Monday, June 27, 2011

தாமரை இலை தண்ணீர் !

காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான் ஒரு மன்னன். அவன் கண்ணில் அழகான மான் ஒன்று பட்டது. துள்ளிச் செல்லும் புள்ளிமானைத் துரத்திச் சென்றான். மன்னனின் பரிவாரங்கள் மன்னனைப் பின்தொடர முடியாமல் போனதால், பாதி வழியிலேயே நின்று விட்டனர். யாரும் இல்லாமல் தனியாளாக மானைப் பின்தொடர்ந்தான்.
மான் அவன் கண்களில் இருந்து தப்பித்தது. கண் மண் தெரியாமல் ஓடிய மன்னன், கிணற்றில் விழுந்தான். நல்லவேளையாக பாதிக்கிணற்றில் வளர்ந்த மரத்தின் வேரைப்பற்றிக் கொண்டு தொங்கினான். மறுநாள் பொழுது புலர்ந்தது. வழிப்போக்கராக வந்த சந்நியாசி ஒருவர், பாழுங்கிணற்றில் இருந்து எழுந்த முனகல் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தார். மன்னனைக் கண்டு இரக்கம் கொண்டார். கயிறு ஒன்றினை மன்னனிடம் கொடுத்து அவனை மேலே ஏற்றிவிட முயற்சித்தார். ""பயப்படாதே! கயிற்றினை இறுகப்பிடித்துக் கொள். மேலே வந்துவிடலாம்!'' என்றார் .
வேரை விட்டு விட்டு கயிறைப் பற்றிக் கொள்ள வேண்டியது தானே! ஆனால், மன்னன் யோசனை செய்து கொண்டிருந்தான். ஒருவேளை இந்த கயிறு இற்றுப்போயிருந்தால் உள்ளே விழுந்து விடுவோமே என்று! இதைத்தான் நாமும் இன்று செய்து கொண்டிருக்கிறோம். நாம் இவ்வுலகில் "சம்சாரம்' (உலகவாழ்வு) என்னும் வேரைப் பற்றிக் கொண்டு நிற்கிறோம். மகான்கள், ஞானிகள் உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம்மை ஆன்மிகம் என்னும் கயிறைப் பற்றிக் கொண்டு மேலே வரச் சொன்னால், அதன் அருமையை உணராமல் யோசித்துக் கொண்டு நிற்கிறோம். சொந்த பந்தங்கள், குடும்பம், நண்பர்களிடம் அன்பு காட்ட வேண்டியது தான்! அதற்காக அதிலேயே லயித்துப் போகாதீர்கள்! பணமும் ஓரளவுக்கு தான்! அதை சம்பாதிப்பதிலேயே காலத்தை ஓட்டி என்ன பலன் காணப்போகிறோம்! எதுவுமே நம்முடன் வரப்போவதில்லை. நாம் செய்யும் நற்செயல்களைத் தவிர! எனவே உறவும் வேண்டும், அதற்காக ஒட்டவும் செய்யக்கூடாது. தாமரை இலை தண்ணீர் போல வாழப்பழகித் தரும் ஆன்மிகத்தை இனியேனும் பற்றிக்கொள்வோமே!

No comments:

Post a Comment