Saturday, June 11, 2011

"நான்' என்னும் அகங்காரம் சேவலாகவும், "எனது' என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது

ப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உகந்த நாள். இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி மேன்மேலும் சிறப்பு பெறுகிறது.

சூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை யாவரும் அறிந்ததே.


சூரபத்மனை முருகப் பெருமான் முற்றிலும் வதம் செய்யாமல் வாகனமாகவும் கொடியாகவும் ஏற்றுக் கொண்டது ஏன் என்ற கேள்விக்கு புராணம் கூறும் தகவலைப் பார்ப்போம்.

முன்ஜென்மத்தில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். அவன் மகள் தாட்சாயிணி பரமனை மணந்தாள். அந்த வகையில் தட்சனான சூரபத்மன் பரமசிவனுக்கு மாமனாகிறான்.

சிவ- பார்வதி மைந்தனான முருகப் பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை வேண்டும். எந்தப் பேரனாவது தாத்தாவைக் கொல்வதற்கு முனைவானா? அதனால்தான் சூரபத்மன் மாமரமாகி நின்ற வேளையில், தன் அன்னையிடம் பெற்ற சக்திவேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து, "நான்' என்னும் அகங்காரம் சேவலாகவும், "எனது' என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாக்கி, மயிலை வாகனமாக்கிக் கொண்டார் முருகன்.


பேரனைச் சுமக்க தாத்தாவிற்கு கஷ்டமா என்ன? அதனால்தான் மயில் வாகனமாக மாறி, பேரனைச் சுமந்தார் தாத்தாவான சூரபத்மன்.

சூரபத்மன் ஆணவத்தை அழிப்பதற் கென்றே அவதரித்தவர் முருகப் பெருமான். இந்த சிவமைந்தன் முற்பிறவி யில் பிரம்மதேவனின் மைந்தனாக- பிரம்மஞானி சனத்குமாரர் என்ற பெயர் தாங்கி முக்காலம் அறிந்த ஞானியாகத் திகழ்ந்தார். ஒருசமயம் சூரர்களைப் போரிட்டு வதம் செய்வதுபோல் கனவு கண்டார்.

அதனை தன் தந்தையான பிரம்மாவிடம், ""தந்தையே! நான் சேனாதிபதியாக நின்று அசுரர்களை வதம் செய்வதாகக் கனவு கண்டேன்'' என்று சொன்னார்.

அதற்கு அவர், ""சனத்குமாரா, உன் கனவு பலிக்கும். ஆனால், நீ பிரம்மஞானியாக இருப்பதால் இந்தப் பிறவியில் அது இயலாத காரியம். அடுத்த பிறவியில் உனக்கு அந்தப் பாக்கியம் கிட்டும்'' என்றார்.

முருகப் பெருமானின் அவதாரத்தை முன்னிட்டு சிவனும் பார்வதியும் சனத்குமாரரைக் காண வந்தார் கள். தியானத்தில் இருந்த சனத்குமாரர் தியானம் முடிவடைந்ததும் தன்முன் சிவனும் பார்வதியும் நிற்பதைக் கண்டு வணங்கினார். அப்போது பரமசிவன், ""மகனே, உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார்.

அதற்கு சனத்குமாரர், ""நீங்கள் ஒன்றும் எனக்கு வரம் தர வேண்டாம். உங்களுக்கு வேண்டுமானால் நான் வரம் தருகிறேன், கேளுங்கள்'' என்றார்.

சற்றும் கோபம் கொள்ளாத பரமசிவன், ""நீ எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்'' என்றார்.

சனத்குமாரரும், ""உங்கள் விருப்பப்படியே உம் அருளால் மகனாகப் பிறப்பேன்'' என்றார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி, ""உம் அருளால் மகனாகப் பிறப்பேன் என்றால், என் பங்கு ஒன்றுமில்லாததுபோல் தெரிகிறதே'' என்றாள்.

""ஆம் அன்னையே. கர்ப்பவாசத்தில் தோன்றி, கீழ்முகமாகப் பிறப்பது எனக்கு அருவருப்பாக இருக்கிறது. எனவே, அருள் கூர்ந்து தங்கள் கணவரின் அருள் பார்வையால் நான் அவதரிக் கும்படி செய்யுங்கள்'' என்றார். பார்வதியும், ""சரி; உன் விருப்பம்போல் நடக்கும்'' என்று ஆசீர் வதித்தாள்.

