Saturday, June 11, 2011

தினமும் இப்பாடலை ஒருமுறை கூறினால் தினம் தினம் திருப்பதி சென்று வேங்கடவனைச் சுற்றி வந்து கும்பிட்டால் என்ன பலனோ அது நிச்சயமாகக் கிடைக்கும்

தெய்வம் என்றாலே கருணை தான். ஆனால் கருணையே உருவான தெய்வம் எனில் நிச்சயம் திருவேங்கடமுடையான்தான் நமது மனதில் வந்து நிற்பார். இறைவனின் கருணை மனிதனுக்கு அவரது கண் வழியேதான் வெளிப்படுகிறது. எல்லா தெய்வங்களும் நம்மை கருணையாக நோக்கினாலும், லேசாகச் சிரிக்கும் கண்களில் கருணை பொங்கிப் பிரவகிக்கும் அற்புதத்தை பெருமாளிடம்தான் காண முடியும். அவரது எல்லையற்ற கருணைப் புனல் கண்கள் வழியே பொழிவதை அவராலேயே மறைக்க முடியாத அளவிற்கு அவர் கருணை வள்ளராகத் திகழ்கிறார்.

திருமாலின் பெருமை பன்னிரண்டு ஆழ்வார்களது திகட்டாத தெள்ளமுதாக வழங்கப்பட்டுள்ளது. திவ்விய பிரபந்தத்தில் சொல்லாததை யாரும் எக்காலத்திலும் சொல்லிவிட முடியாது. அவருடைய கருணையின் வெளிப்பாடு கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தது. திரௌபதியின் மானம் காக்க ஆடை கொடுத்தது. ஒவ்வொரு முறையும் சிவன் கொடுத்த வரத்தினால் மக்களைத் துன்புறுத்திய அரக்கர்களையும் அழித்து, அந்த அரக்கர் களுக்கும் உலகுள்ள அளவிற்கு அழியா புகழையும் கொடுத்தது.


முருகனைப் பற்றியும் அவன் அன்னை யைப் பற்றியும் நான் பாடல்கள் எழுதியபோது, தானே வார்த்தை எடுத்துக் கொடுத்துப் பாட வைத்த திருமலை தெய்வத்தின் பிரபாவத்தைச் சொல்ல எனக்கு நிச்சயமாக அவராலேயே ஒரு பாக்கியம் கிடைத்தது நம்ப முடியாத விஷயம். ஆனால் நம்பத்தான் வேண்டும்.

"எப்போதும் என் மருமகனைப் பற்றிப் பாடும்போது என்னைப் பற்றியும் பாடு' என "ஒளிரும் திருக்கமலம்' என்ற வார்த்தையை அவர் கொடுக்க, எழுத ஆரம்பித்ததுமே எங்கிருந்தோ அருட்பிரவாகமாக ஆசுகவி தோன்றியது. அதுதான் கீழே காணும் பாடல்.

"ஒளிரும் திருக்கமலம் எனத்
திகழும் முக எழிலும்
ஒளியாதொரு கருணை மழை
பொழியும் இருவிழியும்
ஒளிந்தே விளையாடும்
குளிர் நிலவே உன் அழகாய்
ஒளியே என் வழியே என
உனை நான் பணிந்தேனே.

களிறும் மடப்பிடியும் வரும்
பாதை தனில் நானும்
களிகூர்ந்தெனைக் காக்கும்
உன் கருணைமுகம் கண்டு
களித்தே மனமினித்தே உனைக்
கவியால் புனை பாடி
களைவாய் வினைதனையே என
உனை நான் பணிந்தேனே.

இனிக்கும் சுவை கன்னல் என
இலங்கும் செந்தமிழில்
இனிதாகிய உனதன்பினில்
இழையும் சிறு துரும்பாய்
இனித்தே மனம் இனித்தே உனை
இசையால் புகழ் பாடி

இணையும் இரு கரங்கள் தொழ
உனை நான் பணிந்தேனே!
பதிக்கும் பவழத்தில் இதழ்
விரித்தே நீ சிரிக்க
பதியாம் உன் பக்கம் அமர்
பாவை எனைக் காக்க
(திருப்)பதியாம் உன் கோவில் தனில்
தினமும் உனைச் சுற்றி
பதித்தேன் என் பாதம் என
உனை நான் பணிந்தேனே!'

