Monday, June 6, 2011

எங்கே நிம்மதி!

ஒரு பணக்காரர், துறவி ஒருவரைச் சந்தித்தார்.
""சுவாமி! பணம் நிறைய வைத்துள்ளேன். மனதில் நிம்மதியில்லை. நிம்மதிக்கு வழி சொல்லுங்கள்,'' என்றார்.
""பணம் இருக்கிறதல்லவா! நிறைய தானம் செய்யும்,'' என்றார் துறவி.
பணக்காரரும் தானம் செய்ய ஆரம்பித்தார். தினமும் துறவியைச் சந்தித்து, ""சுவாமி! இன்று ஆயிரம் ரூபாய் தானம் செய்தேன், இன்று பள்ளிக்கூடத்துக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன், இன்று ஒரு அந்தணருக்கு பசுமாடு வாங்கிக் கொடுத்தேன், இன்று கோயிலுக்கு நூறு லிட்டர் எண்ணெய் வாங்கிக் கொடுத்தேன், ஆனாலும், பலன் ஏதும் தெரியவில்லையே,'' என்று சொல்வார். துறவி சிரிப்பாரே தவிர பதில் சொல்லமாட்டார்.
ஒருமுறை லட்சம் ரூபாயை தானம் செய்துவிட்டு துறவியிடம் வந்தார்.
""சுவாமி! ஒருவேளை குறைந்த தானம் செய்ததால், என் மனதில் நிம்மதி வரவில்லை என நினைத்து, இன்று அதிக பணத்தை தானம் செய்தேன். ஆனால், மனம் என்னவோ சஞ்சலத்தில் தான் இருக்கிறது,'' என்றார்.
துறவி அவரிடம், ""வெயிலில் போய் சற்று நில்லும்,'' என்றார். பணக்காரரும் நின்றார். கால் சுட்டது. ""சுவாமி, கால் சுடுகிறதே,'' என்றார்.
""உமது நிழல் தரையில் விழுகிறதா?'' என்றார் துறவி.
""ஆம்'' என்ற பணக்காரரிடம், ""வெயிலில் இருந்து தப்ப உம் நிழல் மீது காலை ஊன்றும்,'' என்றார். பணக்காரரும் காலை ஊன்ற நிழல் சற்று தள்ளிப்போனது.
""செல்வந்தரே! உமது நிழல் கூட இந்த உலகத்தில் <உமக்கு உதவவில்லை. நீர் சேர்த்து வைத்துள்ள பணம் எவ்வகையில் <உதவும்! நீர் இதுவரை செய்த தானம் பிறரை சிரிக்க வைத்தது. அந்த சிரிப்பின் எதிரொலி மறுபிறவியில் நன்மையைத் தரும்.
நிம்மதி என்பது அவரவர் தானாக வருவித்துக்கொள்ள வேண்டிய விஷயம். இந்த உலக வாழ்க்கை பொய்யானது என்ற ஞானம் எப்போது வருகிறதோ, அப்போது நிம்மதி தானாகவே மனதுக்குள் வந்துவிடும்,'' என்றார்.

No comments:

Post a Comment