வால்மீகி
இருண்ட காடு. யாரும் தனிவழியே போவதற்கு பயம் கொள்வர். இரண்டு பெரிய நகரங்களுக்கு நடுவில் இந்த காடு இருந்ததால் பலருக்கு இதன் வழியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். எல்லோரும் கூட்டம் கூட்டமாக பாதுகாப்புடன் தான் இதன் வழியே செல்வர்.
வணிகர் கூட்டம் அடிக்கடி இந்த வழியே செல்வதால் வழிப்பறி செய்யும் ஒரு கூட்டம் இந்த காட்டில் கூடாரம் இட்டு வாழ ஆரம்பித்து விட்டது. எத்தனைப் பாதுகாப்புடன் வந்தால் தான் என்ன, இந்த கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டால் அவ்வளவுதான். தலை தப்புவது தம்பிரான் புண்ணியம் என்று ஆகிவிடும்.அந்த கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவன் ஒருவன் இருந்தான். பெரிய குடும்பி. அவன் கொள்ளையடிப்பதில் மிக சமர்த்தன் என்பதால் பலர் அவனை அண்டி வாழ்ந்தனர்.
சில நேரம் அவன் தனியாகக் கூட வழிப்பறி செய்ய கிளம்பிவிடுவான். என்ன செய்ய? பெரிய குடும்பம்…காப்பாற்ற வேண்டாமா? மனைவியர்களும் குழந்தைகளும் உறவுகளும் அவன் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளனர்? அவனுக்காக தன் உயிரையும் கொடுக்க முன்வருவார்களே? அவர்களைக் காப்பது தன் கடமையல்லவா? என்று அடிக்கடி எண்ணிக்கொள்வான் அந்த தலைவன்.
ஒரு தடவை அப்படி அவன் தனியே கொள்ளையடிக்கச் சென்றபோது அவனிடம் மாட்டிக்கொண்டார் ஒரு முனிவர். கையில் ஒரு தம்புரா வைத்துக்கொண்டும் ‘நாராயண, நாராயண‘ என்று பாடிக்கொண்டும் அந்த முனிவர் வந்து கொண்டிருந்தார். இவன் அவர் எதிரில் போய் எமன் போல் நின்றதும் அவர் நடுநடுங்கி இவனைப் பார்த்து ‘யாரப்பா நீ. உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் யாராய் இருந்தால் உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும்‘ என்றான்.
முனிவருக்கு அவன் கொள்ளைக்காரன் என்பது அப்போதுதான் புரிந்தது. ‘அப்பா. நீ செய்வது மகா பாவம் அல்லவா? இப்படி வருபவர் செல்பவர்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்தால் யமன் உன் உயிரைக் கொள்ளையடித்துச் செல்ல வரும் போது உனக்கு நரகம் தானே கிடைக்கும். இது பாவம்‘ என்று பலவாறாக அறிவுரை சொன்னார் அந்த முனிவர். கேட்பானா இவன். ‘தேவையில்லாமல் பேசி என் நேரத்தை வீணாக்காதே. என் மனைவி மக்கள் உறவு எல்லோரும் இன்று நான் என்ன கொண்டு வரப்போகிறேன் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பர். நீர் சீக்கிரம் உம்மிடம் இருப்பதைக் கொடுத்தால் உயிர் பிழைக்கலாம். இல்லை இங்கேயே செத்துப் போக உம்மை தயார் செய்து கொள்ளும்‘ என்று கடூரமாகச் சொன்னான்.
இதற்குள் முனிவருக்கு கொஞ்சம் தைரியம் வந்து விட்டது. இவன் நின்று பேசுகிறான். பேசிப் பேசி இவன் மனதை நல்வழிக்கு திருப்பிவிடலாம் என்று அவன் மேல் கருணை கொண்டு மேலும் பேச ஆரம்பித்தார்.
‘அப்பா…நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குத் பதில் சொன்ன பிறகு என்னிடம் இருப்பதை எல்லாம் நீ கொள்ளைக்கொண்டு போகலாம்‘
‘சீக்கிரம் கேட்டுத் தொலையும்‘
‘ நீ யாருக்காக இந்த கொடுமையான கொள்ளையும் கொலையும் செய்கிறாய்? ‘
‘வேறு யாருக்காக. என் மனைவி மக்கள் இவர்களுக்காகத்தான். அவர்கள் தானே என் எல்லா சுக துக்கங்களிலும் என்னுடன் இருக்கிறார்கள். எனக்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள்.’