திருப்புகழ் போன்ற சந்தத்தில் இப்பாடல் அமைந்திருப்பது சந்தேகமின்றி அந்தத் திருமாலின் அருளினால்தான்.

தனது திருமணத்திற்காக குபேரனிடம் பொருள் பெற்று, அந்தக் கடனை நிவர்த்தி செய்ய வராஹ க்ஷேத்திரமான திருப்பதி யில் ஸ்வயம்புவாகக் குடியேறி, தன்னை நாடிவரும் பக்தர்களின் குறை தீர்க்கும்- வினை தீர்க்கும் பெருமாளின் விளையாட்டை என் னென்று சொல்ல! குபேரனுக்கே செல்வம் தரும் ஸ்ரீதேவி தன் மார்பில் இருக்கும்போது, ஒரு க்ஷணத்திலேயே அத்தனை கடனையும் அடைக்கும் செல்வ இலக்குமி தன்னிடம் இருந்தாலும், தானே சுயமாகச் சம்பாதித்து- தன் மனைவியின் உதவியை நாடாமல் கடனைத் தீர்க்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு நேர்மையான செயல்! அதிலும்கூட ஒரு கருணையல்லவா அடங்கி இருக்கிறது! கடன் அடைக்க வேண்டியிருந்தாலும் தனக்கு வரும் செல்வத்தை உலக மக்களின் பயன்பாட்டிற் காக உணவு, கல்வி, மருத்துவம் போன்ற நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவது மனிதனுக்கு உணர்த்துவது என்ன?

கடன்பட்டாகிலும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். எந்த நிலையிலும் தானதர்மத்தைக் கைவிடக் கூடாது. எந்த நிலையிலும் தன் மனைவியின் உழைப்பில் வரும் செல்வத்தில் பங்கு பெறக் கூடாது என பத்மாவதிக்குத் தனிக்கோவில் திருச்சானூரில் அமைத்து, பெண்மைக்கு மேன்மையும் தனித் தன்மையும் பொருளாதார சுய சார்பினையும் வழங்கிய மாண்பினை உலகில் வேறு எந்தக் கோவிலில் காண முடியும்? மேலும் இதில் இன்னொரு சூட்சுமமும் அடங்கியுள்ளது. சீக்கிரமாகத் தான் கடனை அடைத்துவிட்டு பாற்கடலில் சென்று பள்ளி கொண்டால், வைகுண்டத்திற்குச் சென்று விட்டால், அப்புறம் இங்கேயுள்ள மக்களின் பிறவிக் கடனை- அன்றாட வாழ்க்கைத் துன்பங்களை யார் நீக்க முடியும் என்ற கருணை நோக்கால், ஒரு நாளில் 24 மணி நேரமும் நின்று சேவை சாதிக்கும் அந்த வேங்கடவனின் கருணைக்கு வானம்கூட எல்லையில்லை. அதனால்தான் அந்த வானும் கடலும் நீல நிறம் கொண்டு ஒவ்வொரு கணமும் அவரது கருணையை நமக்கு நினைவுறுத்துகின்றன. அவருடைய அன்பு குணத்தில் ஒரு சதவிகிதம் ஒவ்வொரு மனிதனும் கொண்டு விட்டால், உலகில் யாருக்கும் எக்காலமும் துன்பம் வராது. இந்தப் பாடலில்,

"(திருப்)பதியாம் உன் கோவில் தனில்
தினமும் உனைச் சுற்றி'

என்பது வெறும் வார்த்தைகள் அல்ல என்பது எனது அனுபவம். தினமும் இப்பாடலை ஒருமுறை கூறினால் தினம் தினம் திருப்பதி சென்று வேங்கடவனைச் சுற்றி வந்து கும்பிட் டால் என்ன பலனோ அது நிச்சயமாகக் கிடைக்கும்; எனக்குக் கிடைக்கிறது.

1 comment:

  1. இனிக்கும் சுவை கன்னல் என அருமை ...

    ReplyDelete