கொடைவள்ளல் கர்ணன் தன்னிடம் வந்து பொருள் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாத கருணை நெஞ்சம் கொண்டவன். ஒருநாள் அவன், தங்கக்கிண்ணம் ஒன்றில் எண்ணெய் வைத்து தேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது கிருஷ்ணர் அங்கு வந்தார். கர்ணன் மகிழ்வுடன் வரவேற்றான். கர்ணனின் கொடைத்திறத்தை சோதிக்க விரும்பிய கிருஷ்ணர், ""கர்ணா! நீ வைத்திருக்கும் தங்கக்கிண்ணம் எவ்வளவு அழகாக இருக்கிறது! அதை எனக்கு கொடேன்!'' என்று கேட்டார். ""கிருஷ்ணா! பிரபஞ்சத்தையே ஆளும் தலைவன் நீ! இந்த அற்பப்பொருளான தங்கக்கிண்ணத்தைக் கேட்கிறாயே! இருந்தாலும் உன்னைக் கேட்பதற்கு நான் யார்? இதோ தருகிறேன்,'' என்று கிண்ணத்தை எடுத்து அவரிடம் நீட்டினான். கர்ணனின் செயலைக் கண்ட கிருஷ்ணர் ஒரு கணம் அதிர்ந்து விட்டார். காரணம் கர்ணன் இடதுகையால் அக்கிண்ணத்தை கிருஷ்ணருக்கு கொடுத்தது தான். ""இடதுகையால் தானம் கொடுக்கக்கூடாது என்பது கூட அறியாதவனா நீ? உன் செயல் கண்டிக்கத்தக்கது,'' என்று கிருஷ்ணர் கோபப்பட்டார். ""பிரபு! என்னை மன்னித்து விடுங்கள். வலதுகையில் எண்ணெய் எடுத்தேன். கையைச் சுத்தம் செய்து வருவதற்குள் மனம் சஞ்சலப்பட்டு விட்டால் "கொடுத்து மகிழ வேண்டும்' என்ற நல்ல எண்ணம் மாறிவிடலாம். மனம் நிலைதடுமாறக்கூடியது என்பதை தாங்கள் அறிவீர்கள் அல்லவா! நினைத்ததை நினைத்தவுடன் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் வேகமாக இடதுகையால் தங்களுக்கு கிண்ணத்தை அளித்தேன். என்னை மன்னியுங்கள்,'' என்றான். பார்த்தீர்களா! மனம் என்பது அடிக்கடி மாறக்கூடிய சாதனம். கொடைவள்ளல் கர்ணனுக்கே, தன் மனநிலை மாறிவிடுமோ என்ற சந்தேகம் இருந்ததென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்! செய்ய நினைத்த தர்மத்தை உடனே செய்யுங்கள். பலனை அடையுங்கள்
No comments:
Post a Comment