‘உன் எல்லா சுகங்களிலும் பங்கு கொள்கிறார்கள். சரி. உனக்காக தங்கள் உயிரைத்தருவதாக எப்போதாவது சொல்லி இருக்கிறார்களா? இல்லை உன் பாவங்களில் தான் அவர்கள் பங்கேற்பார்களா? சொல்.’
‘என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். அவர்கள் வாய் திறந்து எனக்காக உயிரைக் கொடுப்பதாய் சொன்னதில்லைதான். ஆனால் என் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு கொஞ்சம் நஞ்சம் இல்லை. முற்றும் துறந்தவரான உமக்கு அதெல்லாம் புரியாது‘.
‘அது இருக்கட்டும் அப்பா. உன் பாவங்களில் அவர்கள் பங்கு கொள்வார்களா? அதனை முதலில் கேட்டுப்பார்‘.
‘அதிலென்ன சந்தேகம். நான் கொள்ளையடித்துக் கொண்டு வருவதைப் பங்கு கொள்ளும் அவர்கள் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள்‘.
‘அதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டாயா?’
‘இல்லை. அதற்குத் தேவையும் இல்லை‘.
‘அது அவசியம் தேவை. அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்கிறேன் நான். நீ அதை இல்லையென்று நிரூபிக்க முடியுமா?’
‘ஆகா முனிவரே! தப்பித்துப் போக முயல்கிறீரா? இதெல்லாம் என்னிடம் முடியாது‘.
‘இல்லையப்பா. நீ வேண்டுமானால் என்னைக் கட்டிப் போட்டு விட்டுப் போ. போய் அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும்.’
கொள்ளையர் தலைவன் யோசித்துப் பார்த்தான். அந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து அந்த முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான்.
திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் அவன். ஓடி வந்தவன் முனிவரின் காலில் விழுந்து ‘சுவாமி, நீங்கள் சொன்னது சரிதான்‘ என்று கண்கலங்கிய படியே முனிவரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான்.
‘என்னப்பா நடந்தது‘.
‘சுவாமி. நீங்கள் சொன்ன படி நான் போய் என் மனைவியர், குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர் எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் ‘எங்களை காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை‘ என்று கூறிவிட்டார்கள்‘
‘அவர்கள் சொன்னதில் தவறில்லையே. மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல் வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை‘.
‘ஆமாம் சுவாமி. அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும்‘
‘நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே‘
‘சுவாமி. என்ன நாமம் அது?’
‘ராம நாமம்‘
‘என் வாயில் நுழையவில்லையே சுவாமி‘
‘கவலையில்லை. இதோ இங்கிருக்கும் மரத்தின் பெயர் என்ன?’
‘இதுவா சுவாமி. இது மரா மரம்‘.
‘நீ இந்த மரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. அது போதும்‘.
‘ஆகட்டும் சுவாமி. நீங்கள் யார் என்று இன்னும் சொல்லவில்லையே‘
‘என் பெயர் நாரதன். திரிலோக சஞ்சாரி என்றும் சொல்வார்கள்‘.
‘நல்லது சுவாமி. நீங்கள் சொன்ன படியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்‘ என்று வணங்கி நின்றான்.
நாரதரும் தன் வழியே சென்றார்.
அவர் போனபின் அந்த கொள்ளையர் தலைவன் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து ‘மரா மரா மரா‘ என்று ஜபிக்க ஆரம்பித்தான். அது ‘ராம ராம ராம‘ என்று ஒலித்தது.
நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. அந்த ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான்.அவர் தவம் முடிந்த பின் புற்றிலிருந்து வெளியே வந்தார். புற்றிலிருந்து வந்ததால் ‘வால்மீகி‘ என்று அழைக்கப் பட்டார். பின்னர் இராமாயணம் எழுதி அழியா புகழ் பெற்றார் அந்த கொள்ளையர் தலைவனாய் இருந்து நாரதரின் கருணையால் நல்வழியில் திருப்பி விடப்பட்ட வால்மீகி முனிவர்.
No comments:
Post a Comment