விரதமிருந்தால் மாரடைப்பு வராது!
உள்ளம் பெருங்கோவில் ஊண் உடம்பே ஆலயம்” என்பது திருமூலர் வாக்கு. ஆலயமான உடம்பை தூய்மையாக வைத்திருந்தாலே நோயற்ற வாழ வாழ்வு முடியும். தினந்தோறும் வயிறு புடைக்க உண்டு இயந்திரங்களுக்கு வேளை கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம். பட்டினியால் வாடி ஒருவன் இறப்பதற்கு முன்பாக பசியின்றி உண்டே பலபேர் இறந்து போகின்றனர். இதனை கருத்தில் கொண்டுதான் நம்முன்னோர்கள் ஒருநாள் பட்டினி இருந்து விரதங்களை கடைபிடித்தனர்.
மனித ஆரோக்கியத்திற்கு விரதம் ஒரு தலைசிறந்த மருந்தாகும். ஆம். தினமும் வயிறு நிறைய உண்டு நம் உடலை நோய்களின் கூடாரமாக மாற்றிக் கொள்வதற்கு பதிலாக விரதம் இருந்து ஆயுளை நீட்டிக்கச் செய்வது சிறந்தது.
நோன்பை அறிவுத்தும் மதங்கள்
அனைத்து மதக் கோட்பாடுகளிலும் விரதம் அனுஷ்டிப்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்து மதத்தில் பிரதோஷம், பௌர்ணமி, சஷ்டி,கார்த்திகை ஏகாதசி நாட்களில் மேற்கொள்கின்றனர். நம் முன்னோர்களை நினைத்து அமாவாசை நோன்பு கொள்வது இன்றும் நாம் காணலாம். மேலும் செவ்வாய் வெள்ளி கிழமைகளிலும் அதிக பெண்கள் வரலட்சுமி விரதமும் இருக்கின்றனர். சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு.
இதேபோல், இஸ்லாம் மதத்தில் ரம்ஜான் நோன்பு பிரசித்தி பெற்றது. இக்காலத்தில் உமிழ் நீரைக்கூட உள்ளிறக்க மாட்டார்கள். மாலை 6 மணிக்கு மேல் நோன்பு திறந்து நோன்புக் கஞ்சி அருந்துவார்கள். இது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் நோன்பாகும்.
இதுபோல், ஒவ்வொரு மதத்திலும் நோன்பை முன்னிறுத்தியே சொல்லப்பட்டுள்ளன.
விரதத்தின் பலன்கள்
விரதம் இருப்பதை சித்தர்கள் உயிரைக் காக்கும் விருந்து என்றே கூறுகின்றனர். இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் சீரான முறையில் விரதம் கடைப் பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை.
உடல் உறுப்புக்கள் தூய்மை
நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச் செயலாக அமைந்து உடலைக் காக்கிறது.
நோன்பின் போது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தூய்மையாகின்றது. முதலில் கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. அதன்பின் கிளைக்கோஜனாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரைப் பொருள்களும், புரதப் பொருள்களும் கரைந்து, உடலில் கலக்கின்றன.
உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்டவர்கள், உபவாசம் மேற்கொண்டால் உடலின் உள்ளுறுப்புகளை வீணாகச் சுற்றியிருக்கும் பகுதிகள் கரைக்கப்படுகின்றன.
இளமை பாதுகாக்கப்படும்
வயிற்றில் புளிப்பு, குடலின் செரிப்பு, திசுக்களின் எரிப்பு ஆகியவற்றில் நடுநிலைமை உருவாக்குகிறது. இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப் படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய சிந்தனைகள், நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வு நிலை, நினைவு கூறும் சக்தி அதிகமாகின்றது.
நோன்பு மேற்கொள்வதால் முதுமை தடைபடுகிறது. குடலில் ஏற்படும் புளிப்பு, அழுகல் போன்றவை நீக்கப்படுகின்றன. கண்பார்வை சீரடைகிறது. காது நன்றாக கேட்கும் தன்மையைப் பெறுகிறது. கை கால்கள் நல்ல இயக்கம் பெறுகின்றன.
மாரடைப்பு தடுக்கப்படும்
வாரம் ஒருநாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
விரதம் இருப்பதன் பயன் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் மாதம் தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களால் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
விரத்தை யார் தவிர்க்க வேண்டும்?
நோன்பு அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது. மன இறுக்கமான சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். இதனால் மனதிலுள்ள மயக்கம், குழப்பங்கள் நீங்கி உடலுக்கும், மனதுக்கும் ஒருசேர புத்துணர்வு கொடுக்கும்.
உடலில் சக்தியின்றி மெலிந்து ஊட்டச்சத்து தேவையுள்ள நிலையில் இருப்பவர்கள் விரதம் கடைபிடிக்க கூடாது. அதுபோல் குடல்புண் உண்ணவர்களும் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
விரத நாளன்று உடலில் நோயின் தாக்குதல் இருக்கக்கூடாது. ஓய்வெடுக்கும் நாளாக இருக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்கள் மற்ற உணவு வேளைகளில் நீர்ச்சத்து நிறைந்த எளிதில் சீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்.
No comments:
Post a Comment