (சந்ததி விருத்தி)
இராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். இப் பொருத்தம் இருந்தால் தம்பதிகளிடயே ந்ல்ல ஒற்றுமையும் சந்தோஷமான வாழ்க்கையும் அமையும. பொருத்தம் மத்திமமாயின் அவ்வப்போது சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து போகும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.

இருவர் இராசிகளும் ஒருவராயினும்; ஒருவருக்கொருவர் மித்துருக்களாயினும் உத்தமம். மித்துருக்கள் அல்லாதவை சத்துருக்கள் - பொருந்தாது.

சூரியன் - குரு
சந்திரன் - புதன், குரு,
செவ்வாய் - புதன், சுக்கிரன்
புதன் - சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி;
குரு - சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி;
சுக்கிரன் - செவ்வாய், புதன், குரு, சனி;
சனி - புதன், குரு, சுக்கிரன்.

8. வஸ்யப்-பொருத்தம்: (அன்யோன்ய வசியம் - இணைபிரியா அன்பு)
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். பெண்ராசிக்கு புருஷ ராசி வசியமானால் உத்தமம். புருஷ ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம். வசியமில்லாதது பொருந்தாது. இதுவும் ஒரு முக்கியமான பொருத்தம்.

பெண் ராசி ஆண் ராசி
மேஷம் சிங்கம், விருச்சிகம்
ரிஷபம் கடகம், துலாம்
மிதுனம் கன்னி
கடகம் விருட்சிகம், தனுசு
சிம்மம் மகரம்
கன்னி ரிஷபம், மீனம்
துலாம் மகரம்
விருச்சிகம் கடகம், கன்னி
தனுசு மீனம்
மகரம் கும்பம்
கும்பம் மீனம்
மீனம் மகரம்

9. ரச்சுப் பொருத்தம்: (தீர்க்க சுமங்கையாய் இருப்பது) ரச்சுப் பொருத்தம் மிக முக்கியமானது.

கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது.

சிரோரச்சு (சிர்ச்சு): மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
கண்டரச்சு (கழுத்து): ரோகினி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்
நாபிரச்சு (உதரம்): கிருதிகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
ஊருரச்சு (துடை) பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
பாதரச்சு (பாதம்): அஷ்வினி, ஆயிலியம், மகம், கேட்டை, மூலம், ரேவதி

ஸ்த்ரீ, புருஷ நட்சத்திரங்கள் ஒரே ரச்சுவாக இல்லாமல் இருப்பது உத்தமம்.

ஒரே இரச்சுவானால்: பொருந்தாது.

சிரோரச்சு: புருஷன் மரணம்
கண்டரச்சு: பெண் மரணம்
நாபிரச்சு: புத்திர தோஷம்
ஊருரச்சு: பண நஷ்டம்
பாதரச்சு: பிரயாணத்தில் தீமை

10. வேதைப்-பொருத்தம் (இடையூறு அற்ற இன்ப வாழ்க்கை)
தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.

வேதை என்றால் ஒன்றிற்கொன்று தாக்குதல் என்று பொருள். எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது மாறி இருப்பின் பொருத்தம் உண்டு. ஸ்திரி புருஷருடைய நட்சத்திரங்கள் கீழே குறித்தவாறு ஒன்றிற்கொன்று வேதையாய் இருப்பின் பொருந்தாது.

அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகினி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயிலியம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்தராட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஒன்றிற்கொன்று வேதை

இந்த 10-பொருத்தங்களையும், ஜாதகங்களின் கிரக நிலைகளையும் கவனத்தில் கொண்டு விவாஹ பொருத்தம் தீர்மானிக்கப்படல் வேண்டும்.

No comments:

Post a Comment