வேதம் என்றால் அறிவு என்று பொருள். அறிவின் உறைவிடம் இறைவனாவார். இறைவனிடமிருந்து நாத வடிவில் தோன்றிய அறிவை ரிஷிகள் மன ஒருமைப்பாட்டுடன் தரிசித்தனர் அல்லது கேட்டனர். அதை அவர்கள் சீடர்களுக்கு நல்கினர். இவ்வாறு பரமாத்மாவிடமிருந்து தோன்றியதும், ரிஷிகள் தரிசித்ததுமான சனாதன உண்மைகளையே வேதம் என்று சொல்கிறோம். இறைவனிடமிருந்து கேட்டதாலும், வார்த்தைகள் மூலம் தரிசித்ததாலும் வேதத்தை சுருதி என்றும் சொல்கிறோம்.
இறைவன் மற்றும் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட எல்லா சனாதன உண்மைகளும் வேதங்களில் அடங்கி இருக்கின்றன. அவை ஏதோ ஒரு மனிதன் படைத்ததல்ல. பரமாத்மாவிலிருந்து தோன்றிய நிலையான சத்தியங்களாகும். அதனால் வேதத்தை "அபௌருஷேயம்" என்றும் சொல்வர். இந்த வேதங்களே இந்துக்களின் முடிவான பிரமாணம். சனாதன தர்மத்தில் எல்லா சாஸ்திரங்களுக்கும், வித்தைகளுக்கும் அடிப்படையாகத் திகழ்வது வேதமே.
வேத உண்மைகள் சகல உலகங்களுக்கும் நன்மையைத் தருபவை. ஆன்மிகமான, பௌதிகமான உயர்வையே வேதம் குறிப்பிடுகிறது. அங்கே பிரிவினைக்கு இடமில்லை. உலகம் முழுவதும் அமைதியையும், சமாதானத்தையும் அளிக்கும் தத்துவங்களே வேதத்திலுள்ளன. சத்தியம், தர்மம், தவம், கருணை, அன்பு, தியாகம், அஹிம்சை போன்ற நிலையான, உலகியல் நற்பண்புகளை வேதம் போதிப்பதால்தான் அவற்றை இந்துக்கள் பரம பவித்திரமாகவும், பரம பிரமாணமாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறனர்.
வேதங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமானவையாக இருப்பதால் வேதத்தின் முக்கியமான கருத்துக்களை உபநிஷதங்கள் மூலம் புரிந்துகொள்ள முடியும். பகவத்கீதை உபநிஷதங்களின் சாரம் முழுவதையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன் சாதாரண மனிதர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் கதைகள் மற்றும் வரலாற்று நிகழ்ச்சிகளின் அடிப்படையில் வேத தத்துவங்களை, இதிகாச, புராணங்களின் மூலம் ரிஷிகள் வெளிப்படுத்தியுள்ளனர்
No comments:
Post a Comment