காலம் கடந்தது. பஸ்மாசுரனைக் கொல்ல சிவபெருமான் மகாவிஷ்ணுவுடன் சென்றபோது, பார்வதி தனித்திருப்பதை அறிந்த பஸ்மாசுரன் பார்வதியைத் தேடி வந்தான். தன் கணவனைப் பிரிந்த சோகத்தில் உருகிக் கொண்டிருந்த பார்வதி, பஸ்மாசுரன் வருவதை அறிந்து அவனிடமிருந்து தப்பிக்க பொய்கையாக மாறினாள். அதுதான் சரவணப் பொய்கை என்று பெயர் பெற்றது.

மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் பஸ்மாசுரன் எரிந்து சாம்பல் ஆனதும், பரமசிவன் கயிலாயம் வரும் வழியில், பார்வதி பொய்கையாக மாறி இருப்பதைக் கண்டு, இதுதான் தக்க சமயம் என்று தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை அந்தப் பொய்கையில் விழும்படி செய்தார்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள், ஆறு குழந்தைகளாக தாமரை மலர்கள்மேல் படுத்திருந்தன. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்துப் போற்றினார் கள். இதனைக் கண்ட பார்வதி, அந்த ஆறு குழந்தைகளையும் அவர்களிடமிருந்து வாங்கி ஒன்றாக்கினாள். அந்தக் குழந்தைதான் ஆறுமுகம் கொண்ட சரவணன் என்ற முருகப் பெருமான். இவ்வாறாக சனத்குமாரர் முருகனாக அவதரித் தார். சூரபத்ம வதமும் நிகழ்ந்தது. தேவர்களும் மகிழ்ந்தனர்.


 
இந்த நிகழ்வுகள் காரணமாகத்தான் ஐப்பசி மாதம் வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. சஷ்டி திதி அன்று சூரசம் ஹார நிகழ்ச்சி திருச் செந்தூர் கடற்கரையில் மிகச் சிறப்பாக நடைபெறும். அப்போது முருக பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரத நியதிகள் உள்ளன.

தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் பிரசாதத்தை உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். மௌன விரதம் கடைப்பிடித்தால் மிகவும் சிறந்தது. மாலையில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகப் பெருமானை ஆவாகனம் செய்து பூஜித்தல் வேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்தல் சிறப்பாகும். இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங் காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது.

ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை சிவனடியார்களுக்கு அன்னமிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவுண்டு விரதத்தை முடிக்க வேண்டும். ஆறு ஆண்டுகள் முறைப் படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

கந்தசஷ்டி தொடங்கி ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியன்று விரதம் கடைப்பிடித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; உடல் வளம் பெறும்; குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்; சுபகாரியங்கள் நடக்கும்.

முருகன் திருத்தலங்களிலும் கோவில்களிலும் இந்த சஷ்டி விழா மிகவும் பிரமாதமாகக் கொண்டாடப்படுவதைக் காணலாம்.

இதில் முதலிடத்தைப் பெறுவது திருச் செந்தூர். இங்குதான் மணப்பாடு என்னுமிடத்தில் சூரசம்ஹாரம் நடந்தது என்பர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ள கடல், தன் அலைகளால் முருகப் பெருமானை வழிபடுவது போல் திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள குறுக்குத் துறை முருகன் கோவிலுக்குத் தனிச் சிறப் புகள் உண்டு. இங்கு முருகப் பெருமான் சுயம்பு மூர்த்தியாக பாறையில் உருவாகியிருக்கிறார். திருச்செந்தூரில் பாறை யின்மீது முருகன் கோவில் உள்ளதைப்போல், குறுக்குத் துறை முருகன் கோவிலும் பாறையின் மேல் உள்ளது. மேலும் கோவிலின் கிழக்குப் பகுதியில் தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இத்திருத்தலத்தை சின்ன திருச் செந்தூர் என்று சொல்வர். தவிர, இந்த மூலவர் சிலையிலிருந்துதான் கல் எடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவர் சிலை வடிக்கப்பட்டதாகவும் சொல்வர்.

ஐப்பசி மாத தீபாவளி அமாவாசைக்குப்பின் தொடர்ந்து விரதம் கடைப்பிடிக்க இயலாத வர்கள் கந்தசஷ்டி திருநாளில் விரதம் கடைப் பிடித்து, அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் பேறுகள் பெற்று சுகமுடன் வாழலாம்.

No comments:

Post a Comment