ஒன்றே குலம் |
திருவள்ளுவர் தம் திருக்குறளில் மக்களைப் பிரித்துப் பேசாமல்-மனிதகுலம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் வகையில், ‘உலகம்’ என்ற சொல்லையே பல முறை பயன்படுத்தியுள்ளார். திருவள்ளுவர் திருக்குறளில், “உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலா தார்” (குறள்-140) என்று கூறுகிறார். இதற்கு, “உயர்ந்தவர்களுடன் பழகுவதற்கு அறியாதவர்கள், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவர்களே ஆவர்” என்று பொருள். இவ்விதம் திருக்குறளில், ‘உலகம்’ என்ற சொல்லாட்சி, வேறு சில இடங்களிலும் வருகிறது. ‘உலகம்’ என்ற சொல்லுக்கு நாம் பொதுவாக, 1.நாம் வாழும் உலகம் (அல்லது), 2.உலகில் வாழும் மக்கள், 3.பெரும்பான்மை மக்கள் என்று பொருள் கொள்கிறோம். ஆனால் தொல்காப்பியம், “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்று கூறுகிறது. இதற்கு, “உலகம் என்ற சொல் உயர்ந்தவர்களையே குறிப்பிடுகிறது” என்று பொருள். எனவே நாம் பேசும்போது, “உலகம் என்ன நினைக்கும்?” என்று சொல்லும்போது அதற்கு, “உயர்ந்தவர்கள்-சான்றோர்கள் என்ன நினைப்பார்கள்” என்று பொருள் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தோன்றிய புலவர்களிலேயே தெய்வப்புலவர் என்ற அடைமொழியோடு பேசப்படும் பெருமைக்குரிய புலவர்கள் இரண்டு பேர். ஒருவர் திருவள்ளுவர், மற்றொருவர் சேக்கிழார் பெருமான். தெய்வப்புலவரான சேக்கிழார் பெருமான் தமது சிவம் மணக்கும் பெரிய புராணத்தை, “உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன்” என்று சொல்லித் தொடங்குகிறார். இதில் ‘உலகம்’ என்ற சொல் வருவது கவனிக்கத்தக்கது. கவிஞர்களுக்கெல்லாம் சக்கரவர்த்தியாக விளங்குபவர், சக்கரவர்த்தி திருமகனைப் பாடிய கம்பநாட்டாழ்வார். அவர் தம் இராமாயணக் காவியத்தை, “உலகம் யாவையும் தாமுளவாக்கலும்” என்று சொல்லியே தொடங்குகிறார். அவர் காவியத்தை ‘உலகம்’ என்ற சொல்லுடன் தொடங்குவதைக் கவனியுங்கள். “மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று, ஆனை கட்டிப் போரடித்த அழகான தென்மதுரை” யில் வாழ்ந்த பெரும்புலவர் நக்கீரர். அவர் “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ” என்று, சிவப்பரம்பொருள் இயற்றிய பாட்டிலும் குற்றம் கண்டு புலவர் அவையில், “நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே” என்று பேசியவர். அத்தகைய புலவர் அருவி போன்ற தமிழ்நடையிலே இயற்றிய தீஞ்சுவை நூல் திருமுருகாற்றுப்படை. திருமுருகாற்றுப்படையில்தான் முதன் முதலில் ஆறுபடை வீடுகள் பற்றிய செய்தி இடம் பெற்றிருக்கிறது. அறுபடை கொண்ட திருமுருகனிடம் நம்மை ஆற்றுப்படுத்துகிற திருமுருகாற்றுப் படையை அவர் எப்படி தொடங்குகிறார் தெரியுமா? “உலகம் உவப்ப” என்று சொல்லியே தொடங்குகிறார். பெரிய புராணம், கம்பராமாயணம், திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்களில், ‘உலகம்’ என்ற சொல், நூலின் தொடக்கத்திலேயே இடம் பெற்றிருக்கிறது. ஆனால் திருக்குறளில் தொடக்கம், ‘உலகம்’ என்று இல்லையென்றாலும், திருக்குறளின் முதல் குறள், “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” என்பதில், ‘உலகு’ என்ற சொல் இடம் பெற்றுவிடுகிறது. வீரமாமுனிவர் இயற்றியது தேம்பாவணி நூல். அந்த நூலை அவர், “சீரிய உலகம் மூன்றும்” என்று கூறித் தொடங்குகிறார். உமறுப்புலவர் இயற்றியது சீறாப்புராணம். அந்த நூலை அவர், “திருவினும் திருவாய் உலகம்” என்று கூறித் தொடங்குகிறார். மனிதகுலம் முழுவதும் ஒன்று; எல்லா உலகங்களுக்கும் ஆதாரமாக இருந்து இயக்கி வரும் இறைவன் ஒருவனே; நல்லதையே நினைத்து, நல்லதையே செய்து வாழும் மனிதனுக்கு மரணத்தைக் கண்டு பயப்படும் நிலையே வராது; அத்தகையவன் உடலை உகுத்த பிறகும் நற்கதியே பெறுவான். இந்த உண்மையை, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், நன்றே நினைமின் நமனிலை நாளுமே” என்று, திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிட்டார். சங்ககாலப் புலவர் ஒருவர், அவரது பெயர் கணியன் பூங்குன்றனார் என்பது. அவர், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சொல்லி உலகம் முழுவதையுமே அரவணைத்துக் கொண்டார். “பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே! பகைவனுக்கருள்வாய்!” என்று மகாகவி பாரதி பாடினார். பகைவனுக்கும் அருளும் பெருமனம் படைத்த சான்றோர் பெருமக்கள், இந்தப் பூமியிலே எத்தனை எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். நல்லவரிடம் நல்ல விதமாக நடந்து கொள்வது; கெட்டவரிடம் கெட்டவிதமாக நடந்துகொள்வது-இதைத்தான் நாம் சாதாரணமாக உலகில் பார்க்கிறோம், செய்கிறோம். இப்படி நல்லவரிடம் நல்லவிதமாகவும், கெட்டவரிடம் கெட்ட விதமாகவும் நடந்துகொள்வதில் பெருஞ்சிறப்பு ஒன்றுமில்லை. அப்படியானால் எது பெருஞ்சிறப்பு? நல்லவரிடம் நல்லவிதமாக நடந்து கொள்வது போலவே, கெட்டவரிடமும் பகைவரிடமும் கூட நாம் நல்ல விதமாக நடந்து கொள்ளுவோமானால், அதுதான் பெருஞ் சிறப்புக்குரியது. கொடியவனையும் பகைவனையும் மன்னித்து மறந்து, அவர்களுக்கும் நலம் புரியும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்கிறான். “ஸமத்வம் யோக உச்யதே-சமத்துவ நிலையே யோகம் என்று சொல்லப்படுகிறது” என்று பகவத் கீதை கூறுகிறது. “ஒன்றாகக் காண்பதே காட்சி” என்று, அறிவிற் சிறந்த அவ்வையார் கூறினார். “ஒன்றாகக் காண்பது ஞானம், பலவாகக் காண்பது அஞ்ஞானம்” என்றார் பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணர். “உலகம் முழுவதும் உன்னுடையதுதான்; எல்லாரும் உனக்குச் சொந்தமானவர்கள்தான்; எவரிடமும் குற்றம் காணாதே” என்பது, நம் அன்னை ஸ்ரீசாரதாதேவியின் அருள் உபதேசமாகும். ஆதிசங்கரர் அருளிய ஓர் அற்புதமான பிரார்த்தனை சுலோகம் இது: மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மகேச்வர: | பாந்தவா: சிவபக்தாஸ் ச ஸ்வதேசோ புவனத்ரயம்: || பொருள்: “பார்வதிதேவியே என் அன்னை; மகேஸ்வரரான சிவபெருமானே என் தந்தை; சிவபக்தர்கள் எல்லாரும் என் உறவினர்களே; மூன்று உலகமுமே எனக்குச் சொந்தமான நாடு” என்று, ஆதிசங்கரர் தம் ‘அன்னபூர்ணா ஸ்தோத்திரம்’ என்ற துதியில் கூறியுள்ளார். சாதிவெறி, மதவெறி என்றெல்லாம் உள்ள குறுகிய எல்லைகளைக் கடந்து-நாம் உயர்ந்து நிற்க வேண்டும். இதுவே அருளாளர்கள் காட்டிய அறநெறியாகும். |
No comments:
Post a Comment