Saturday, February 4, 2012

சத்குரு தியாகராஜ சுவாமிகளின் கதை

இசை மாமேதை, சத்குரு தியாகராஜ சுவாமிகள் மிகச்சிறந்த ராமபக்தர். ஒருநாள், அவரது கனவில் தோன்றிய ராமபிரான், ""தியாகராஜரே! உமக்கு இன்னும் ஒரு பிறவி இருக்கிறது?'' என்றார்.
அதிர்ந்துவிட்டார் தியாகராஜர்.
""இன்னுமா பிறவி? ஏனப்பா, என்னை இப்படி சோதிக்க நினைக்கிறாய். விட்டு விடு! உன்னோடு ஐக்கியமாக வேண்டும் என்பதே என் நோக்கம்,'' என கண்ணீர் வடித்தார்.
பக்தன் கண்ணீர் வடித்தால் ராமனுக்குப் பொறுக்குமா?
""சரி..சரி..ஒரு வாய்ப்பு தருகிறேன், பிடித்துக் கொள்வீரா?''
""உடனே சொல் ராமா!''
""இன்றே சந்நியாசம் ஏற்க வேண்டும். பிறவாநிலை தந்துவிடுவேன்,''.
சுவாமிகள் மகிழ்ந்தார். மறுநாள் காலை சந்நியாசம் ஏற்றார். கீர்த்தனை ஒன்றைப் பாடியபடியே, சீடர்களை அழைத்தார்.
""இன்று நான் முக்தி பெறப்போகிறேன்,'' என்றார். சீடர்கள் அதிர்ந்தார்கள்.
தகவலைமுக்கியமானவர்களுக்குச் சொல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தார்கள்.
குறிப்பிட்ட நேரம் வந்தது. தீபாராதனை காட்டச் சொன்னார். ""ஜானகீ காந்த
ஸ்மரணே!'' (ஜானகியின் மணாளனான ராமனை வணங்குகிறேன்) என்றபடியே கண் மூடினார். ராமனின் பாதார விந்தங்களில் (திருவடித்தாமரை) சரணடைந்தார்.
மகான்களை அழைத்துச்செல்ல தெய்வமே நேரில் வருகிறது. நாமும் ராமநாமம் சொல்லியபடியே காத்திருப் போம், பிறவாநிலை பெற்று பரமானந்தம் பெறப்போகும் நன்னாளுக்காக! 

No comments:

Post a Comment